ஏன் மாஸ்க் அணிவது அவசியம் ? இதுவரை சுமார்...
ஏன் மாஸ்க் அணிவது அவசியம் ?
இதுவரை சுமார் 2,907,944 பேரை காவு கொண்ட கொரோனா, இப்போது தனது இரண்டாம் இன்னிங்ஸ் இனிதே ஆரம்பித்து விட்டது. போன முறை ஏற்படுத்திய தாக்கங்களை விடவும் இந்த முறை ஏற்படுத்த போகும் தாக்கங்கள் அதிகமாக இருக்குமென அறிவியல் உலகம் ஐயமுறுகிறது. கொரோனாவின் முதல் தாக்குதலையே சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும்போது, உலகின் பல நாடுகளையும் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த முறை தாக்குதல் மேலும் பலமாக இருக்கிறது. இதற்கான முக்கிய காரணம், திடீர் மாற்றம் (Mutations) ! ஆம், ஒவ்வொரு மனிதனையும் ஒரு சோதனை குடுவைபோல் கற்பனை செய்துகொள்ளுங்கள், அதில் பல்கி பெருகும் இந்த வைரஸ், அந்த மனிதனுக்கு ஏற்படுத்தும் இன்னல்கள் ஒருபுறம், மறுபுறம் பல்கிப்பெருக்கும் இந்த வைரஸ் தனது மரபணுக்களில் எற்படும் திடீர் மாற்றங்கள். அதன் காரணமாக உருவாகும் மாற்றமுற்ற கொரோனா வைரஸ் வகைகள், அதீத வீரியத்துடனும், மிக வேகமாக பரவும் தன்மையுடனும் இருக்கின்றன. தற்போது கண்டறியப்பட்டுள்ள பிரேசிலியன் வகை (P1 variant), சுமார் 17 அமினோ அமிலங்களின் மாறுபட்டிருக்கிறது, அதில் 10 அமினோ அமிலங்கள் Spike புரதத்தில் உள்ளவை. இதற்கு ஏன் பயப்பட வேண்டும் என்கிறீர்களா ? இது ஆதி கொரோனாவைவிட 2.4 மடங்கு வேகமாக மற்றும் வீரியமாக பரவக்கூடியது. மேலும், இது சிறார்களையும், இளம் வயதினரையும்கூட தாக்குகிறது. இந்த வகை உலகின் பல பகுதிகளிலும் பரவ தொடக்கி விட்டது. தொற்றுகள் அதிகரிக்க அதிகரிக்க இது போன்று பல வகை கொரோனாக்கள் உருவெடுக்கத் தொடங்கியிருக்கின்றன, துரதிஷ்டவசமாக இதில் சில மிகவும் ஆபத்தான வகைகளும் உருவாகலாம்.
இந்தியாவை பொறுத்தவரை, இரண்டாவது அலை மிக வேகமாக பரவத் தொடக்கி இருக்கிறது. தொற்றுகள் அதிகரிக்க அதிகரிக்க மிகவும் ஆபத்தான வகைகளும் உருவாகும் வாய்ப்பும் அதிகம். பத்தில் எட்டு பேர் மாஸ்க் அணிந்திருந்த நாட்கள் போக, இப்போது பத்தில் இரண்டு பேர் அணிந்திருந்தாலே அதிசியம் என்ற நிலையில் இருக்கிறோம். கொரோனா தொற்றுகள் குறையவும், மக்களுக்கு அது பற்றிய பயம் போய்விட்டது. சுனாமியை பற்றி சொல்லும் பொது, ஒன்றை குறிப்பிட்டு சொல்வார்கள். முதல் அலையில் நிறைய பேர் இறக்கவில்லை, என்ன ஆயிற்று என்று வேடிக்கை பார்க்க போனவர்கள்தான் இரண்டாவது அலையில் பெருவாரியாக இறந்து போனார்கள். மேலும் அப்போது தப்பித்தவர்கள் கூட, நுரையீரலில் கருமன் படிந்ததால் இறந்தார்கள். அது போல இந்த இரண்டாம் அலையை நாமோ, அரசாங்கமோ எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது. இதை முளையிலேயே கிள்ளி எரிய தேவையான நடவடிக்கைகளை, தேர்தல் திருவிழாவை முன்னிட்டு மறந்து விட்டோம்.
எல்லாம் சரி, அதுதான் தடுப்பூசி வந்துவிட்டதே என்று பிறகென்ன கவலை என்று நீங்கள் கேட்கலாம். உலகின் 83 நாடுகளுக்கு உதவும் அளவிற்கு, உலகின் தடுப்பூசி ஊற்றாக இந்தியா உருவெடுத்துள்ளது மிகவும் மகிழ்வுக்குரிய விடயம். ஆனால், தடுப்பூசி பற்றிய பொதுமக்களின் பயமும், அதை சுற்றியுள்ள அரசியலும் மிகப்பெரும் பிரச்சனையாக உருவாகியுள்ளது. இந்தியா தனது நாட்டு மக்களுக்கு பயன்படுத்திய வேக்சின்களை விட (28 million doses) இரண்டு மடங்கு வேக்சின்களை (58 million doses) மற்ற நாடுகளுக்கு அளித்துள்ளது. தற்போது இரண்டாம் அலை வேகமெடுத்துள்ள சூழ்நிலையில், இந்தியா என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். டெல்லி மற்றும் மகாராஷ்டிரா ஏற்கனவே தடுப்பூசி பற்றாக்குறையை மேற்கோள் காட்ட துவங்கிவிட்டன. மற்ற மாநிலங்களில் கூட முதல் டோஸ் எடுத்தவர்கள் இரண்டாவது டோஸ் போட சென்றபோது காத்திருக்கும்படி பணிக்கப்பட்டுள்ளனர். தமிழ் படிக்க ஆரம்பித்திருக்கும் பிரதமர், “தனக்கு மிஞ்சித்தான் தானம்” எனும் பழமொழியையும் உணர வேண்டிய தருனமென நினைக்கிறேன்.
தடுப்பூசி பற்றிய பொதுமக்களின் அச்சம்தான் பிரதான பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு கீழ்காணும் விடயங்கள் காரணங்களாக இருக்கலாம்.
1. கோவாக்சின் உட்பட அனைத்து தடுப்பூசிகளும், இந்த தொற்றுப் பேரழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கோடு அவசர அவசரமாக கண்டுபிடிக்கப்பிடிக்கப்பட்டவை. வேக்சின்களுக்கான பொதுவான ஒழுங்குமுறை கொள்கைகளை கடைபிடித்து வெளிவந்தவை இல்லை. அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி பெற்றவை மட்டுமே. இது பொதுமக்களுக்கு ஒருவித நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி இருக்கிறது.
2. குறிப்பாக, இந்தியாவில் கோவாக்சின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி அளித்தபோது, அதன் மூன்றாம் கட்ட முடிவுகள்கூட வெளிவரவில்லை என்பது பலருக்கும் குழப்பத்தையும், பயத்தையும் விதைத்திருக்கிறது.
3. Astra Zeneca தடுப்பூசி பயன்படுத்தியவர்களில் சிலருக்கு இரத்த உரைதல் (Vaccine-Induced Prothrombotic Immune Thrombocytopenia (VIPIT)) ஏற்பட்டு மரணத் தழுவி யிருக்கின்றனர். இது உலக முழுவதும் வேக்சிங் பற்றியும் பயத்தை மேலும் கூட்டி இருக்கிறது. (வாசிக்க: https://www.nejm.org/doi/full/10.1056/NEJMoa2104882)
4. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இப்போது தடுப்பூசி வழங்கப்படுகிறது. அந்த வயதுக்காரர்கள் பொதுவாக கொரோனா வந்தால் பார்த்துக்கொள்ளலாம், தடுப்பூசி போட்டு ஏதும் பிரச்னை வராமல் இருந்தால் சரி என்கிற மனநிலை இருப்பதாக தெரிகிறது.
5. தடுப்பூசி என்றாலே இலுமினாட்டிகளின் சதி என்று பேசும் 1000 YouTube சேனல்கள் கூட ஒரு காரணமா இருக்கலாம்.
6. இரண்டு டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கும், கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள், பிறகு அதை ஏன் போட வேண்டும் என்று கேள்வி சத்தமாக கேட்கிறது.
7. ஏற்கனவே கொரோனா வந்தவர்களுக்கு கூட, ஓராண்டு கழித்து மீண்டும் கொரோனா வருவது தடுப்பூசி மீதான அடிப்படை புரிதல்களை கேள்விக்குள்ளாக்குகிறது.
இந்த மாதிரியான பல கேள்விகளை கொண்டுள்ள மக்களுக்கு, போதுமான பதில் அளித்து மக்களின் ஐயப்பாடுகளை தீர்த்து வைப்பது அரசின் கடமை. மேலும் வயது கட்டுப்பாடுகளை தளர்த்தவும் அரசு பரிசீலிக்க வேண்டும்.
கொரோனா பற்றிய எல்லாமுமே முயற்சி மற்றும் பிழை (Trial and Error) அடிப்படை தான். அறிவியல் உலகம் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கிறது. பணக்கார நாடுகளும், நலிந்த நாடுகளில் உள்ள பணக்காரக்ளும் மட்டுமே இப்போது தடுப்பூசி சென்றடைந்து கொண்டிருக்குகிறது என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த தடுப்பூசிகளின் தயாரிப்பு முறை காப்புரிமைகளை தற்காலிகமாக விலக்களித்து, உலகின் மூலை முடுக்கெல்லாம் தடுப்பூசிகள் சென்று சேர்வதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்று ஐ.நா செல்வது முற்றலும் உண்மை. இந்த பேரழிவு காலத்தை, வணிக நோக்கோடு பார்ப்பது மனிதத் தன்மையற்ற செயலாகவே புரிந்துகொள்ள முடியும்
இரண்டாம் அலையின் தாக்கம் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி பற்றிய அச்சங்களை போக்கி, நாடு முழுமைக்கும் தடுப்பூசி போடுவது காலமெடுக்கக்கூடிய ஒரு விடயம். கொரோனாவை பொறுத்தவரை, உலகில் ஒவ்வொரு தனிநபருக்கு பாதுகாக்கப்படும் வரை, யாருமே பாதுக்காப்பாக இருக்க முடியாது. தடுப்பூசியின் செயல்திறன் பற்றிய கேள்விகள் மற்றும் திடீர் மாற்றமடைந்து வீரிய வகை கொரோனாக்களின் படையெடுப்புகள் வேறு. தற்போதைய மிகவும் சிக்கலான சூழலில் உங்களுக்கு மாஸ்க்கை விட பேராயுதம் இருக்கிறதா என்று யோசித்து பாருங்கள் ?
- முனைவர். இர. வினோத்கண்ணன்.