எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

​​​அனுபவத்தின் குரல் - 73 ----------------------------------- ஆகஸ்ட் 15ம்...

  ​​​அனுபவத்தின் குரல் - 73 
-----------------------------------



ஆகஸ்ட் 15ம் நாள் நாட்டின் சுதந்திர தினத்தையும் ,ஜனவரி 26 ஐ குடியரசு தினமாகவும் அனுசரிக்கும் நாம் அதை உண்மையாக கொண்டாடுகிறோமா ...​அல்லது அன்று ஒருநாளாவது நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களையும் உயிர் தியாகங்கள் செய்த வீரர்களையும் ,போராளிகளையும் ,தலைவர்களையும் நினைத்து பார்க்க்கிறோமா ...என்று அவரவர் மனசாட்சிப்படி கூறுங்கள் . ஏதோ அன்று பொது விடுமுறை என்ற அளவில் பொழுதை போக்குவதும் , வெளியில் சென்று மகிழ்வதும் அல்லது வேறு வழியே இன்றி தொலைக்காட்சிகளுக்கு முன்னால் அமர்ந்து காலத்தை கழிப்பதும்தான் நடக்கிறது ...(நான் உட்பட) .


உண்மையில் இதை அனுபவிக்க காரணமாக இருந்தவர்களை நினைப்பதும் இல்லை அவர்களைப்ற்றி பேசுவதும் இல்லை . இதில் ஒருசிலர் விதிவிலக்காக இருக்கலாம் . ஆனாலும் அவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகத்தான் இருக்கும் . இன்று நாம் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம் என்றால் , சுயமாக செயல்படுகிறோம் என்றால் , அதற்கு அடிப்படையே நாம் பெற்ற சுதந்திரம் தானே .நாமும் அடுத்து வருகின்ற தலைமுறைகளும் மகிழ்ச்சியுடன் வாழ்வகற்கு , அன்று போராடிய உத்தமர் காந்தி அடிகள் முதல் பல்வேறு தலைவர்கள் எந்த அளவுக்கு தங்களை வருத்திக் கொண்டு போராடினார்கள் என்பதை நமக்கு வரலாறு கூறுகிறது . நமக்கு முந்தைய தலைமுறையினர் அதை நேரில் கண்டு பல இன்னல்களுக்கு ஆளாகி இருப்பார்கள் என்பதை நிச்சயம் அறிவோம் . ஆனால் சுதந்திரத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்தி முன்னேற்றம் அடைந்தோமா என்றால் அது கேள்விக்குறிதான் . ஒவ்வொருவருக்கும் இதில் கருத்து மாறுபாடுகள் இருக்கலாம் . ஆனாலும் பொதுவாக நாம் எதிர்பார்த்த அளவிற்கு சமுதாயத்தில் பெரிய ,மாற்றம் காண முடியவில்லை என்பதே யதார்த்த உண்மை .


இன்னும் சாதிமத பாகுபாடுகள் , மொழிவாரி இனம் சார்ந்த பிரச்சினைகள் , மாநிலங்களுக்கு இடையில் உள்ள கருத்து கலாச்சார வேறுபாடுகள் , முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கிறது . இதை யாரும் மறுக்க முடியாது . சிலவற்றை வெளிப்படையாக காண முடிகிறது . சில மறைமுக குறைகளும் நிலவுகிறது . அரசியல் சூழ்நிலைகள் அடியோடு மாறிவிட்டது . ஜனநாயகம் சிறிதுசிறிதாக தேய்ந்து வருகின்றது . மக்களின் மனநிலை எப்பொழுதும் இருள் சூழ்ந்த வானமாகத்தான் இருக்கிறது . கலாச்சார சீரழிவுகள் , முற்றிலும் மாறுபட்ட பழக்க வழக்கங்கள் சமூகத்தில் மேலோங்கி நிற்கிறது . நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் அநாகரீகம் வளர்ந்து தழைக்கத் தொடங்கியுள்ளது . அது எதிர்காலத்திற்கு ஏற்றதும் அல்ல , வளரும் தலைமுறைக்கு உகந்ததும் அல்ல .மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது . இளைய தலைமுறை உணர வேண்டிய நேரம் இது . இதற்கு விளக்கம் தேவையில்லை , விளங்கிக் கொள்வீர் என்று நினைக்கிறேன் . இது எனது அக்கால மற்றும் இக்கால அனுபவத்தின் குரல் .


பழனி குமார்  

நாள் : 26-Jan-18, 4:16 pm

மேலே