" பூங்காற்றே நீ வீசும் திசையில் மத்தாப்பு; பூக்களே!...
"பூங்காற்றே நீ வீசும் திசையில் மத்தாப்பு; பூக்களே! நீ வாசம் சிந்தும் தித்திப்பு; மடந்தை நெற்றியில் சிகப்பு நிலா; குழந்தை சிரிப்பில் பிறந்த உலா; தாரகை போல மின்னும்விளக்கு; இடியும் மின்னலும் போல் வெடிக்குது பட்டாசு; மனதோடு மனிதம் பேசும்; கண்ணீரில் அன்பு விளையும்; பிரிவுகளும் இணைவில் சேரும்; காதோடு கண்மணி பேச மனதோடு இன்பம் போங்க; சுமந்த நிழலில் ஆசிர்வாதம் வாங்கி; மதியோடு சிறு தூக்கம் கண்டு, கடந்து போன மழலையை சிறு நொடிகள் மீட்கும் இனிய நொடிகள் பொழுதோடு கரைந்து மனதோடு கதை பேச ஆயத்தமாகிறது"
"புல்லாங்குழல் விற்பவனுக்கு செவிகள் கேட்பதில்லை; ஓவியங்கள் வரைபவன் குருடனாக இருக்கிறான்; முயற்சியில் முயல்பவன் முடவனாக ஓடுகிறான்; பாலைவனமும் பால்மழையை நம்பித்தான் மணற்புழுதியில் தேடலை தொடர்கிறது ; ஆபிரிக்க தேசமே ஒரு பிடி உணவின்றி கல்லறையாகுது; பசுமை நிலத்தில் கரசக்காட்டு முட்கள் போல உழவன் சடலங்கள் குவியுது;
மனிதனை மனிதனே அழித்து இரைப்பை ஆற்றும் அவலமும் மண்ணில் உள்ளது; பெண்மையும்
வன்மையில் பரிதாபமாகிப் போகிறது குற்றங்கள் குறையட்டும் நரகசூரனை கொன்றழித்த நாளைய உதயத்தில்"
"ஏழையின் இரைப்பையில் ஒரு பிடி உணவாகவும்; காயப்பட்டவன் உள்ளத்தில் ஒரு பிடி மனிதமாகவும்; முதுமையில் இல்லங்களில் அன்பின் மழைத்துளிகள் போல அன்பு வெள்ளம் சிந்தவும்; அனாதைகளின் இதழ்களில் அன்பெனும் புன்னகையாய் எண்ணங்கள் ஓடியாடி விளையாடவும்; நட்பின் புரிதலில் வசந்தம் தொடங்கவும்; பகைவனின் எண்ணமும் நட்பை நாடி அலையவும் நாளை திருநாள் மாற்றம் கொடுக்கட்டும்"
"தளத்தில் உள்ள அணைத்து இலங்கை வாழ் மற்றும் கரை கடந்த தமிழ் சொந்தங்கள் எல்லோருக்கும் மனம் நிறைந்த இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்"