எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படித்தது; தளிர் உங்களின் தமிழ் அறிவு எப்படி? வணக்கம்...

படித்தது;  தளிர் 

உங்களின் தமிழ் அறிவு எப்படி? 

வணக்கம் நண்பர்களே! .
   நான் இலக்கிய சுவை பகிறும்போது உள்ளுறை உவமமாக சிறப்பாக பாடப்பெற்று வந்துள்ளது இந்த பாடல் என்று குறிப்பிடுவேன். அது என்ன உள்ளுறை உவமம்? அதைப்பற்றிதான் இன்று படிக்க இருக்கிறோம். உள்ளுறை உவமத்தை அறியும் முன் உவமம் என்றால் என்ன என்பதை பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும். உவமானம், உவமேயம் பற்றி ஏற்கனவே இந்த பகுதியில் படித்து இருப்பீர்கள். இருந்தாலும் இப்போது மீண்டும் பார்ப்போம்.
 ஒரு கருத்தினை விளக்க இன்னொரு பொருளை ஒப்புமைப் படுத்திக் கூறுவது உவமை ஆகும். உதாரணமாக நல்ல அழகாக நிறமாக இருக்கிறாள் என்பதை ரோஜாப்பூ போல நிறமாக இருக்கிறாள் என்று சொல்வதுண்டு. இதில் ரோஜாப்பூ என்பது உவமை அல்லது உவமம் எனப்படுகிறது.
பொதுவாக உவமம்; வினை, பயன், வடிவு, வண்ணம் என நான்கு வகைகளில் பயன்படுத்தப்படும்.
சிங்கமென கர்ஜித்தான்  - வினை(செயல்)மாரிபோல வாரி வழங்கினான் – பயன்வஜ்ரம் பாய்ந்த கைகள்  - வடிவுநிலவு போன்ற முகம் – வண்ணம்.
இவையெல்லாம் வெளிப்படையாக உவமையை காட்டுகின்றது. உவமை என்று உணர முடிகின்றது. இவ்வுவமைகளில் உவமானமும் உவமேயமும் இருக்கின்றது.
இந்த நான்கு வகை உவமத்தில் அடங்காது மறைந்து நின்று பொருளைத் தருகின்ற ஓர் உவமை  உள்ளுறை உவமம் என்று வழங்கப்படுகின்றது.இந்த உவமம் தானாக வெளிப்படாது மறைந்து ஓர் பொருளை உணர்த்தும் உதாரணமாக “ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப” நற்றிணை பாடல் வரியை எடுத்துக் கொள்வோம்.
இந்த பாடல்வரியின் பொருள்: காற்று தூற்றுகின்ற நீர்மிக்க கடற்கரைத் தலைவனே! என்பதாகும். மேலோட்டமாக இந்த பொருளை தருகின்ற இந்த வரி ஒரு செய்தியை தருகிறது. இதில் ஓர் உவமை மறைந்து கிடக்கிறது. அதை நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தால்தான் பொருள் விளங்கும்.
இந்த வரியை நுணுக்கமாக பார்த்தால், கடல் கொழித்து ஒதுக்கிய பெரும் மணலில் சிலவற்றை காற்று அள்ளித் தூற்றுகிறது. அதே போல தலைவனால் ஒதுக்கப்பெற்ற தலைவியை ஊரார் அலர் தூற்றுவர் என்று பொருள்.
கடல் ஒதுக்கிய மணல்- உவமானம், தலைவனால் ஒதுக்கப்பெற்ற தலைவி- உவமேயம்.
இதில் உவமானத்திற்கு உரிய வினை, பயன், வடிவு,வண்ணம் எதுவும் அமையவில்லை. ஆனால் உவமை பயன்பட்டு இருக்கிறது.
இவ்வாறு கவிஞன் தான் கருதிய பொருளை செய்யுளில் வெளிப்படையாக கூறாமல் நுணுக்கமாக குறிப்புப் பொருளாக உள்ளே உறையும்படி வைத்து உவமையாக்கி கூறுதல் உள்ளுறை உவமம் எனப்படும்.
இலக்கிய சுவை!

உள்ளுறை உவமம் குறித்து படித்தோம் அதனால் உள்ளுறை உவமம் அமைந்த ஒரு நற்றிணைப் பாடலை படித்தால் இன்னும் தெளிவாகும் அல்லவா? இதோ!
நற்றிணை
 திணை: நெய்தல்
பாடியவர்: அம்முவனார்
துறை: தலைவன் சிறைப்புறமாக இருந்தபோது வற்புறுத்திய தோழிக்கு தலைவி எதிர் மொழிந்தது
செந்நெல் அரிநர் கூர் வாட் புண்ணுறக்காணார் முதலொடு போந்தென,பூவேபடையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத்தன்னுறு விழுமம் அறியா, மென்மெல,தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும்பேதை நெய்தற் பெருநீர்ச் சேர்ப்பதற்குயான் நினைந்து இரங்கேனாக, நோய் இகந்து,அறனிலாளன் புகழ, எற்பெறினும், வல்லேன்மன் –தோழி!- யானே.
துறைவிளக்கம்} நெய்தல் நிலத் தலைவன் தலைவியை பிரிந்து சென்று குறித்த நேரத்தில் வராது தலைவியை துன்பப்படுத்தி இருக்க தோழி வருந்தாதிருக்குமாறு கூறுகையில் தலைவி கூறியது
பொருள்: செந்நெல்லை அறுக்கும் உழவர் கூரிய அரிவாளால் வயலில் நெற்கதிர்களை அறுக்கும்போது நெற்கதிரோடு நெய்தல் மலரையும் அது அறுபடுமே என்று வருந்தாது சேர்த்து அறுத்துவிடுவர்.
    பேதையான அந்த மலர் அரிவாளோடும் கதிர்களோடும் கலந்து நெல்லரியில் கிடக்கும். அப்போதும் அது தனக்கேற்பட்ட துன்பத்தை அறியாது மெல்ல மெல்ல கதிரவனின் கதிர்களை கண்டதும் தன்னுடைய இனிய துயிலை விலக்கி நெல்லரியில் இருந்து தன்னுடைய பசுமையான வாயினை திறந்து மலரும். இவ்வாறான கடற்கரையை உடையவன் நம் தலைவன்.
   தோழி! நான் அவனை நினைத்து வருந்தவில்லை. குறித்த காலத்தில் வராததால் அவன் அறனிலாளன். ஆனாலும் அயலார் புகழும்படி மீண்டும் வந்தடைந்து என்னைச் சேர்ந்தால் நானும் என் நோய் நீங்கப்பெற்று அவனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன்.
உள்ளுறை உவமம்:  நெய்தல் பூ நெற்கதிர் அறுப்போரால் அறுக்கப்பெற்று நெற்கதிர்களோடு அரிக்கிடையில் வாடினாலும் தன் துன்பத்தை உணராது சூரியனைக் கண்டவுடன் மலரும். அதேபோல தலைவியானவள் தலைவனை பிரிந்து துன்பம் அடைந்து படுக்கையில் கிடந்தாலும் அவற்றை கவனியாது தலைவனை கண்டவுடன் மகிழ்ச்சியோடு எழுவேன் என்பதாகும்.
என்ன ஒரு அழகிய உவமை! அன்றாடும் காணும் ஒர் காட்சியை அகப்பொருளில் மிகச்சிறப்பாக பாடிய புலவனின் திறமை வியக்க வைக்கிறது அல்லவா?

நாள் : 23-Mar-16, 11:32 pm

மேலே