பள்ளிக் கூடம் எங்கள் கல்விக்கூடம் கரும்பலகை போலவரே இருந்தார்!...
பள்ளிக் கூடம் எங்கள் கல்விக்கூடம்
கரும்பலகை போலவரே இருந்தார்! வெள்ளை
கட்டிச் சுண்ணம் போல உடையே கொண்டார்!
விரும்புகின்ற பலபேர்கள் கல்வி யின்றி
விருப்பமில்லா பணிசெய்து வருதல் கண்டார்!
அரும்புகளில் சிலபேர்கள் மாடே மேய்த்து
அறிவற்ற நிலைதனிலே இருத்தல் பார்த்தார்
கருத்துகேட்க களமதிலே அவரே நின்றார்!
கண்டதொரு சிறுவனிடம் வினவல் செய்தார்!
வறுமையினை கேட்டவரே சிறுமை கொண்டார்
வளம்செழிக்க, கல்விதர வகுத்தார் திட்டம்!
மறுவாழ்வு தந்திடவே, உணவு கல்வி
மறுக்காது வழங்க வைத்தார்! செய்தார் நன்மை!
சிறுவருக்கே ஒவ்வொன்றாய்த் தொடக்கப் பள்ளி
சிறப்பாகத் தொடங்கி வைத்தார்! தொடக்கக்கல்வி
பெறுவதற்கே இருக்கின்ற தடையை நீக்கி,
பெருமளவில் குழந்தைகளை படிக்கச்சொல்லி,
நறுமலராம் கல்வியினை நுகரச் செய்தார்!
நற்கல்வி வழங்கிடவே தேர்வுசெய்து,
வீறுகொண்ட ஆசானை அனுப்பிவைத்தார்
வீண் செலவு செய்யாத அவரும் கல்வி
பெருகிடவே செலவு பல செய்தார் காணீர்!
பெருமளவில் முன்னேற்றம் அன்றே கண்டார்
வேறுபட்ட சிந்தனையால் மாறுபட்டே
வேழமென அவர் நின்றார் வெற்றி கண்டார்!