எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழில் எத்தனைவிதமான கேள்விகள் கேட்கப்படலாம் என்று ஒரு நன்னூல்...

தமிழில் எத்தனைவிதமான கேள்விகள் கேட்கப்படலாம் என்று ஒரு நன்னூல் சூத்திரம் விளக்குகிறது:

அறிவு, அறியாமை, ஐயுறல், கொளல், கொடை,
ஏவல் … தரும் வினா ஆறும் இழுக்கார்!

அதாவது, மொத்தம் ஆறுவிதமான கேள்விகள் கேட்கப்படலாம். அவை:

1. அறி வினா
2. அறியா வினா
3. ஐயுறல் வினா
4. கொளல் வினா
5. கொடை வினா
6. ஏவல் வினா

‘அறி வினா’ என்பது, பதில் தெரிந்தே கேட்கும் கேள்வி. உதாரணமாக, ஆசிரியர் மாணவனைக் கேட்கிறார், ‘இந்தியாவின் தலைநகரம் எது?’
‘அறியா வினா’ என்பது, பதில் தெரியாமல் கேட்கும் கேள்வி. உதாரணமாக, மகன் தாயைக் கேட்கிறான், ‘அம்மா, இன்னிக்கு என்ன டிஃபன்?’
‘ஐயம்’ என்றால் சந்தேகம், ‘ஐயுறல்’ என்றால், சந்தேகப்படுதல், ஆகவே, ‘ஐயுறல் வினா’ என்றால், சந்தேகமாகக் கேட்கும் கேள்வி, உதாரணமாக, ‘நீங்க வெறும் தாஸா? லார்ட் லபக் தாஸா?’
அடுத்து, ‘கொளல் வினா’, அதாவது, ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகக் கேட்கும் கேள்வி. உதாரணமாக, ‘கடைக்காரரே, உளுத்தம்பருப்பு இருக்கா?’
‘கொடை வினா’ என்பது இதற்கு எதிரானது, ஒன்றைக் கொடுப்பதற்காகக் கேட்கும் கேள்வி அது. உதாரணமாக, ‘என்னய்யா? முகம் சோர்ந்திருக்கே? காலையில சாப்பிடலையா?’. இந்தக் கேள்வியின் நோக்கம், ‘இந்தா, சாப்பிடு!’ என்று எதையாவது தருவதுதான்.
நிறைவாக, ‘ஏவல் வினா’, தமிழில் ஏவுதல் என்றால், கட்டளை இடுதல், அதன்பொருட்டுக் கேட்கும் கேள்விதன ‘ஏவல் வினா’, உதாரணமாக, ‘என்னய்யா? சாப்டாச்சா?’. இந்தக் கேள்வியின் நோக்கம், ‘போய்ச் சாப்பிடுய்யா’ என்று ஏவுவதுதான்.

நன்றி-தமிழ் இலக்கணம் தமிழ் பேப்பர்

பதிவு : சிவநாதன்
நாள் : 11-Jul-14, 9:57 pm

மேலே