சிந்தனை செய்மனமே..10 மன்னிப்பதும் (Forgive) மறப்பதும் (Forget) விளையாட்டாக...
சிந்தனை செய்மனமே..10
மன்னிப்பதும் (Forgive) மறப்பதும் (Forget)
விளையாட்டாக ஒரு சில காரியங்களைச் செய்யப்போக, பின்பு அது வினையில் முடிவதை, நம் அனுபவத்தில் பார்த்திருக்கிறோம், சில சமயங்களில் நாமும் கூட அதைச் செய்திருக்கவும் கூடும்.
நமக்கு விளையாட்டாகத் தோன்றும் ஒரு நிகழ்ச்சி மற்றவருக்கு அது வினையாக முடியலாம் அல்லது தோன்றலாம். ஆக, விளையாட்டும் அதனால் வரக்கூடிய விளைவும் ஒன்றுக்கொன்று
தொடர்புடையது என்றே கூறலாம். ஒரு சம்பவத்தைப் பற்றி உரையாடும்போது, ஒருவர் இல்லாத சமயத்தில் அவரைப் பற்றி பேச ஆசைப்படுவதென்பது அனைவருக்கும் சகஜமான ஒன்று. அதே உரையாடலை இன்னொருவரிடம் சொல்ல நேரிடும் போது, நடந்த சம்பவத்தையும், பிரயோகித்த வார்த்தைகளையும் அப்படியே சொல்லாமல், நம் கற்பனையில் தோன்றிய சில அதிகப்படியான சில வார்த்தைகளையும் சேர்த்துச் சொல்லும்போதுதான், ஒருவருகொருவர் பிரச்சினை வெடிக்கிறது.
“விளையாட்டாகப் பேசினேன்” ஒன்றும் தவறாக நினைக்க வேண்டாம்.. என்று சொல்லி சமாளிப்பதெல்லாம் பின்பு எடுபடாது. இதனால் வெகு காலமாக நிலவுகின்ற நட்பினிடையே விரிசல் தோன்றவும் வாய்ப்பு உண்டு. கடைசியில் நிரந்தரமாகப் பிரியக்கூடிய சந்தர்ப்பத்துக்கு அது வழி வகுக்கும்.
சம்பவத்தை மறக்க மனமில்லாமல் பிரிந்தபிறகு தூதுவிடுவது, மீண்டும் அந்த உறவு கிட்டாதா என ஏங்குவதெல்லாம் வீணாகும். கடைசியில், நடந்த சம்பவத்திற்கு “நான் மன்னிப்பு கேட்கிறேன்” “என்னை மன்னித்து விடுங்கள்” “நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்கிறேன்” என்றெல்லாம் சொல்லி மன்றாடுவதைத் தவிர வேறு வழி கிடையாது.
முக்கியமாக, “மன்னிக்க” நினைப்பது போலவே, “மறக்க” கற்கவும் வேண்டும். தவறான சம்பவங்களுக்காக, சில சமயம் பிறரை மன்னிக்கிறோம். அதே சமயம் “நம்மை நாமே மன்னித்துக் கொள்ளவும்” பழகவேண்டும். இதைத்தான் நமது நீதி சாத்திரங்கள் வலியுறுத்துகின்றன.
