திருநீறு பூசுவதன் மகிமை! புராண காலத்தில் ஒருநாள் துர்வாச...
திருநீறு பூசுவதன் மகிமை!
புராண காலத்தில் ஒருநாள் துர்வாச முனிவர் தன் காலை வேளை அனுஷ்டானங்களை முடித்து, சிவனை தியானித்து நெற்றியில் திருநீறு அணிந்து பித்ரு லோகம் புறப்பட்டார். மாபெரும் தவசீலரை எதிரில் கண்ட வானவர்கள் மரியாதை நிமித்தம் அவரை வணங்கி நகர்ந்தனர். துர்வாசர் செல்லும் வழியில் பெரிய கிணறு ஒன்று தென்பட்டது.
இவ்வளவு பெரிய கிணறை நாம் பார்த்ததே இல்லையே என்கிற சிந்தனையுடன் அதனுள் ஒரு கணம் கண்களைச் சுருக்கி எட்டிப் பார்த்து விட்டு, மீண்டும் நடக்க ஆரம்பித்தார். அந்தப் பெரிய கிணற்றினுள் நரகத்தின் ஒரு பகுதி இயங்கிக் கொண்டிருந்தது. கடும் தீயும், அமில மழையும், பாம்பு - தேள் போன்ற கடும் விஷ ஜந்துக்களும் அங்கே ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தன.பூலோகத்தில் பாவம் செய்த பலரும் அங்கே வதை பட்டுக் கொண்டிருந்தார்கள். சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.
துர்வாச முனிவர் குனிந்து அங்கே பார்த்துவிட்டு நகர்ந்த மறுகணமே திடீரென்று அங்கே நிலைமை தலைகீழாக மாறியது. அந்த நரகத்தில் அதிசயம் நடந்தது. பாம்புகளும் தேள்களும் மலர் மாலைகள் ஆயின. அமில மழையானது ஆனந்தம் தரும் நிஜ மழை ஆனது. சுட்டெரிக்கும் தீ, இதமான தென்றலாக அங்குள்ளோரை வருடியது. நரகம் முழுக்க சுகந்த நறுமணம் வீசியது. அங்கே இருந்த பாவ ஆத்மாக்கள் அனைவரும் ஆனந்தம் கொண்டனர். முகத்தில் பிரகாசம் வீசியது. இந்த நரகத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்த கிங்கரர்கள் பயந்துபோய் எமனிடம் ஓடினார்கள்.
திடீரென்று சொர்க்கமாக மாறிப் போன நரகம் பற்றிச் சொன்னார்கள். அதிர்ந்து போன எமனும் வந்து பார்த்து அதிசயி த்தான். தர்ம சாஸ்திர நெறிகள் ஒரு வேளை நமக்குத் தெரியாமல் மாற்றப் பட்டு விட்டனவா? அல்லல் பட வேண்டியவர்கள் ஆனந்தமாகத் திரிகிறார்ளே? என்று பதற்றத்துடன் இந்திரனிடம் ஓடினான். வந்து பார்த்த இந்திரனுக்கும் புரிய வில்லை. தேவாதி தேவர்கள் எவருக்கும் இதற்கான காரணம் புரியவில்லை.
எனவே, எல்லோரும் சேர்ந்து கொண்டு சர்வேஸ்வரனிடம் போனார்கள். சிரித்தார் ஈசன். தன் நெற்றியைக் காட்டி, இந்தத் திருநீற்றை அகார, உகார, மகார (மோதிர விரல், நடுவிரல், ஆட்காட்டி விரல்) விரல்களால் எடுத்து நெற்றி நிறைய திரிபுரண்டர மாகவே (மூன்று கோடுகளாக) அணிய வேண்டும். இதுதான் முறை.
அகாரம் என்பது பிரம்மனையும், உகாரம் விஷ்ணுவையும், மகாரம் என்னையும் குறிக்கின்றன. எனவே சாஸ்திர நெறிப்படி திருநீறு அணிந்த தவசீலரான துர்வாசர் பித்ரு லோகக் கிணற்றைக் குனிந்து பார்க்கும்போது அவரது நெற்றியில் இருந்து ஒரு சிறு துளி திருநீறு உள்ளே விழுந்து விட்டது. அதனால்தான், சொர்க்கமாக மாறிப் போனது என்றாராம் சர்வேஸ்வரன்.
பார்த்தீர்களா திருநீற்றின் மகிமையை...! ஒரு சிறிதளவு திருநீறு, பாவம் செய்தவர்கள் மீது பட்டதால் புண்ணியம் செய்தவர்கள் ஆகிப் போனார்கள். ஆகவே நாளும் பூசுவோம் திருநீறு. போற்றி வணங்குவோம் சிவபெருமானை.
சிவாய நம.