எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரு பெரும் இதிகாசங்களின் பிறப்பு பெண்ணாலேயே நிகழ்ந்தது.. கவர்ந்து...

இரு பெரும்

 இதிகாசங்களின் பிறப்பு 
பெண்ணாலேயே நிகழ்ந்தது..

கவர்ந்து போன 
மனையாளைக் காக்க
இராமாயணமும்,

விரித்த  கூந்தல் 
அள்ளி முடிக்க 
இட்ட 
சபதம் காக்க 
மகாபாரதமும்
உதித்தன!!

அன்று
சீதைக்காகவும்,
பாஞ்சாலிக்காகவும்,
எழுந்த 
போர்
இன்று நிகழுமா 
என்றால்
இல்லை !!

நிர்பயா,
நந்தினி,
ஜிஷா,
ஜோதி,

இப்படி
பட்டியல் 
ஏறிக்கொண்டே போகிறது...

இதில் சேரும்
ஒவ்வொரு பெயரும்
மனித இனத்தின்
மாறி விட்ட விலங்குகளின்
குரூர எண்ணங்களை
மொழி பெயர்க்கின்றன??

இங்கே
மொழி இல்லை ,
மதம் இல்லை,
சாதி இல்லை,
வயது இல்லை,
உடை இல்லை!!

இதில் கூட
ஒரு சமத்துவம்
இந்த புத்தி கெட்ட
விலங்குகளுக்கு??

ஒரு பெண்ணின்
அழுகுரல் கூட 
கரைக்காத
இக் கயவர்களுக்கு
அன்னையும் உண்டு
தங்கையும் உண்டு....

வீட்டில்
அண்ணணாய்,
மகனாய்,
பிள்ளையாய்,
இருக்கும் ஒருவன்

இன்னொரு வீட்டின்
தங்கையை
பிள்ளையை
இழிநிலை 
செய்யத் துணிவது
எத்தனை  விசித்திரம்!!

இல்லை இல்லை
எத்துணை கொடூரம்??

பெண்ணின் 
உடை சரியில்லை
என 
கூவி திரிகிற கூட்டங்களே ,

உடையின்றி திரிந்த 
ஆதி காலங்களிளே
இது நிகழவில்லையே?!

தென்றல் கூட
தீண்டாமல்
ஆடை கொண்டு
மறைக்கின்ற பெண்மையை

கண்களால் அளவெடுத்தும்
கைகளால் தீண்டிடவும்
விழையும்
கயவர்களை எண்ணுகையில்

சங்க இலக்கியங்களில்
காட்டப்படும்
ஆண்களின் கண்ணியங்கள்
இன்று வேருடன்
அறுபட்டு போனதே
என எண்ணுகையில்

என் உயிரும்
ஒரு மூலையில்
அறுந்துதான்
போகிறது....

விண்வெளிக்கு 
சென்று 
திரும்பிய பெண்ணால்
வீதியில்
நடமாட இயலவில்லை??

விஞ்ஞானம்
வளர்ந்திட்ட
வேளையிலும்
இங்கே
விபச்சாரத்திற்க்கு குறைவில்லை??

விதியின் விளையாட்டா?
சதியின் விளையாட்டா?
என 
அறியா இதில்
கருகி போவதோ 
எத்தனையோ வீட்டின்
எதிர்கால கனவுகள்!!

மீண்டும்

பெண்ணிய அடிமைத்தனத்திற்கு
வழிகோலும்
ஒரு வித்தாய்
இந்த இழிசெயல்
அமையவே போகிறது

அது
எத்தனையோ பூக்களை
சமையலறையிலும்

விரும்பாத 
திருமண உறவிலும்
தள்ளிச் செல்லத்தான்
போகிறது...

கௌரவர்களுக்கு 
எதிராக 
பாண்டவர்களும்,

இராவணனுக்கு
எதிராக
இராமனும்,

தோன்றிய காலங்கள்
கதைகளாக
புத்தகங்களில்
அடைக்கப்பட்டு விட்டது?!

சட்டங்களும்
தண்டனையும்
கடுமையானால்
குற்றங்கள்
தீர்ந்து விடும்
என்கின்றார்கள்?

ஆனால்?

தனிமனித உணர்வின் 
வெறி ஆட்டத்தை
வெறும்
வார்த்தைகளோ
சட்டங்களோ
மாற்றிவிட இயலாது...

இல்லையேல்

காந்தி கொண்ட
இவ்வகிம்சை பூமியிலே

பாரத மாதாவும்
வெட்கி நாணும்
வகையிலே
விலங்குகள்
உருவெடுத்திருக்க மாட்டார்கள்...

புரிந்து கெள்ளவோ
பகிர்ந்து கொள்ளவோ
துணை இன்றி

தனிமை அரக்கனிடம்
சிக்கித் தவிக்கும்
பெண்மையின்
பரிதவிப்பை
எத்தனை வார்த்தைகளில்
சொல்லிவிட இயலும்??

கண்களின் கனவுகளின்
வண்ணங்களை
அழித்து விட்டு

கண்ணீரை தந்து போகும்
இந்த அவலத்தை
உரக்கச் சொல்ல
இந்த 
சமூகத்தில் இடமுண்டோ??

பேசா மடந்தையாய் பலர்...

காரணம்..

எய்தவனை விடுத்து
அம்பை 
குறை சொல்லும் சமுகம்?!

ஒரு பெண்
பாலியல் 
வன்கொடுமைக்கு
உள்ளானால்

ஆதரவை விடுத்து
அவள்
உடைகளையும்
நடத்தையையும்
பற்றி
பேசி சிரிக்கும்
சமூகமல்லவா இது!??

உடலால் ஒருநாள் மரணம்,
உணர்வால்
ஆயுள் முழுக்க மரணம்
என
கூவி திரியும்
சமூகமல்லவா இது?

பெண்ணே,

கற்பு நெறி
பிறழாத 
பெண்டிரை
இலக்கியம் பல
கொண்டாடுகின்றன,

ஆனால்

விதியின் வலியால்
ஒரு பூவிதழ்
உதிருமானால்
பூவின் மேல்
என்ன தவறு
இருக்கக்கூடும்??

மலர்ந்தது தவறா?
மலர்ந்த இடம் தவறா?

ஒரு இதழின்
இழப்பால் 
பூவின்
மணம் போய்விடுமா?
இல்லை
அது
மலரில்லை
என்றுதான் ஆகிவிடுமா?

சகோதரியே

கண்ணீரில்
கரைந்த காலங்கல்
காற்றோடு ஓடட்டும்,

தேய்பிறை காலங்கள்
வெண்ணிலவாய் 
மாறட்டும்...

உன் 
கைகள் கோர்த்துக்கொள்ள
பல கரங்கள்
இங்கே 
காத்திருக்கின்றன,

துணிந்து
உன் கரங்களை
வெளியே நீட்டு...

மூடிய அறையின்
திரியாய் அல்ல

திறந்த
உலகின்
கதிரவனாய் மாறிவிடு!!

உன் வெளிச்சம்
பிறர் வாழ்வையும்
சேரட்டும்.
பதிவு : கங்காதேவி
நாள் : 9-Mar-17, 11:15 pm

மேலே