எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு பேரழகியின் கதை - விக்கிரமாதித்தன் கதைகள் (படித்ததில்...

ஒரு பேரழகியின் கதை - விக்கிரமாதித்தன் கதைகள்  (படித்ததில் பிடித்தது )
-----------------------------------------------------------------------


வேதாளத்தை மரத்திலிருந்து இறக்கி தனது தோளில் போட்டுக்கொண்டு விக்கிரமாதித்தன் நடக்கத் தொடங்க அது மீண்டும் கதை சொல்லத் தொடங்கியது. ‘பாரதத்தின் தென்கிழக்கிலே வல்லபாலன் என்னும் அரசன் கௌசாம்பி என்னும் பட்டணத்தை ஆண்டு வந்தான். அந்தப் பட்டணத்தில் வசித்து வந்த முத்தநாதன் என்பவர் ஒரு நேர்மையான வணிகர். அவரே அந்தப் பட்டணத்தின் வியாபாரிகளுக்கெல்லாம் தலைவராகத் திகழ்ந்தார். வணிகத்தில் வாய்ச் சொல்லில் சத்தியமும், நாணயமும் இரண்டு கண்களாக மதித்த முத்தநாதன் வாழ்விலும் நீதி, நியாயம் தவறாமல் வாழ்ந்தார். முத்தநாதனுக்கு ஒரு மகன். ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள். மகன் வித்யாதரன் தந்தைக்குத் துணையாக வியாபாரத்தைப் பார்த்துக்கொண்டான். மகள் வித்யாவதி மிகுந்த குணவதி. தைரியசாலி. அதீத இரக்க குணம் கொண்டவள். தனது தந்தையைப் போலவே வாக்கு சுத்தம் கொண்டவள். ஒருவருக்குக கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தனது உயிரையும் கொடுக்கத் துணிவாள். அதுமட்டுமல்ல, தேவலோகத்து மங்கைகளான ரம்பா, ஊர்வசி, மேனகைகளே பொறாமை கொள்ளும் அழகு படைத்தவள் வித்யாவதி. மன்மதனின் மனைவியான ரதி தேவியே வெட்கம் கொள்ளும் அளவுக்கு மோகன வடிவம் கொண்டவள். அவளது இந்தப் பேரழகுதான் அவளுக்கு ஆபத்தைக் கொண்டு வந்தது. ஒருநாள் மாலை நேரம். வித்யாவதி கோயிலுக்குச் சென்று விட்டு நந்தவனம் வழியாக தனிமையில் வந்தபோது மதனகாமன் என்பவன் அவளை எதிர்கொண்டு இடைமறித்தான். மதனகாமன் வித்யாவதியின் சகோதரன் வித்யாதரனின் நண்பன். ‘வித்யாவதி, நான் உன்னிடம் சற்றுப் பேசவேண்டும்!’ என்றான் மதனகாமன். ‘அதற்கு இதுதானா இடம்? சரி சொல்லுங்கள்!’ என்றாள் வித்யாவதி. ‘வித்யாவதி உனது பேரழகு என்னைப் பாடாய்ப்படுத்துகிறது. உனது வனப்பான பருவமும், திரண்ட எழிலும் என் உள்ளத்தை நார் நாராகக் கிழித்துப் போடுகிறது. நான் உன்னை உயிருக்குயிராகக் காதலிக்கிறேன் வித்யாவதி. இனிமேலும் என்னைத் தவிக்கவிடாதே. என்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடு, என் தாபத்தைத் தீர்த்து வை!’ – இறைஞ்சினான் மதனகாமன். வித்யாவதி திடுக்கிட்டாள். மதனகாமன் இப்படிச் சொல்வான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனது காதலை அவளால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. ஏனெனில் அவள் தந்தை முத்தநாதன் வித்யாவதிக்கென அவர்களது உறவிலேயே பக்கத்து ஊரிலுள்ள குணசேகரன் என்கிற வணிகர் குல இளைஞனுக்கு மணம் பேசி நிச்சயித்திருந்தார். விரைவிலேயே அவளது திருமணம் நடக்கவிருந்தது. இந்தச் சூழலில் மதனகாமனின் கோரிக்கை அவளுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அவள் மதனனிடம், ‘தயவுசெய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். தங்களின் காதலை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. என் தந்தை ஏற்கெனவே வேறோர் மாப்பிள்ளையைப் பார்த்து எனக்கு நிச்சயம் செய்து விட்டார். இன்னும் சிறிது நாட்களில் எனக்குத் திருமணம் நடைபெறப் போகிறது. என்னை மறந்து விடுங்கள்!’ என்றாள். ‘இல்லை வித்யாவதி. உன்னை என்னால் மறக்க முடியாது. உன்னை அடையாமல் என் வேட்கை தீராது. தயவுசெய்! உன் காலில் விழுந்து கேட்கிறேன். கருணை காட்டு. என்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடு!’ – என்று கெஞ்சினான். வித்யாவதி எத்தனையோ விதமாக அவனுக்கு நற்போதனைகள் செய்தபோதும் அவன் கேட்பதாயில்லை. மண்டியிட்டான்… கண் கலங்கினான்… விம்மினான்… வெடித்தான்… உண்மையாகவே அவளது பாதங்களில் விழுந்து புரண்டு அழுதான். கடைசியாக, ‘நீ எனக்கு இல்லையென்றால் இக்கணமே, மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொள்வேன்!’ என்று மிரட்டினான். வித்யாவதி திடுக்கிட்டாள். ‘தயவுசெய்து உங்களை கெஞ்சிக் கேட்கிறேன். அப்படியெல்லாம் செய்து விடாதீர்கள். இது நியாயமில்லை. இன்னொருவர் மனைவியாக நிச்சயிக்கப்பட்ட நான் உங்களை எப்படி மணந்து கொள்ள முடியும். இதனால் எனது தந்தையல்லவா சத்தியம் தவறியவர் என்கிற பழிச்சொல்லுக்கு ஆளாகிப் போவார்? கருணைகூர்ந்து உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்!’ என்று கூறினாள். மதனன் முடிவாக, ‘சரி, நீ என்னை மணந்து கொள்ள வேண்டாம். உனது இந்த அழகுதான் என்னை அலைக்கழிக்கிறது. இதை ஒருமுறை சுவைத்து எனது மோகம் தணிந்துவிட்டால் எனது இந்த வேட்கை தீர்ந்து விடும் என்பது நிச்சயம். இப்படியாவது ஒரே ஒருமுறை எனக்கு உதவி செய்!’ என்று கேட்டான். மதனகாமனின் இந்த நடத்தை வித்யாவதியை வேதனைப்படுத்தியது. இறுதியில் அவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக, மதனனிடம், ‘ஐயா! உங்களது தாபம் எனக்குப் புரிகிறது. நீங்கள் என்மீது கொண்டது காதலல்ல, காமம்! சரி நீங்கள் கேட்ட உதவியை நான் கட்டாயம் நிறைவேற்றித் தருகிறேன். ஆனால் முதலில் என் திருமணம் முடியட்டும். எனது தந்தை என்னை கன்னிகாதானம் செய்து தரும்போது அவரது சத்தியத்தைக் காக்கும் விதமாக மணவறையில் நான் கன்னியாக இருக்கவேண்டியது முக்கியம். இல்லையேல் எனது தந்தை வாக்கு தவறியவர் ஆவார். திருமணத்துக்குப் பிறகு நானே உங்களைத் தேடி வந்து என்னைத் தருகிறேன்!’ என்று வாக்குறுதி அளித்தாள். ஆனால் மதனகாமன் இதற்கு ஒப்புக் கொள்ளாதவனாக, ‘மற்றவன் எச்சில் செய்து தருவதை சுவைக்கக் கூடியவன் அல்ல நான். வித்யாவதி, உன்னை எனக்குத் தருவதாக வாக்கு தந்தாய். மிக்க சந்தோஷம். ஆனால் அப்படி உன்னை அளிப்பதானால் பூரண கன்னித்தன்மையோடு நீ எனக்கு வேண்டும்!’ என்றான். வித்யாவதிக்கு வேறு வழியிருக்கவில்லை. ‘சரி, நான் வாக்களித்தபடியே திருமணம் முடிந்ததும் என் கன்னித்தன்மை கலையாமல் நான் உன்னை வந்தடைகிறேன். என்னை நம்பு. இது சத்தியம்!’ என்று அவனுக்கு சத்தியம் செய்து தந்து விடை பெற்றாள். பெரியோர்கள் நிச்சயித்தபடி குறிப்பிட்ட சுபமுகூர்த்த தினத்தில் வித்யாவதியின் திருமணம் மிகுந்த கோலாகலமாக நடைபெற்றது.
இரவுப் பொழுது நெருங்க நெருங்க வித்யாவதி பதறினாள். தனது சத்தியத்தை கணவரிடம் எப்படிச் சொல்வது? இதை அவர் எப்படி எதிர்கொள்வார்? ஒன்றும் புரியவில்லை! இரவு, முதலிரவு அறைக்குள் நுழைந்ததுமே வித்யாவதி கணவன் குணசேகரன் கால்களில் தடாலென்று விழுந்து கண்ணீர் விட்டாள்.
குணசேகரன் பதறிப் போனான். ‘முதலிரவு அறைக்குள் மணப்பெண் அழுகிறாள் என்றால் அவளுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லையோ? என்னை அவளுக்குப் பிடிக்கவில்லையோ?’ என்று எண்ணியவன்,வித்யாவதியிடம், ‘பெண்ணே! அழாதே! உனக்குப் பிடிக்கவில்லையென்றால் உன்னைத் தொடக்கூட மாட்டேன். உன்னைக் கட்டாயப்படுத்தவும் மாட்டேன். நீ யாரை விரும்புகிறாயோ அந்தக் காதலனுடனேயே என்று வாழலாம். நீ இப்போதே புறப்பட்டுச் செல்!’ என்றான். குணசேகரனின் வார்த்தைகளால் துடிதுடித்துப் போன வித்யாவதி, ‘அப்படிச் சொல்லாதீர்கள். நான் உங்களை மனப்பூர்வமாக விரும்பித்தான் திருமணத்துக்கு சம்மதம் சொன்னேன். உங்களைக் கணவனாக அடைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.’ என்றாள். குணசேகரன் குழம்பிப் போனான். ‘பின் எதற்காக இந்தக் கண்ணீர்? என்ன உனது துன்பம்? என்னிடம் சொல்!’ என்று கேட்டான் குணசேகரன். ‘தயவுசெய்து நான் சொல்லப்போவதை தாங்கள் ஆத்திரப்படாமல் கேட்க வேண்டும்.’ என்ற வித்யாவதி, மதனகாமனின் விருப்பத்தையும், கன்னித்தன்மை கலையாமல் வந்து தன்னை அவனிடம் தருவதாக சத்தியம் செய்து தந்திருப்பதையும் விவரமாகச் சொல்லி முடித்தாள். ‘அன்பரே! நானோ எனது குடும்பத்தாரோ இதுநாள்வரை எந்தத் தருணத்திலும் கொடுத்த வாக்கைத் தவறியதில்லை. இம்முறையும் நான் மதனமோகனனுக்கு அளித்த வாக்கை நிறைவேற்றி விட்டு வருவதற்கு தாங்கள்தான் அனுமதி அளிக்கவேண்டும்!’ என்று கோரினாள். குணசேகரனுக்கு தலையில் இடி விழுந்தது போலிருந்தது. அவனுக்குத் தனது மனைவியின் கோரிக்கை விசித்திரமாக இருந்தது. கட்டிய மனைவியை இன்னொருவனிடம் அனுப்பி வைப்பதா என்று மனது கொந்தளிக்கவும் செய்தது. விரக்தியாக சிரித்துக் கொண்டான். பதற்றப்படாமல் ஆழ்ந்து யோசித்தான். அவனும் வணிக வம்சத்தவன்தானே? கொடுத்த வாக்கைக் காப்பாற்றித்தான் ஆகவேண்டும் என்பதில் எந்த விதிவிலக்கும் கிடையாது என்பதால் மனத்தை கல்லாக்கிக் கொண்டு வித்யாவதிக்கு சம்மதம் சொன்னான். ‘வித்யாவதி ஒருவருக்கு வாக்களிக்கும் முன் அது சாத்தியமா என்பதை யோசித்துத்தான் அளிக்க வேண்டும். அப்படி ஒருமுறை அளித்து விட்டால் உயிரைக் கொடுத்தாவது அதை நிறைவேற்றித்தான் ஆகவேண்டும். பரவாயில்லை போய் வா! கட்டிய கணவனுக்கு துரோகம் செய்து நீ உனது கள்ளக் காதலனைக் காணச் செல்லவில்லை. பசித்தவனுக்கு பிச்சையிடுவது போல உன் அழகை யாசித்தவனுக்கு பிச்சையிட்டு விட்டு திரும்பப் போகிறாய். மனைவியின் சத்தியத்தில் கணவனுக்கும் பங்கிருக்கிறது. போய் நிறைவேற்றி விட்டு வா!’ என்று அனுப்பி வைத்தான். வித்யாவதி கணவனுக்கு நன்றி சொல்லி, அந்த ராத்திரி நேரத்திலேயே மதனகாமனை காண்பதற்கு விரைந்தாள். அடுத்தொரு சோதனையும் அவளை நெருங்கியது. வித்யாவதி மதனகாமனை காணச் செல்லும்பொழுது வழியில் காட்டுப் பகுதியில் திருடன் ஒருவன் வித்யாவதியை கத்தி முனையில் மடக்கி மிரட்டினான். வித்யாவதி வீணே பேசி காலம் தாழ்த்த விரும்பாமல், தான் அணிந்திருந்த அத்தனை நகைகளையும் கழற்றி திருடனிடம் கொடுத்தாள். வித்யாவதியின் அழகை மிகுந்த ஆசையுடன் கண்களால் பருகிய அந்தத் திருடன் அவள் கொடுத்த நகைகளை வாங்காமல், மிருதுவான அவளது கைகளைப் பற்றித் தடவினான்.மேலும் சொன்னான். ‘இந்த பொன் நகைகள் எதுவும் எனக்கு வேண்டாம். உருக்கி வார்த்த தங்கச் சிலை போல் இருக்கும் நீதான் வேண்டும். வா பெண்ணே! என்னை அணைத்துக் கொள்! என் ஆசையைத் தீர்த்து வை!’ வித்யாவதி பதறி விலகினாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. ‘ஐயா, பாழாய்ப் போன எனது இந்த அழகுதான் எனது வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறது. திருமணமான அன்றிரவே தாலி கட்டிய கணவனைச் சேராமல், அந்த நல்லவரின் அனுமதியுடன் ஒரு காமுகனுக்கு தேகத்தை ஒப்படைக்கப் போய்க் கொண்டிருக்கும் அபலை நான். இதில் தாங்கள் வேறு தடுத்து துன்புறுத்துகிறீர்களே!’ என்று கதறினாள். ‘என்ன? கணவனின் அனுமதியுடன் அடுத்தவனை சேரப் போகிறாயா? என்ன உன் கதை? எனக்குச் சொல்!’ என்று கேட்டான். வித்யாவதி தனது கதையை அவனிடம் சொல்லி முடித்தாள். பின், ‘ஐயா! உங்களை நான் ஏமாற்ற மாட்டேன். தயவுசெய்து இப்போது என்னை விட்டு விடுங்கள். வாக்குக் கொடுத்தபடி என் கன்னித்தன்மையை அந்த காமுகனுக்குக் கொடுத்து விட்டு திரும்ப வரும்போது மீண்டும் இங்கேயே வந்து சேருகிறேன். தங்களின் ஆசையை பூர்த்தி செய்கிறேன்!’ என்றாள்.
திருடனும் சம்மதித்து அனுப்பி வைத்தான். ஒருவழியாக எல்லா கண்டத்திலிருந்தும் தப்பி தனது கன்னித் தன்மையைக் காப்பாற்றிக் கொண்டு, மதனகாமனிடம் வந்து சேர்ந்தாள் வித்யாவதி.
அவளைப் பார்த்ததும் மதனகாமன் முதலில் அதிர்ச்சியுற்றான். பின் எல்லையில்லாத வியப்படைந்தான். திருமணமான முதல் ராத்தியில் கட்டிய கணவனுக்குக்கூட தன்னை அர்ப்பணிக்காமல் கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக கன்னித் தன்மையுடன் தன் முன் வந்து நிற்கும் வித்யாவதியைப் பார்க்கவே அவன் மனம் கூசியது. வெட்கித் தலை குனிந்தான். ‘வித்யாவதி! மிகக் கேவலமானவன் நான். உனது நேர்மையோடும், உனது கணவனின் தியாக உள்ளத்தோடும் ஒப்பிட்டால் நான் சிறு தூசு போல் என்னை உணர்கிறேன். உனது இந்த தூய குணம் என்னைத் திருத்தி விட்டது. உத்தமியே! உனது கன்னித்தன்மை கலையாமல் இங்கிருந்து செல். உன் கணவனுக்கே அதை காணிக்கையாக்கி இருவரும் இன்புற்று வாழ்ந்திருங்கள்!’ – என வாழ்த்தி வழியனுப்பினான். அங்கிருந்து புறப்பட்ட வித்யாவதி, திருடன் இருக்கும் இடத்துக்கு வந்தாள்.
அத்தனை விரைவாக திரும்பி வந்த வித்யாவதியைப் பார்த்து திருடன் ஆச்சரியப்பட்டான். ‘இத்தனை சீக்கிரம் வந்து விட்டாயே! காமுகன் அங்கில்லையோ?’ என்று வினவினான். ‘காமுகன் கனவானாகி விட்டான்!’ என்ற வித்யாவதி நடந்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்தாள். இதைக் கேட்ட திருடன் மனம் நெகிழ்ந்து போனான். அவனது கண்கள் கலங்கின. ‘அம்மா! உண்மையாகவே உன்னைப் போல் ஒரு உத்தமியை நான் இதுவரை பார்த்ததில்லை. காமுகனுக்கு வந்த மனமாற்றம் இந்தக் கள்ளனுக்கு மட்டும் வராதா என்ன? இங்கிருந்தும் உனது கன்னித்தன்மை கலையாமல் புறப்பட்டுச் செல். உனது நற்குணம் எப்பேர்ப்பட்ட தீயவனையும் நல்வழிப்படுத்தி விடும் அம்மா! நீ தீர்க்காயுசாக, தீர்க்க சுமங்கலியாக உனது கணவனுடன் மகிழ்ச்சியாக இரு.’ – என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தான். வித்யாவதி மிகுந்த சந்தோஷத்துடன் ஓடோடிச் சென்று கணவனிடம் சேர்ந்தாள். நடந்த சம்பவங்கள் அனைத்தையும் சொன்னாள். ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். அன்புடன் கணவன் நெஞ்சில் சாய்ந்தாள். அவளை கட்டித் தழுவிய குணசேகரன், ‘வித்யாவதி உனது மேனியழகு அவர்களைக் கெட்டவர்களாக்கியது. ஆனால் உனது உள்ளத்தழகு அவர்களை நல்லவர்களாக மாற்றிவிட்டது. உன்னை மனைவியாக அடைந்ததில் நானும் பெருமைப்படுகிறேன் கண்மணி!’ என்று சொல்லிப் பூரித்தான். இப்படியாக கதை சொல்லி முடித்த வேதாளம், விக்கிரமாதித்தனிடம் கேட்டது. ‘இப்போது நான் சொன்ன கதையில் வந்த கணவன், காமுகன், கள்ளன் மூவருமே மிகுந்த பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்கள் என்றாலும் இதில் யாருடைய நடத்தை மிகச் சிறந்தது என்பாய்?’ ‘வேதாளமே, கணவன் குணசேகரன், காமுகன் மதனகாமன் இருவரும் வணிக குலத்தைச் சேர்ந்தவர்கள். நாணயம், நேர்மையை கடைப்பிடிக்க வேண்டியவர்கள். அவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டதில் எந்த அதிசயமுமில்லை. ஆனால் அடுத்தவர்களை ஏமாற்றியும், மிரட்டியும், வஞ்சித்தும், திருடியும் பிழைப்பு நடத்தும் தீயவனான ஒரு கள்ளன் மனம் திருந்தி நடந்து கொண்ட பெருந்தன்மைதான் பாராட்டுக்கு உரியது!’ சரியான பதிலைச் சொன்னதால் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏற, விக்கிரமாதித்தன் சோர்ந்து போகாமல் அதை விரட்டிச் சென்றான்.





வேதாளம் சொன்ன பிரபாவதி கதை
-----------------------------------------------
விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்து வேதாளத்தைப் பிடித்து தோளில் போட்டுக் கொண்டு புறப்பட்டான். பாதிதூரம் கடந்ததும் ‘கேள், விக்கிரமாதித்தா…’ என்று வேதாளம் மீண்டும் தனது அடுத்த கதையை சொல்லத் தொடங்கியது. ‘யமுனா நதி பாயும் செழுமையான பிரதேசங்களில் பிரம்மபுரம் என்கிற ஊர் மிகப் பிரசித்தி பெற்றது. அங்கே வேதவிற்பன்னரான விஷ்ணுசர்மா என்கிற பிராமணப் பண்டிதர் ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு ஒரேயொரு மகள். பெயர் பிரபாவதி. மிகச் சிறந்த அழகி. பாசத்துக்குரிய தனது மகளின் மேல் உயிரையே வைத்திருந்த விஷ்ணுசர்மா பிரபாவதி பருவ வயதை அடைந்ததும் அவளுக்கு மணம் செய்து வைப்பதற்காக பொருத்தமான மாப்பிள்ளையை தேடத் தொடங்கினார்.
உற்றார், உறவினர் அறிந்தோர் தெரிந்தோர் அனைவரிடமும் சொல்லி வைத்ததில் அநேக வரன்கள் வந்ததில், ராஜகுப்தம் என்னும் ஊரிலிருந்து வந்திருந்த மூன்று இளைஞர்களை விஷ்ணுசர்மாவுக்கு மிகவும் பிடித்துப் போனது. மூவருமே நன்கு படித்த அறிவாளிகள். நற்குணம் கொண்டவர்கள். மிகுந்த திறமைசாலிகள். ஒவ்வொருவருமே பிரபாவதிக்கு மிகவும் பொருத்தமானவர்கள்தான். சரி, இவர்களில் யாரை பிரபாவதிக்குக் கணவனாகத் தேர்ந்தெடுப்பது? விஷ்ணுசர்மா ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்துப் பேசினார். பிரபாவதியின் அழகில் மனம் பறி கொடுத்திருந்த ஒவ்வொருவனும் தனக்குத்தான் பிரபாவதியை திருமணம் செய்து தரவேண்டுமென்று விஷ்ணுசர்மாவை வற்புறுத்தினார்கள். அவளில்லாமல் தங்களுக்கு வாழ்க்கையே இல்லையென்று கெஞ்சினார்கள். அதற்கும் மேலாக பிரபாவதியை தனக்குத் திருமணம் செய்து தராமல் வேறு யாருக்காவது மணம் செய்துதந்தால் அந்த நிமிடமே தனது உயிரை விட்டுவிடுவதாக தற்கொலை மிரட்டலும் செய்தனர். விஷ்ணுசர்மா அதிர்ந்து போனார். அவருக்கு என்ன முடிவு எடுப்பதென்றே தெரியவில்லை. யோசித்து பதில் சொல்ல சில காலம் அவகாசம் அளிக்கும்படி இளைஞர்களைக் கேட்டுக் கொண்டார். விஷ்ணுசர்மாவின் முடிவு தெரியாமல் அங்கிருந்து செல்லப்போவதில்லை என்று தீர்மானித்து இளைஞர்கள் மூவரும் அங்கேயே தங்கி விட்டனர். நாட்கள் ஓடின. இளைஞர்களில் எவன் ஒருவனுக்கு சாதகமாக முடிவெடுத்தாலும் மற்ற இருவர் உயிர் துறந்து விடுவார்களோ என்கிற பயத்தில் விஷ்ணுசர்மாவும் நாட்களை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார்.
இளைஞர்களோ தினமும் பிரபாவதியைக் காண்பதும், அவளது அழகை ரசித்து மகிழ்வதுமே தங்களது பாக்கியமாகக் கருதி நாட்களை இனிமையாக நகர்த்திக் கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில்தான் ஒரு பெரும் துக்கம் நிகழ்ந்தது. ஒருநாள் சாதாரண ஜுரத்தில் பாதிக்கப்பட்ட பிரபாவதி போகப் போக ஜுரவேகம் அதிகமாகி பின் முற்றிலும் சுயநினைவு இழந்து மூன்றாம் நாள் இறந்தே போனாள். பிரபாவதியை நேசித்த மூன்று இளைஞர்களும் இடிந்து மனம் உடைந்து நொறுங்கிப் போனார்கள். மூவரில் ஒருவன் பிரபாவதியை தகனம் செய்த மயானத்திலேயே ஒரு குடிசை போட்டுத் தங்கி, பிச்சையெடுத்து சாப்பிட்டுக் கொண்டு அவளது சாம்பலின் மீதே படுத்துறங்கி, காலம் கழிக்கத் தொடங்கினான். மற்றொருவன், பிரபாவதியின் அஸ்திகளை எடுத்துக்கொண்டு கங்கையில் சேர்ப்பிப்பதற்காக காசிக்குப் புறப்பட்டுப் போனான். இன்னொருவனோ மனம் வெறுத்து சந்நியாசியாகி தேசாந்திரம் போனான். அப்படி தேசாந்திரம் புறப்பட்டு ஊர் ஊராகச் சென்று சந்நியாசி ஒருநாள் சந்திரபிரஸ்தம் என்னும் ஊரை அடைந்தான். அவ்வூரின் அந்தணர் ஒருவர் இவனைக் கண்டு சந்நியாசியை தனது வீட்டுக்கு உணவருந்த அழைத்துச் சென்றார். அந்தணரின் மனைவியும் துறவியை வரவேற்று வேண்டிய உபசரணைகள் செய்து, சாப்பிடுவதற்காக அவனை மனையில் அமர்த்தினாள். பின் அவர் முன் பெரும் வாழையிலையிட்டு சாதம், கறிகாய்கள், பழங்கள் வைத்துப் பரிமாறி, தேவையானதை கேட்டுக் கேட்டு உபசரித்தாள். அப்போது அவளின் குழந்தை அழுது அடம் பிடித்து விடாமல் கத்திக் கதறியது. எவ்வளவோ சமாதானம் செய்தும் அடங்காமல் குழந்தை அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, அந்தப் பெண்மணி கோபத்துடன் குழந்தையைத் தூக்கி அடுப்பு நெருப்பில் வீசியெறிந்து விட்டாள். வீசிய மாத்திரத்தில் குழந்தை நெருப்பில் பொசுங்கிப் போய் சாம்பலாகிப் போனது. இதைக் கண்ட வாலிபத் துறவி திடுக்கிட்டுப் போய், அப்படியே சாப்பாட்டிலிருந்து பாதியிலேயே எழுந்துகொண்டு அலறினான். ‘அடிப்பாவி! நீ பெண்தானா? அல்லது பிரம்மராட்சஸியா? தாய் உருவில் வந்த பேயே, ஒரு சிறு குழந்தையைப் போய் இப்படி நெருப்பிலிட்டுப் பொசுக்கி விட்டாயே? ஐயோ! இந்த வீட்டில் சாப்பிடுவதே பெரும் பாவம்! இதற்கு மேல் ஒரு விநாடியும் இங்கிருக்க மாட்டேன்!’ என்று கதறிப் புலம்பியபடி அங்கிருந்து வெளியேற முனைந்தான். அப்போது அந்த வீட்டுக்குச் சொந்தக்காரனான அந்தணன், ‘சந்நியாசியைத் தடுத்து நிறுத்தி, சிறு புன்னகையுடன் கூறினார்: ஸ்வாமி! பதறாதீர்கள்! இது இந்த வீட்டில் சகஜமாக நடப்பதுதான். குழந்தைக்கு ஒன்றும் ஆகாது. இதோ இப்போதே எனது மந்திரத்தினால் குழந்தையை உயிர்ப்பித்து விடுகிறேன்! பாருங்கள்.’ என்று சொல்லி, அந்தணன் சஞ்சீவி மந்திரத்தை உச்சரித்து, நெருப்புச் சாம்பலின் மீது கலச நீரைத் தெளிக்க குழந்தை ஒரு சிறு காயமும் இன்றி எழுந்து வந்தது. வாலிபத் துறவி மிகுந்த ஆச்சரியம் அடைந்தான். அன்றைய இரவை அங்கேயே கழித்த சந்நியாசி, அந்தணனிடம் தனக்கும் அந்த சஞ்சீவி மந்திரத்தை சொல்லித் தரும்படி மன்றாடிக் கேட்டான். மாண்டு போன தனது காதலியை உயிர்பிக்க வேண்டுமென உண்மையைக் கூறி, அவன் அந்தணனிடம் கெஞ்ச, ‘துறவியாரே! நீங்கள் இத்தனை தூரம் கெஞ்சுவதால் நான் உங்களுக்கு அந்த சஞ்சீவி மந்திரத்தை சொல்லித் தருகிறேன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உண்டு!’ என்றான் அந்தணன். ‘என்ன நிபந்தனை சொல்லுங்கள். எதுவானாலும் செய்கிறேன்!’ துடிப்புடன் கேட்டான் துறவி. ‘இந்த சஞ்சீவி மந்திரத்தை ஒருமுறை மட்டுமே அதுவும் உனது காதலியை உயிர்ப்பிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் மற்றொரு முறை பயன்படுத்தக் கூடாது. சம்மதமா?’ ‘சம்மதம். அப்படியே செய்கிறேன். அந்த ஒருமுறைக்கு மேல் சஞ்சீவி மந்திரத்தை பயன்படுத்த மாட்டேன்! இது சத்தியம்!’ அந்தணன், துறவியின் காதில் சஞ்சீவி மந்திரத்தை உபதேசித்து அனுப்பி வைத்தான். வாலிபத் துறவி மிகுந்த சந்தோஷத்துடன் இரவு பகலாக நடந்து இடையில் எங்குமே தங்காமல் பிரபாவதியை தகனம் செய்த மயானத்துக்கு வந்து சேர்ந்தான். அதே சமயம் பிரபாவதியின் அஸ்திகளை கங்கைக்குக் கொண்டு சென்ற இளைஞனும் அஸ்திகளை புனித நீராட்டிக் கொண்டு அங்கே ஊர் திரும்பியிருந்தான். முதலாம் வாலிபன் எப்போதும்போல் பிரபாவதியின் சாம்பலைப் பாதுகாத்துக்கொண்டு அங்கேயே இருந்தான். வாலிபத் துறவி, மற்ற இருவரிடமும் நடந்ததைக் கூறி, ‘நண்பா, நீ பிரபாவதியின் சாம்பலைக் குவித்து வை. காசிக்குச் சென்று வந்த நீ அவளது அஸ்திகளை சாம்பலிலேயே போடு. நான் சஞ்சீவி மந்திரத்தைச் சொல்லி அவளை உயிர் பிழைக்க வைத்து விடுகிறேன்!’ என்று சொல்லி அது போலவே செய்தான். துறவி, சஞ்சீவி மந்திரத்தை உச்சாடனம் செய்து நீர் தெளித்ததுமே பிரபாவதி மாறாத பேரழகுடன் முன் போலவே எழுந்து வந்தாள். அதிசயம் நிகழ்ந்த அடுத்த கணமே அங்கே பெரும் சண்டை மூண்டது! ஆம்! பிரபாவதியின் அழகில் மயங்கி கிறங்கிப் போன மூவரும், உயிருடன் வந்த பிரபாவதி தனக்குத்தான் சொந்தம் என்றும், அவள் தன்னைத் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் தங்களுக்குள் சண்டையிடத் தொடங்கினார்கள். ஒவ்வொருவருமே தன்னால்தான் பிரபாவதி உயிர்பிழைத்தாள் என்று கூறி உரிமை கொண்டாடினார்கள். ‘எனது சஞ்சீவி மந்திரத்தால்தால் பிரபாவதி உயிர் பிழைத்தாள். எனவே அவள் என்னைத்தான் மணந்துகொள்ள வேண்டும்!’ என்றான் ஒருவன். அவளது அஸ்திகளை காசியில் திருமுழுக்காட்டிக் கொண்டு வந்தவனோ, ‘நான் அவளது அஸ்திகளை கங்கை நதியில் முழுக்காட்டிய புண்ணியத்தால்தான் உயிர் பிழைத்தாள். ஆகையால் அவள் எனக்கே மனைவியாவாள்!’ என்று வாதிட்டான். இன்னொருவனோ, ‘நான் பிரபாவதியின் சாம்பலை பாதுகாத்து வந்ததால்தானே அவள் உயிருடன் வருவது நிகழ்ந்தது! இல்லாவிட்டால் அவள் உயிர் பிழைத்தது எங்ஙனம் நிகழ்ந்திருக்கும்? எனவே அவள் எனது உடமை’ என்று அடித்துச் சொன்னான்.’ -இந்த விதமாக கதையை முடித்த வேதாளம், விக்கிரமாதித்தனிடம் கேட்டது, ‘சொல்லுமய்யா மகாராஜனே! அந்தப் பெண் பிரபாவதி யாருக்குச் சொந்தமாவாள்? அவர்களது வாதத்தில் உள்ள நியாயம் என்ன? விடை தெரிந்தும் சொல்லாவிட்டால் உனது தலை சிதறி விடும்!’ என்று கேட்டது. விக்கிரமாதித்தன் விளக்கமாக பதில் கூறினான்: வேதாளமே, மந்திரத்தால் அந்தப் பெண்ணை உயிர் பெறச் செய்தவன் நிச்சயமாக அவளது கணவனாக மாட்டான். ஏனென்றால் அவளுக்கு உயிர் கொடுத்தவன் தந்தை ஸ்தானத்துக்கே ஒப்பானவன் ஆவான். அதுபோலவே பிரபாவதியின் அஸ்தி எலும்புகளை கங்கைக்கு எடுத்துச் சென்றவன் அவளுக்கு மகனாவான். அவளது சாம்பலை விட்டுப் பிரியாமல் கட்டித் தழுவி மயானத்திலேயே தங்கி பாதுகாத்துக் கொண்டிருந்தவனே அவளது கணவன் ஆவான்!’ என்று கூறினான். விக்கிரமாதித்தனுடைய இந்த சரியான பதிலால் வேதாளம் அவனது தோளிலிருந்து புறப்பட்டு முருங்கை மரத்துக்கே சென்று சேர்ந்தது. முனிவன் ஞானசீலனுக்குக் கொடுத்த வாக்குப்படி வேதாளத்தைப் பிடித்து வர விடாமுயற்சியுடன் மீண்டும் புறப்பட்டான் விக்கிரமாதித்தன்.

நாள் : 26-Jul-17, 7:13 pm

மேலே