இந்தியாவின் பிடியில் உலக கிரிக்கெட் :ஐ.சி.சி., தலைவராகிறார் சீனிவாசன்...
இந்தியாவின் பிடியில் உலக கிரிக்கெட் :ஐ.சி.சி., தலைவராகிறார் சீனிவாசன்
துபாய்:ஐ.சி.சி., கூட்டத்தில் பெரும்பாலான தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேறிய நிலையில், இந்தியாவின் பிடியில் உலக கிரிக்கெட் வருகிறது. ஐ.சி.சி., புதிய தலைவராக, சீனிவாசன் தேர்வு செய்யப்பட உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,), இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய ‘டாப்–3’ நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் வகையில், புதிய பரிந்துரைகள் உருவாக்கப்பட்டன. இதன்படி, லாபத்தில் இந்த மூன்று நாடுகளுக்கும் அதிக பங்கு தரப்படும். மற்றநாடுகளுக்கு, அடுத்த 8 ஆண்டுகளுக்கு வருமானம் குறைந்துவிடும். தவிர, தலைவர் பதவிக்கு ‘டாப்–3’ நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டுமே வரமுடியும்.
இது ஐ.சி.சி.யை., அபகரிக்கும் செயல் என, பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று துபாயில் துவங்கிய ஐ.சி.சி., கூட்டத்தில் புதிய விதிகள் தாக்கல் செய்யப்பட்டன.
அதிகரித்த எதிர்ப்பு:
இது நிறைவேற 10ல் 7 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. ஆனால், துவக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்த தென் ஆப்ரிக்காவுடன், ஆசியாவின் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என, மொத்தம் 4 நாடுகள் இணைந்து கொண்டன. இதனால், சிக்கல் ஏற்பட்டது. சீனிவாசன் தலைவர்:
இருப்பினும், ஆறு மணி நேர விவாதத்துக்குப் பின். பெரும்பாலான தீர்மானங்கள் ஒருமனதாக ஏற்கப்பட்டன. அதேநேரம், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள் ஐ.சி.சி.,யை கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு அதிக எதிர்ப்பு காணப்பட்டது. இதன் மீதான ஓட்டெடுப்பு அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஐ.சி.சி.,க்கு வலிமையான தலைமை தேவை என்பதால், கிரிக்கெட்டை வழிநடத்தும் பொறுப்பு பி.சி.சி.ஐ.,க்கு தரப்பட்டது. இதன் அடிப்படையில், ஐ.சி.சி., யின் புதிய தலைவராக, பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் தேர்வு செய்யப்பட உள்ளார். இவர், 2016 வரை இப்பதவியில் இருப்பார் என்று தெரிகிறது.