பார்வையற்றவனின் இரக்கம் ---------------------------------------------------- ஒரு கவிஞன் அந்தப் பார்வையற்றவர்களுக்கு...
பார்வையற்றவனின் இரக்கம்
----------------------------------------------------
ஒரு கவிஞன் அந்தப் பார்வையற்றவர்களுக்கு வாசிக்கிறான்.
அது மிகக் கடினமென அவன் சந்தேகம் கொள்ளவில்லை.
அவன் குரல் உடைகிறது.
அவன் கைகள் நடுங்குகின்றன.
இருளின் சோதனைக்கு இங்கு ஒவ்வொரு வாக்கியமும்
உள்ளாகிறது என்று அவன் உணருகிறான்.
ஒளிகளோ வண்ணங்களோ இன்றி
அது தன்னைக் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
அவனது கவிதைகளில் நட்சத்திரங்களுக்கு,
விடிவெள்ளிக்கு, வானவில்லுக்கு, மேகங்களுக்கு,
நியான் விளக்குகளுக்கு, சந்திரனுக்கு,
நீருக்குள் இப்போது வரையிலும்
ஒரே வெள்ளியாக இருந்த மீனுக்கு,
வானத்தில் நிசப்த உயரத்திலிருக்கும் கழுகுக்கு
அனைத்திற்கும் ஆபத்து மிகுந்த சாகசம்தான்.
அவன் வாசிக்கிறான்-நிறுத்த வெகுவாகத் தாமதமாகிவிட்டது என்பதாலும்-
பச்சைப் புல்தரையில் மஞ்சள் மேலாடையிலிருக்கும்
அந்தச் சிறுவனைப் பற்றி,
பள்ளத்தாக்குகளில் சுலபமாகத் தெரிகிற செந்நிறக் கூரைகளைப் பற்றி,
விளையாட்டுக்காரர்களின் சட்டைகளின் பதற்றமான எண்களைப் பற்றி,
வெடித்துத் திறந்த வாசலின் அம்மண அந்நியன் பற்றி.
கதீட்ரல்களின் கூரைப் புனிதர்களையும்,
ரயில் ஜன்னல்களில் விடைபெறும் கையசைப்புகளையும்,
பூதக்கண்ணாடி வில்லையையும், இரத்தினக் கல்லின் ஒளிக்கீற்றையும்,
வீடியோ திரைகளையும், கண்ணாடிகளையும்,
முகங்கள் நிறைந்த ஆல்பங்களையும்
அவன் தாண்டிப்போக விரும்புவான்-அதொரு தேர்வல்ல என்றாலும்கூட.
என்றாலும் பெரிது பார்வையற்றவர்களின் இரக்கம்,
பெரிது அவர்களது கருணையும், பெருந்தன்மையும்.
அவர்கள் செவிசாய்க்கிறார்கள், புன்னகைக்கிறார்கள், கை தட்டுகிறார்கள்,
தலைகீழாகப் பிடித்துக்கொண்ட புத்தகத்துடன்
ஒருவன் அணுகவும் செய்கிறான்,
பார்வைக்குத் தெரியாத கையெழுத்தை வாங்கும் பொருட்டு.
-- எழுதியவர் : போலாந்து நாட்டின் கவிஞர், 1996 இல் நோபல் பரிசு பெற்றவர் விஸ்லாவா சிம்போர்கா.
இவரது கவிதைகள் உலகமொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தற்போது வட அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
மேற்கண்ட சிம்போர்கா-வின் கவிதையை தமிழில் மொழிப்பெயர்த்தவர் : சுந்தர ராமசாமி.
நன்றி : காலச்சுவடு.