எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அலட்சியம் வேண்டாம்...... நான் அஜ்மானுக்கு வந்து ஒருமாதம் ஆகின்றது....

அலட்சியம் வேண்டாம்......

நான் அஜ்மானுக்கு வந்து ஒருமாதம் ஆகின்றது. அலாஹ்வின் கிருபையால் நலமாக உள்ளேன்.
என்னுடைய கம்பெனியில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரின் தாயார் இறந்துவிட்டார்கள். அதற்கான காரணம் என்ன என்று விசாரித்தபோது......
நண்பர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர், அவரின் ஊரோ மிகவும் சிறிய கிராமம் மொத்தமே 30 க்கும் குறைவான வீடுகளே உள்ளனவாம். வீட்டில் அம்மாவைத்தவிர வேறு யாருமில்லை. தாய் மட்டும் தனியாக இருப்பதால், இன்னும் இரண்டுமாதத்தில் ஊருக்கு சென்று கல்யாணம் முடித்து மனைவியை தாய்க்கு துணையாக வைத்துவிட்டு வந்தால்தான், தனக்கு நிம்மதி என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பருடைய மொபைலுக்கு இந்தியாவிலிருந்து பலமுறை அழைப்பு வந்து கொண்டே இருந்தது, யாரோ ராங் நம்பரிலிருந்து அழைப்பதாக விட்டுவிட்டார். நேற்று நண்பரின் உறவினரிடமிருந்து அழைப்பு வரவே அதை எடுத்து பேசியபோதுதான், அவருக்கு அதிர்ச்சியான விஷயம் காத்திருந்தது.....
தனக்கு உறவாய் உயிராய் இருந்த தாய் இறந்து போனதுதான் அந்த அதிர்ச்சியான செய்தி.... நண்பர் கண்ணீர்விட்டு கதறி அழுதார் அம்மா எனக்கு உறவென்று நீ மட்டும்தானே இருந்தாய் எனக்கு வேறு யாருமில்லையே என்று நேற்று முழுவதும் கண்ணீரோடு அழுது புலம்பியது, எங்கள் மனதை உருக்கியது....
அந்த அம்மாவிற்கு மொபைலை எப்படி உபயோகிப்பது என்று கொஞ்சம் கூட தெரியாது, அழைப்பு வந்தால் மட்டும் பச்சை பட்டனை அழுத்த நண்பர் சொல்லி கொடுத்திருக்கிறார். அதனால் நண்பர்தான் எப்போதும் தன் அம்மாவிற்கு போன் செய்து பேசுவார்.....
இந்நிலையில் அந்த தாய்க்கு நெஞ்சு வலி வரவே... அவர் தட்டுத்தடுமாறி பக்கத்து வீட்டிற்கு சென்று கூறியிருக்கிறார். அந்த அம்மாவின் மொபைலில் அழைப்பதற்கு போதுமான பணம் இல்லாததால், பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் தன்னுடைய மொபைலில் இருந்து நண்பருக்கு அழைத்துள்ளனர். நண்பர் வேலையின் காரணமாகவும் வேறு யாருடைய நம்பர்தானே என்பதாலும் சாதாரணமாக இருந்துவிட்டார். பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அந்தக் குக்கிராமத்திலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள்... பாவம் அந்தத் தாயின் உயிர் பிரிந்து விட்டது.....
குறிப்பாக நம் எல்லோருக்கும் இந்தப் பழக்கம் அதிகமாக இருக்கிறது. தெரியாத நம்பரிலிருந்து அழைப்பு வந்தால் யாரும் எடுப்பதில்லை. பாதுகாப்பு கருதியோ, இல்லை மற்றவர்களின் தொந்தரவிலிருந்து தப்பிக்கவோ நாம் இவ்வாறு செய்வது சரியாக இருந்தாலும், தொடர்ச்சியாக பலமுறை ஒரே நம்பரிலிருந்து அழைப்பு வந்தால் அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்....
யாரோ என்றெண்ணி நாம் அலட்சியமாக இருந்தால் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்க வாய்ப்புண்டு, ஒருவேளை நண்பர் அந்த அழைப்பை எடுத்து பேசியிருந்தால் விஷயமறிந்து தக்க நடவடிக்கை எடுத்து தன் தாயின் உயிரை காப்பாற்றி இருக்கலாமோ என்று எண்ணத்தோன்றுகிறது...

நாள் : 19-Jul-15, 11:27 am

மேலே