தொலைந்து போனவன் நீங்கள் இரவு பயணத்துக்கு ஆயத்தமாக இருந்தபோது...
தொலைந்து போனவன்
நீங்கள் இரவு பயணத்துக்கு
ஆயத்தமாக இருந்தபோது
என்தலையில் பகலைச் சுமந்து
இழந்த ஏதோ ஒன்றைத் தேடினேன்...
எதைத் தொலைத்தேன்
ஏதோவொன்றைத் தொலைத்தேன்
காரிகையை காலிகள் கடத்திச் செல்லுகையில்
கத்திக்குப் பயந்து கத்தாமலிருந்த
என் வெற்று வீராப்பு ஆண்மைத் தனத்தையோ ............
-சாலையில் அடிபட்டு
சாகக் கிடப்பவனை
கண்டும் காணாமல் போன
என் கோமாளித் தனத்தையோ.....
தேர்தலுக்கு முன் வீறாப்பாய்
வாக்களிக்க கூடாதென்றெண்ணி
கள்ளனுக்கே மீண்டும் வாக்குப் போட்ட
என் ஏமாளித் தனத்தையோ.....
இப்படியே ஏராளமாய் -
எதைத் தொலைத்தேன்
ஏதோவொன்றை
எப்போதும் தொலைத்தேன்
இறுதியில் நானும் தொலைந்தேன் .
சுசீந்திரன்