கடந்த 24-06-2015 அன்று கவியரசு கண்ணதாசன் அவர்களின் 89வது...
கடந்த 24-06-2015 அன்று கவியரசு கண்ணதாசன் அவர்களின் 89வது பிறந்த தினத்தில் இல்லத்தில் அவரைப் பற்றிய கவிதை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது.
அங்கே 20 பேர்களுக்கும் மேற்பட்டோருக்கு "கவியரசு கண்ணதாசன் விருது" வழங்கப்பட்டது. எனக்கும் கிடைக்கப்பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தொடர்ந்து எனக்கு விருதுகள் வழங்கி எழுத என்னை ஊக்கப் படுத்திக் கொண்டிருக்கும் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும், வாழ்த்துக்களை வழங்கி ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் எழுத்து தோழமைகளுக்கும் இங்கே எழுத இடமளித்திருக்கும் எழுத்து நிர்வாகத்தினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமீபத்தில் சிறுகூடல் பட்டியில் வெளியான புத்தகத்திலிருந்து கண்ணதாசன் அவர்களின் வைரவரிகளில் சில....
கண்ணதாசன் அவர்களின் செப்பு மொழிகள்....
உலகம் பூராவிலும் இருக்கும் தமிழர்களை விட, உலகம் முழுவதிலும் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ள மண்டை ஓடுகள் அதிகம்..!!
நிறைய கவிஞர்கள் நாட்டுக்குத் தேவை. இலக்கியத்துக்கு அல்ல..!!
தாசியின் சருமத்தில் இருக்கும் பளபளப்பு அரசியல்வாதியின் நாக்கில் இருக்கிறது...!!
நாத்திகன் வாழ்நாள் முழுவதும் கடவுளைத் தோற்கடிக்கிறான். கடைசியாக, கடவுள் நாத்திகனைத் தோற்கடிக்கிறார், அதன் பெயர் மரணம்..!!
காதலித்து பைத்தியக்காரனாவதை விடப் பைத்தியக்காரனான பின் காதலிப்பது நல்லது...!!
சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது; பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது...!!
மக்கள் ஒரே ஒரு அய்யோக்கியனை சமாளிப்பதற்குப் பெயர் சர்வாதிகாரம்..! ஒவ்வொரு அய்யோக்கியனையும் சமாளிப்பதற்குப் பெயர் ஜனநாயகம்...!!
அறிஞர்கள் அகப்பட்டால் விடமாட்டார்கள்.. திருடர்கள் விட்டால் அகப்படமாட்டார்கள்...!!
கோவணத்தை இழந்தவன் கல்லடி வாங்குவான்; கொள்கையை இழந்தவன் மந்திரியாவான்...!!
பாலில் இருந்து தயிரையும், தயிரில் இருந்து வெண்ணையையும், வெண்ணையிலிருந்து நெய்யையும் கண்டெடுப்பவனுக்குப் பெயர், வியாபாரி. நெய்யில் இருந்து வெண்ணையும், வெண்ணையிலிருந்து தயிரையும், தயிரிலிருந்து பாலையும் உண்டாக்குகிறவனுக்குப் பெயர் அரசியல்வாதி ! அந்த பாலை கறந்த மடியினுள்ளே திரும்ப அனுப்புகிரவனுக்குப் பெயர் தலைவன்...!!
செப்பு மொழிகள் இன்னும் வரும்.....