அனுபவத்தின் குரல் - 94 *********************************** *********************************** ஒருவர்...
அனுபவத்தின் குரல் - 94
***********************************
***********************************
ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் நல்லவராக வல்லவராக இருக்கலாம் . பணியில் , பணிவில் , நட்பில் , குடும்பத்தில் , பேச்சில் , எழுத்தில் என பலவேறு கண்ணோட்டத்திலும் . இப்படி அனைத்து துறைகளிலும் பாராட்டப்படலாம் , நல்லமுறையாக விமரிசிக்கப்படலாம் , பலராலும் போற்றப்படலாம் . உண்மையில் இப்படி அனைத்திலும் முதன்மையாக விளங்குவது என்பதும் மிகவும் அபூர்வமான ஒன்றுதான் . நானும் எனது வாழ்க்கையில் இன்றுவரை அதுபோல கண்டவர்கள் / சந்தித்தவர்கள் மிகவும் சிலரே . விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே . ஒரு சிலர் அறிவில் சிறந்தவர்களாக இருப்பர் ஆனால் குணத்தில் மாறுபட்டு இருப்பர். அதுபோல பலரும் ஏதோ ஒருவித குணாதிசயங்களில் மாறுபட்டு இருப்பது இயற்கை . சிலருக்கு எழுத்துத் திறன் மேலோங்கி இருக்கும் , பேச்சாற்றல் துளியும் இருக்காது .ஒரு சிலர் நன்றாக அழகாக நகைச்சுவையாகவும் பேசுவர் ,ஆனால் எழுத வரும்போது தடுமாற்றம் இருக்கும் . எனக்கு இரண்டும் குறைவு தான் எனபதை ஒப்புக் கொள்ள வேண்டும் .இது தாழ்வுமனப்பான்மையும் அல்ல , அவையடக்கமும் அல்ல , உண்மையை கூறுகிறேன் .
நான் இவ்வளவும் எதற்காக குறிப்பிட்டேன் என்றால் , ஒரு குடம் பாலில் சிறு துளி விஷம் கலந்தால் அது எப்படி முற்றிலும் விஷம் என்று கருதப்படுகிறதோ , கூறப்படுகிறதோ அப்படித்தான் ஒருவருக்கு அத்தனை நற்குணங்கள் நிறைந்து இருந்தாலும் , சிலவேளைகளில் அல்லது ஒரு குறிப்பிட்ட குணத்தில் , கோணத்தில் , செயலில் குற்றமோ குறையோ இருந்தால் அவை அத்தனையும் மறைந்து போகும். மக்கள் மனதில் அந்த தவறு மட்டுமே மிகுந்து உணரப்படும் . தவறில்லை தான். முற்றும் துறந்த முனிவர்கள் என்று கூறிக்கொண்டே இன்று பலர் சில கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு அந்த துறவி என்னும் நிலையை அசுத்தப்படுத்துகிறார்கள் என்பது நாடறிந்த உண்மை . பகலில் புனிதனாக வேடமிட்டு இரவில் அசாதாரண மனிதனாக செயல்படுவது எந்த அளவு கேவலமான ஒன்று என்பதை அறிகின்ற பொழுதில் நமது மனதில் ஆவேசமும் ஆத்திரமும் கோபமும் பொங்கி எழுவது தானாக நிகழ்வது .
ஆகவே புறத்தூய்மையைவிட, அகத்தூய்மை என்பது மிகவும் அவசியம் ஒரு மனிதனுக்கு . ஒரு சிலர் வாதாடுவர் , அல்லது விவாதிப்பர் . மனிதன் என்றாலே சில குறையாவது இருக்க வேண்டும் , முழுமையான நல்ல மனிதன் என்றிருப்பதும் பெயர் எடுப்பதும் , புகழ் பெறுவதும் இயலாதது என்று . அதையும் வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் , நாம் அனைவரும் முழு மனிதனாக அத்தனை நல்ல குணங்களுடன் வாழ்ந்திட முயற்சிக்க வேண்டும் . என்றும் நல்லவர்களின் பெயரும் புகழும் மறைவதில்லை . என்றும் உதாரண புருஷர்களாக , வழிகாட்டும் கலங்கரை விளக்காக , நல்லறிவை காட்டும் வழிகாட்டிகளாக , அடையாள சின்னங்களாக , அனுவபத்தின் உருவங்களாக திழந்து கொண்டு இருக்கிறார்கள் . நல்லதையே சிந்திப்போம் , நல்வழியில் பயணிப்போம் , நற்செயல்களையே ஆற்றிடுவோம் . அனைவருக்கும் வாழ்த்துகள் .
பழனி குமார்