எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

யாராவது என் பின்னால் வரவேண்டுமென்று ஆசை. எழுந்து நடந்தேன்....

யாராவது என் பின்னால்
வரவேண்டுமென்று ஆசை.

எழுந்து நடந்தேன்.

திரும்பிப் பார்த்தால்
என்
பின்னால் யாருமில்லை.

முகம் திருப்பி
முன்னால் பார்த்ததும்
திடுக்கிட்டேன்.

எனக்கு முன்னே
என் நிழல்.

நிழலின் பின்னால்
நடக்கிறேன் நான்.

கோபத்தில்
நிழலொடு சண்டையிட்டேன்.
நான் வெளிச்சம்.
நீயென் இருட்டு.
என் பின்னே வா
நிழல் சிரித்துக் கொண்டது.

நான் நிஜம்.
நீயென் பொய்.
என் பின்னே வா!
நிழல் சிரித்துக் கொண்டது.

நீ என்
பாதங்களைக் கழுவுகிறக்
கறுப்புத் தண்ணீர்.
என்பின்னே வா!
நிழல் சிரித்துக் கொண்டது.

என் கோபம் தலைக்கேறியது.
நீ என்
கால்கள் துப்பிய எச்சில்
என் பின்னே வா!
நிழல் மீண்டும் சிரித்துக் கொண்டது.

சண்டையில்
நேரம் கரைந்துபோது
நிழல்
என் பின்னாலிருந்தது.

இப்போதாவது புரிந்ததா
அடிமை நாயே...

உன்
கழுத்துச் சங்கிலி
என்
கால்விரல்களிலென்று?

நிழல் கத்திற்று.

முட்டாளே!
நான் சூரியன் பின்னால்
போய்க் கொண்டிருக்கிறேன்.

பதிவு : ப்ரியஜோஸ்
நாள் : 17-Jun-15, 11:25 am

மேலே