ஞானத்தை நோக்கி.... ××××××××××××××××× பத்துவயது பாலகத்தில் பள்ளிக்கூட நண்பனை...
ஞானத்தை நோக்கி....
×××××××××××××××××
பத்துவயது பாலகத்தில்
பள்ளிக்கூட நண்பனை
படாரென அடித்தப் படம்
கண் முன்னே கடை விரிக்கிறது
பாவத்தின் ஆரம்பம் அது
பதின்வயது தொடக்கத்தில்
படுத்திருந்தத் தாவணியை
பருகப் படபடத்தப் படம்
மனப்பெட்டிக்குள்
இற்றுப்போய் இருக்கிறது
பாவத்தின்
அடுத்தக் கட்டமது
இருபதுகள் தந்த இரும்புத்தேகம்
இளைத்தவனையெல்லாம்
இடித்து அழித்தது
இளித்தவளையெல்லாம்
இறுக்கி அணைத்தது
பாவத்தின்
மூன்றாம் கட்டமது
நாற்பதுகளில் நகர்ந்தப்போது
நளினங்களை நக்கிப்பார்க்க
நரித்தனம் நாக்கைச் சுழற்றியது
பாவத்தின்
நான்காம் கட்டமது
ஐம்பதுகளின் நுழைவாயில்
ஐசுவரியங்களை அணிந்துக்கொள்ள
அளித்தவனுக்கே
அரளிப்பால் கொடுத்தது
பாவத்தின்
ஐந்தாம் கட்டமது
அறுபதில் அமர்ந்தபோது
ஐம்பாவங்களின் புழுக்கம்
அறிவுக்கு அரிப்பை அளித்தது
அரிப்பெடுத்த அறிவு
அனுபவ அருவியில்
அழுக்கைக் கழுவியது
அமைதியாடையால்
ஆன்மாவை அலங்கரித்தது
அருகில் வந்த
அடுத்த வாரிசுகளிடம்
ஐம்பாவங்கள் அணியாதேவென்று
அறிவுரையை அள்ளித் தெளித்தது
அடுத்த வாரிசுகளின் ஆட்டமும்
அங்கே ஆரம்பமானது.
ஆக்கியோன் :: வண்டப்புலி வைரமுத்து