எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எங்கே செல்கிறது உலகு? இன்னும் சிறிது நேரம் நீடித்திருக்கலாம்...

எங்கே செல்கிறது உலகு?

இன்னும் சிறிது நேரம் நீடித்திருக்கலாம் இந்த இன்பமயமான பயணம். இப்பொழுது தான் முதன் முதலாய் தோன்றியது நினைவில் இந்த வார்த்தைகள். இதுவரை ஏனோ நரக வேதனையாய் தான் நினைத்திருக்கிறேன் இந்த பயணத்தை என்று எண்ணி வியக்கிறாள் வாசுகி. ஆம். சென்னையின் பரபரப்பில் அதிகாலைப் பேருந்தில் பயணிப்பது என்றால் சும்மாவா! அதுவும் ரெக்கை கட்டி பறக்கும் அந்த 9 மணி முதல் 10 மணி வரையான நேரங்களில் பேருந்தின் பயணம் சைக்கிளை விட மெதுவாகத் தான். இதை நான் மட்டுமல்ல.சிங்கார சென்னையில் உலா வரும் கோடி மக்களூம் அறிந்ததே. அன்பு காயத்திற்கு மருந்து.சமயத்தில் அதுவே காயம் எனலாம்.இதை சமீபத்தில் வந்து போன அனுபவங்கள் தான் ஞாபகபடுத்திவிட்டுச் செல்கின்றன.நான் பாத்திமாவிற்கு அதிக உறவெல்லாம் இல்லை.எங்களுக்குள்ளான பழக்கம் இந்த ஆறு மாதம் தான். பார்த்தவுடன் பிடிக்கும் முகம் தான் அவளுக்கு.எனக்கு அவள் மனமுகமும் பிடித்திருந்தது. வேலைக் களைப்பில் நொந்து அலுவலக மேலாளரிடம் கணக்கில்லாமல் திட்டு வாங்கி கனத்த இதயத்திற்கு கணநேர பரிசம் தந்தது அவளின் அன்பு. ஓரு பெண்ணாய் இன்னொரு பெண்ணை வியந்ததும் அன்று தான். காலையில் கண்விழித்து கிளம்பி அண்ணாசாலையில் உறைந்த என் அலுவலகத்தை அடைய அன்றும் வழக்கம் போல் பேருந்தில் அமர்ந்தேன். சற்று நேரத்தில் ஈ மொய்த்த பணடமாய் மூச்சுத் திணற நிறைந்தது அந்த மாநகரப் பேருந்து. மிதக்கும் படகாய் தான் நீந்தியது அந்தபோக்குவரத்து நெரிசலில்.துடுப்பு உடைந்தது போல் அவ்வப்போது நின்று விடுவதும் உண்டு.அந்த கூட்ட நெரிசலில் எனது இருக்கையின் அருகில் வந்து நின்றாள் அந்த பர்தா அணிந்த பெண்.எப்படியோ எனது அருகில் உட்கார இடம் பிடித்து விட்டாள் அடுத்தடுத்த பேருந்து நிறுத்தத்தில். நான் தெரியாதவர்களிடம் அதிகம் என்ன முற்றிலும் பேசிக் கொள்வதே இல்லை. அவளிடமும் தான்.சிறிது நேரத்தில் தான் ஒரு வயதான பெண்மணி தடுமாறிக் கொண் ஏற இவள் எழுந்து இருக்கை தந்தாள்.நல்ல பண்பு தான்.என்னிடம் அந்த பழக்கம் இல்லை.அந்த முதியவளின் பர்ஸை அறுத்து பணம் பறிக்கப்பட்டிருக்கிறது.அவள் காட்டியதை நானும் கண்டேன். அவளூக்கு டிக்கெட் எடுத்து பயணிக்க வைத்தாள் அந்த பர்தா பெண்.அவள் இறங்கும் வழி,இடம் தொலைவைக் கேட்டறிந்தாள்.அவள் சாப்பிட்டுச் செல்வதற்கும் சிறிது பணம் தந்தாள்.முதியவள் நேற்று இரவிலிருந்து பயணம் செய்வதாகவும் அண்ணா சாலையில் உள்ள தன் மகன் வீட்டிற்குச் செல்வதாகவும் கூறினாள். அவள் கையிலிருக்கும் பழங்களூம்,பைகளூம் அதை ஆமோதித்தன. பொதுநலம் மறந்து சுயநலச் சாயம் பூசிக்கொண்ட உலகிற்கு இது புதுமை தான்.எனக்கும் தான். எனக்குப் பிடித்திருந்தது அவளின் இந்த பண்பு. அந்த முதியவளை இறக்கி விட்டு என்னருகில் வந்து மீண்டும் அமர்ந்தாள்.பர்தாவை விலக்கி பேசியவளிடம் நானும் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.அவள் பெயர் பாத்திமா.அந்த முதியவளை நினைத்து சிறிது வருத்தப்பட்டாள். இவள் என் பேருந்து தோழியாகி விட்டாள் இப்போது.கல்லூரியில் கூட கிடைக்காத நட்பு இவளிடம் கிடைத்த உணர்வு எனக்கு கிட்டியது. இப்பொழுதெல்லாம் மூச்சுத் திணறும் பேருந்து பயணம் சலிப்பதில்லை.உண்மையான அன்புடைய இவள் என்னுடன் பயணிப்பதால். அன்றும் அப்படித்தான் எங்கள் இருக்கையின் அருகில் ஓரு பள்ளிச்சிறுமி வந்து நின்றாள் தனியாக.அந்தச் சிறுமி இரண்டு அல்லது மூன்று படிக்கலாம்.அவள் புத்தகப்பை அவளை விடப் பெரிதாய் இருந்தது. அவளை அணைத்து தனது மடியில் அமர்த்தினாள் பாத்திமா.சிறுமியின் புத்தகப்பையும் தானே வாங்கிச் சுமந்தாள். பேருந்து குலுங்கும் போதெல்லாம் பத்திரமாய் பிடித்துக் கொண்டாள் அந்தச் சிறுமியை.சாலையைக் கடக்கும் விதிமுறைகளைச் சொல்லிக் கொடுத்தாள்.அந்தச் சிறுமியின் நிறுத்தம் வந்தது.அவளை கீழே இறக்கி புத்தகப் பையையும் மாட்டி விட்டாள்.பேருந்தின் இறுதிப்படி வரை சென்று இறக்கியும் விட்டாள்.எனது நிறுத்தமும் அது தான். பேருந்திலிருந்து இறங்கிய அந்தச் சிறுமி திரும்பிப் பாராமல் நடந்தாள்.திரும்பிப் பார்த்து தான் சென்று வருகிறேன் என்றாவது கூறியிருக்கலாம்.பேருந்து சிக்னலில் நின்று கொண்டுதான் இருந்தது. சன்னல் ஓரத்தில் பாத்திமாவின் பரிதவிப்பு.கடைசியாக ஒரு முறைத் திரும்பிப் பார்த்தாள் அந்தச் சிறுமி.அவள் பார்வையில் எந்தச் சலனமும் இல்லை. பேருந்தும் சென்று விட்டது. நான் விரைவாய் நடந்த சிறுமியை நெருங்கினேன்.சிறுமியிடம் கேட்டேன் அந்த அக்காவிடம் ஒரு புன்சிரிப்பாவது காட்டியிருககலாமே என்று.சிறுமியிடம் வந்த பதில் இது தான்.எனக்கு பழக்கமில்லை.தெரியாதவர்களை நான் நம்புவதில்லை என்றாள்.என்ன சொல்வது எனக்குத் தான் வார்த்தைகளில்லை.அவள் வார்த்தைகளில் தன்னலம் வழிந்தது.கறை படிந்தது தானே இந்த உலகு? மௌனமாய் திரும்பி நடக்கிறேன்.தீடிரென தூறும் மழை அதை நான் சற்றும் உணரவில்லை. இந்த தூறல் கூட உன்னைப் போன்ற சிலர் இருப்பதால் தானோ பாத்திமா? என்னையும் அறியாமல் உதடுகள் ஏனோ இதை முணு முணுத்தது.

பதிவு : கலை
நாள் : 18-Jul-15, 10:58 am

மேலே