நேற்று மாலை வழக்கம் போலவே வாக்கிங் கிளம்பினேன். நான் எப்போதும் செல்கின்ற வழியே சென்றேன். அந்த வீதியில் ஒரு வீட்டின் வெளியே மிகவும் வயதான பாட்டி ஒருவர் அமர்ந்திருப்பார். சில நேரங்களில் அவருடன் மேலும் ஒருவர் பக்கத்தில் இருப்பதும் அவர்கள் தீவிரமாக அவரவர் வாழ்க்கை நிகழ்வுகள் அல்லது அன்றைய சம்பவங்கள் பற்றி பேசிக் கொண்டு இருப்பதும் நான் காணும் காட்சிகளில் ஒன்று. நானே பலமுறை அந்தப் பாட்டியின் அருகில் சென்று பத்து ரூபாய் கொடுத்து விட்டு தொடர்வேன் எனது நடையை.ஒவ்வொரு முறையும் அந்த மூதாட்டி வாங்கி கொண்டு தன் இருகரங்களை கூப்பி வணக்கம் சொல்வது வழக்கம்தான். சில முறை நான் மறந்து அவரை கடந்து சென்றால் தம்பி என்று அழைத்து காசு கேட்பார். பெரும்பாலும் கையில் பத்து ரூபாய் இருந்தால் நிச்சயம் தந்திடுவேன். இல்லை என்றால் சில்லறை இல்லையம்மா என்று கூறி நாளைக்கு தருகிறேன் என்றதும் சரி என்பார்.
நேற்று அந்த பக்கம் கடந்து செல்லும் போது வேறு ஒரு பாட்டி படுத்திருந்தார். உடனே நான் எங்கம்மா எப்பவும் ஒரு பாட்டி இருப்பாரே அவரைக் காணோமே என்று கவலையுடன் கேட்டேன். அதற்கு அவர் அந்தப் பாட்டி உடல்நலம் சரியில்லை. ஆகவே அருகில் உள்ள மருந்து கடைக்கு சென்றுள்ளார் என்றார்.அதுமட்டுமல்லப்பா எனக்கும் காய்ச்சல் காலையில் இருந்து என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை கடந்து செல்லவும் மனமில்லை.
என்ன சாப்பிட்டீர்கள் என்றதும் ஒன்றுமில்லை என்று கூறினார்.நான் ஏதும் பேசாமல் கடந்து சென்று விட்டேன். ஆனாலும் உள்ளத்தில் ஓர் உறுத்தல் எழுந்தது. பாவம் அவர்களுக்கு ஒன்றும் தரவும் இல்லை. கேட்கவும் இல்லை என்று. சிறிது நேரம் குழம்பி விட்டேன்.பிறகு நேராக மிகவும் அருகில் உள்ள ஒரு பேக்கரிக்கு சென்று முழு ரொட்டி பேக்கட் ஒன்று வாங்கி கொண்டு மறுபடியும் அந்த பாட்டி இருந்த இடத்திற்கு வந்து அவரை எழுப்பினேன். அதற்குள் படுத்திருந்தார்.அந்த ரொட்டியை அவர் கையில் கொடுத்து மருந்து கடைக்கு சென்றுள்ள பாட்டியும் வந்தவுடன் இருவரும் சேர்ந்து சாப்பிடுங்கள் என்று கூறிவிட்டு மீண்டும் எனது வாக்கிங்கை தொடர்ந்தேன்.
வழக்கம் போல சிறிது தூரம் சென்று விட்டு மீண்டும் திரும்பி அதே வழியே வந்தேன். அப்போது தான் கவனித்தேன் . அந்த இரண்டு பாட்டிகள் இல்லாமல் வேறு ஒரு முதியவரும் அவர்களுடன் சேர்ந்து ரொட்டியை பிரித்து பங்கிட்டுக் கொண்டு சாப்பிடுவது கண்டு நெகிழ்ந்து விட்டேன்.மூன்று பேரும் நடைபாதையில் வசிப்பவர்கள். அந்த நிலையிலும் வறுமையின் விளிம்பில் இருந்தாலும் அவர்களிடையே உள்ள ஒற்றுமை , இருப்பதை பங்கிட்டு சாப்பிட வேண்டும் என்ற உயர்ந்த பண்பை நினைத்து சிலிர்த்து போனேன்.நான் அவர்கள் அருகில் சென்று வழக்கமாக உள்ள பாட்டியிடம் நலம் விசாரித்து விட்டு இந்த ரொட்டி உங்களுக்கு போதுமா என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தாராளமாக போதும். மிகவும் நன்றிப்பா நீ நல்லா இருக்கனும்பா என்று தழுதழுத்த குரலில் சொன்னதும் ஏதோ தெரியவில்லை எனது மனதில் ஒருவித மகிழ்ச்சியும் சற்று கனக்கவும் செய்தது.அவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டே வீடு திரும்பினேன்.அன்று இரவு முழுவதும் சரியாக தூங்கவில்லை.
அவர்களைப் போல எத்தனை பேர் தினமும் கஷ்டப்படுகிறார்களோ என்று நினைத்துக் கொண்டே இருந்தேன்.சாதாரணமாக நான் என்னால் முடிந்த அளவுக்கு ஏழைகளுக்கு சிறுவழியிலாவது உதவிகள் செய்து வருகிறேன். நான் வெளியில் கூறுவது இல்லை. எனது மனசாட்சிக்கு தெரியும்.
அனைவரையும் நான் வேண்டிக் கேட்டுக் கொள்வது இயன்றவரை ஏழைகளுக்கு உதவிடுங்கள் என்பதே.
பழனி குமார்