படித்ததில் பிடித்தது.... எவர்சோற்றில் மண்வைத்தேன்? எவர்குடியை நான்கெடுத்தேன்? என்சோட்டுப்...
படித்ததில் பிடித்தது....
எவர்சோற்றில் மண்வைத்தேன்?
எவர்குடியை நான்கெடுத்தேன்?
என்சோட்டுப் பெடியன்கள் புத்தகங்கள் சுமந்துவர
என்கரங்கள் மட்டுமிந்த இழிநிலையை எய்தியதேன்?
தந்தையின்மேல் தவறில்லை
பாசமுள்ள தகப்பன்தான்..
தாயன்பில் பிழையில்லை
முத்தமாரி பொழிபவள்தான்...
மூன்றுவேளை அடுப்பெரிய
அவரெரிந்தும் முடியலையே!
அனைவருக்கும் கல்வியுண்டு
மதியத்தில் சோறுமுண்டு
கல்விகற்க நான்போனால்
தம்பிதங்கை பசிதீர்க்க எனையன்றி எவருண்டு?
முதுகொடிய உழைத்தாலும்
முக்காத்துட்டு தேறவில்லை
முட்டிமோதிப் பார்த்தாலும்
முன்னேற வழியில்லை
கறிமீது ஆசையுண்டு
பாயசம்மேல் பாசமுண்டு
கஞ்சிக்கே வழியில்லை
பிஞ்சுநெஞ்சைப் பொத்திவைத்தேன்
உழைப்பாலே உயர்ந்திடலாம்
வாஸ்த்தவந்தான் வாஸ்த்தவந்தான்
வழிசொல்ல ஆள்வேண்டும்
அறிவுஒளி ஆளவேண்டும்
அதுவுமில்லை
இதுவுமில்லை
எதுவரைதான் போவேனோ இதுவரையில்
தெரியவில்லை...
கெஞ்சுகிறேன் பெரியோரே...
செல்வத்தால் உயர்ந்தோரே...
சாலையோர மரத்தடியில்
எனைநீவிர் பார்த்திட்டால்
பேரம்மட்டும் பேசிடாதீர்!
அப்போதும் என்கும்பி
காலியாய்த்தான் காய்ந்திருக்கும்