ஆடல்வல்லான் சிற்பத்தின் அமைவிடம்-இறவாதீஸ்வரர் கோயில்--காஞ்சிபுரம் கருவறை விமானம் மேற்குபுற...
ஆடல்வல்லான்
சிற்பத்தின் அமைவிடம்-இறவாதீஸ்வரர் கோயில்--காஞ்சிபுரம்
கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
எட்டுத்திருக்கைகளுடன் ஆடல்வல்லான் அமர்ந்தாடும் கோலம்
ஆக்கப் பொருள்--மணல் கல்
காலம் / ஆட்சியாளர்---கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
ஆடல்வல்லான்
108 ஆடல் வகைகளில் ஒன்றான இக்கரணம் இராஜசிம்ம பல்லவனுக்கு மிகவும் விருப்பமானதாக இருக்க வேண்டும். இக்கரணத்தில் இறைவன் எட்டுத் திருக்கைகளுடன் திகழ்கிறார். ஜடாமகுடம் தரித்துள்ளார். மார்பில் முப்புரிநூல் உடலின் பின்புறம் செல்கிறது. கைகளில் தோள்வளைகளும், முன்வளைகளும் காட்டப்பட்டுள்ளன. அரையாடை அணிந்துள்ள இறைவன் ஆடல்வல்லான் கருடாசனத்தில் அமர்ந்தவாறு இடது காலை பின்பக்கமாக வளைத்து உயர்த்தியுள்ளார். இடையின் ஆடை முன்னே தொங்குகிறது. வலது முன் கை மார்பின் குறுக்காக செல்கிறது. இடது முன் கை மேல் நோக்கி தலைக்கு மேலே சென்று வளைந்துள்ளது. மற்ற கைகளில் வியப்பு முத்திரை, கடக முத்திரை, உடுக்கை, நாகம், ஆகியன தெரிகின்றன. உடலை முன்பக்கமாக பக்கவாட்டில் நகர்த்தி ஆடும் நடமாக இது அமைந்துள்ளது.