நாங்கள் சபிக்கப்பட்டவர்கள் பெற்றவள் அரவணைப்புக்கு ஏங்கும் எங்களை மார்பில்...
நாங்கள் சபிக்கப்பட்டவர்கள்
பெற்றவள் அரவணைப்புக்கு ஏங்கும் எங்களை மார்பில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்து தொட்டிலில் கிடத்தி தாலாட்டி நிம்மதியாக தூங்குகிறானென்று நினைத்து இன்னொரு குழந்தைக்கு பாலூட்டிய படியே பார்த்து மகிழ்வீர்கள் .......!
பச்சாதாபம் பார்க்காமல் எங்கள் மழலை பருவத்தை அடிதடி வன்முறைகள் நிரப்பி பாழாக்குவீர்கள் .......!
வெறும் தோலும் சதையுமல்ல பெண்களென்று போராடும் போதும் எங்கள் வெளித் தோற்றத்தை விரும்பி விமர்சிப்பீர்கள் ......!
காதலில் தவித்து காமத்தை சுவைத்தால் தான்
தாம்பத்யம் தழைக்குமென்போம் வாத்சாயனர் வாரிசென வாய்விட்டு கேலி சிரிப்பீர்கள் .......!
பசிக்கு பலியாகும் விலங்குகளுக்காக வருத்தம் கோரவில்லை பேராசை பூதம் விழுங்கி ஏப்பம் விட்டு காணாமல் போகும் இனங்களுக்காக அழுது புலம்புகின்றோம் .......!
செயற்கை வேலையை சுலபமாக்கும் இயற்கையே வாழ்வை வளமாக்கும் என கூவும் போது சம்பாதிக்க துப்பில்லாதவன் பேச்சிலென்ன லாபமென கேட்க மறுப்பீர்கள் .......!
உணர்வுகளை உங்களுக்கு கடத்த மொழியில்லாமல் மௌனித்து விடும் எங்களை ஏதுமறியா ஏமாளியென ஏளனம் செய்வீர்கள் .......!
முரண்பாடான சமூகத்தில் முறையாக வாழ முடியாமல் புறக்கணிக்க முயன்றால் தற்கொலை பண்ணி கொள்பவன் கோழை வாழ வழி தெரியாதவனென்று வசை பாடுவீர்கள் .......!
மெய்யன்பு நேசம் நாடும் எங்களை தான் சில பெண்கள் (ஆண்களோ) ஆறுதல் அளிப்பது போல் பேசி ஆதாயம் தேடிக் கொண்டு நிரந்தர பிணமாக உங்கள் நினைவுகளோடு தனிமையில் நாறவிடுவீர்கள் ........!
பிறப்பிலிருந்து இறப்பு வரை எங்களோடு நிலையாக நீடிப்பது எங்களை பீடித்த நிறைவேறாத ஏக்கங்களே .......!
சுதாகர் செல்லா