எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

​அனுபவத்தின் குரல் - 96 -------------------------------------- ​ஒரு சிலர்...

​அனுபவத்தின் குரல் - 96 
--------------------------------------

​ஒரு சிலர் என்னிடம் பேசும்போது சாதாரணமாக கூறுவர் , அவ்வளவுதான் என் காலம் முடிந்துவிட்டது , இதுதான் என்னுடைய நிரந்தர நிலை என்று. அது அவர்களின் விரக்தியின் வெளிப்பாடா , வாழ்வின் விளிம்பில் நிற்கிறார்களா அல்லது நெஞ்சில் நிறைந்து வழியும் ஆதங்கத்தின் பாதிப்பா ...என்று தெரியவில்லை . ஒருவேளை போதுமென்ற மனதுடன் இருப்பவர்களா , இனி ஏதும் வாழ்வில் வளர்ச்சியடைய வழியில்லையென்று எடுத்த ஆழ்மனதின் குரலா என்றும் தெரியவில்லை . இது அவர்களின் கற்பனை எண்ணத்தால் விளைந்த ஏகோபித்த முடிவா என்றும் புரியவில்லை . அல்லது உணர்ந்து கொண்ட வாழ்க்கை சித்தாந்தத்தின் சிந்தனைத் துளிகளா என்றும் அறியேன் நான் . தாம் மேலும் மேலும் உயர நினைப்பவர்கள் , உவகையின் உச்சத்தைத் தொட விரும்புவர்கள் , அதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் நிச்சயம் அப்படி கூறமாட்டார்கள் . மனிதனாய் பிறந்த எவருக்கும் , என்னையும் சேர்த்துதான் , வாழ்க்கையின் எல்லையும் தெரியாது , முடிவின் விளிம்பும் தெரியாது , இறுதி நொடிப்பொழுதும் தெரியாது என்பது உண்மை . பின்பு ஏன் இந்த புலம்பல் , கூக்குரல் , பிதற்றல் அல்லது சோகம் ததும்பும் வசனங்கள் ...? 

அது அவரது தாழ்வு மனப்பான்மை என்றும் கூறலாம் ...தோல்வியின் அழுகுரல் என்றும் எடுத்துக் கொள்ளலாம் . நிறைவேறா ஆசையின் அலறல் என்றும் நினைக்கலாம் . ஆனால் அவர்கள் அனைவருக்கு ஒன்று கூறிட விரும்புவது அறிவுரையாக அல்ல , அனுபவத்தின் குரலாக ...அதுதான் முடிவல்ல எவருக்கும் . அந்த நிலைதான் இறுதியும் அல்ல வாழ்க்கையில் . அறிவும் ஆற்றலும் உழைப்பும் உண்மையும் இணைந்துள்ள ஒருவருக்கு என்றுமே தோல்வி என்பது நிலையல்ல ...அடுத்து பெறவுள்ள வெற்றியின் ஆரம்பநிலைதான் அது . அதனை மனதில் கொள்ளுங்கள் . ஒருவருக்கு ஏற்படும் மன உளைச்சலும் , வெறுப்பும் , விரக்தியும் , வேதனையும் , துக்கமும் , உள்ளத்து சோர்வும் நிரந்தரமல்ல ...இதனை ஆழமாக புரிந்து கொள்ளுங்கள் . 

இதுபோன்ற செயற்கை நிலைமாறி , எண்ணத்தில் தொய்வு ஏற்பட்டு செயல்களில் தேக்கம் ஏற்பட்டால் நாம் எதையும் சாதிக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை . பல தடைகளை கடந்துதான் , குறுக்கீடுகளை உடைத்தெறிந்துதான் , வலிவான நெஞ்சுறுதியால்தான் , இமாலய வெற்றியை அடைய முடியும் . வலுவான தேகம் மட்டும் போதாது வலிமை மிகுந்த அகமும் இருந்திடல் வேண்டும் . வளர்ச்சியை அல்லது ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும்போது , உடலாலும் மனதாலும் தளர்ச்சி அடைய கூடாது . அப்படி இருந்து சாதித்து காட்டியவர்கள் பலரும் இந்த உலகத்தில் வாழ்ந்து மறைந்துள்ளனர் , இன்னும் பலர் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள் . அவர்களை போன்றவர்களின் சாதனையாளர்களின் வாழ்க்கையே நமக்கு ஒரு பாடம் . ஒரு வெற்றியை அடைய நாமே ஒரு அளவுகோலை நிர்ணயிக்க முடியாது . அதற்கு நமக்கெல்லாம் பண்பட்ட பகுத்தறிவுதான் துணை நிற்கும் .நமது வெற்றியும் வாழ்க்கையின் மகிழிச்சியும் நமது கையில் தான் உள்ளது . இது எனது அனுபவத்தின் குரல் . அனைவரும் உவகையும் எல்லையில்லா இனபமும் பெற்றிட வாழ்த்துகள் . ஏமாற்றம் எனும் இருள் அகல ஒளிமிகுந்த வாழ்க்கை நிலைத்திட , நம்பிக்கை எனும் திருவிளக்கை ஏற்றிடுங்கள் . வெற்றி நமதே .

     
  பழனி குமார்

நாள் : 15-Mar-18, 11:25 am

மேலே