நிலவே ! நீ நம்பிக்கையா ! நிலவே குழந்தைகள்...
நிலவே ! நீ நம்பிக்கையா !
நிலவே
குழந்தைகள் அழும்போது
தாய் பிசைந்த சோற்றை
வாயூட்டும் தாயாய் நீ வாழ்கிறாய் !
காலகாலமாய் கவிஞனின்
கருப்பொருளாய் உருக்கொண்டு
கவிதைக்குள் உலா வருகிறாய் !
ஆதாமின் ஏவாள் தொடங்கி
அலைபேசி ஏவாள் வரை
காதலுக்கு நீ தூதாய் செல்கிறாய் !
சூரியனில் வெப்பம் வாங்கி
வெம்மை பிரித்த குளிரொளியை
பூமிக்கு நித்தம் நீ தருகிறாய் !
காரிருள் அகன்று மறைந்திட
பாரினுக்கே நல்லதொரு
ஒளிவிளக்காய் நீ திகழ்கிறாய் !
மாதத்தில் பாதி நாட்கள்
என் குறும்புகளை போல்
தேய்ந்து கொண்டே போகிறாய் !
மீதி நாட்களிலே எந்தன்
தன்னம்பிக்கையைப் போல
வளர்ந்து கொண்டே வருகிறாய் !
இப்படி யாவர்க்கும் நீ...
தாயாய்! கவிதையாய் !
காதல் தூதாய் !
குளிர்தரு மதியாய் !
ஒளிதரும் விளக்காய் !
இருந்தாலும் ....
எனக்கு நீ தருவதெல்லாம் ...
தேய்ந்தாலும் வளருகின்ற ...
வீழ்ந்தாலும் மீளுகின்ற ....
மறைந்தாலும் ஒளிருகின்ற ....
தளர்ந்தாலும் மிளிருகின்ற ...
தன்னம்பிக்கை தான் !
நன்றி நிலாவே !
மாமுகி .