உயர்வு தரும் வியர்வை உழைக்க மறந்தவன் ஏழை -ஆனால்...
உயர்வு தரும் வியர்வை
உழைக்க மறந்தவன் ஏழை -ஆனால்
பிறர் உழைப்பில் வாழ்பவன் கோழை
உழைக்கப் பிறந்தவன் மனிதன் -பிறர் உழைப்பில்
தழைக்க நினைப்பவன் பித்தன்
கடின உழைப்பே வெற்றி -அது
உச்சத்தில் வைக்கும் போற்றி
உழைத்தால் தொலையும் சனி -உள்ளத்தில்
விளையும் மகிழ்ச்சிக் கனி
ஓயாமல் உழைக்கும் ஞாயிறு -உழைப்பாளி
ஓய்வெடுக்கும் நாளோ வாரத்தின் ஞாயிறு
விடுப்பின்றி உழை - வந்துவிடும்
வருவாய் திங்களில்
ஊதியம் கிடைத்தால் சிரிப்புத்தான் செவ்வாயில்
சரியாக உழைப்பவனுக்கே -புதன் புத்தி
உழைப்பவனுக்கே உலகம் -அவன் வாழ்வில்
வெள்ளி முளைக்கும்
உழைப்பு இருந்தால் படைப்பு
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உழைப்பே சிறப்பு
இயலாமை முயலாமை உழைப்பைச் சுரண்டும்
உழைக்கும் வரை மனிதன்
உழைப்பை மதிப்பவன் புனிதன்
உழைப்பின் எச்சில் வியர்வை -என்றும்
அதுவே போக்கும் சோர்வை -இனி
உயர்வைத் தரும் வியர்வை
அதுவே உழைப்பவன் போர்வை