எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மகத்தான கவிதைகளை யாசிக்கிறேன் ********************************************************** பிரமிள் இயற்கைக்குள் ரகசியங்களை...

மகத்தான கவிதைகளை யாசிக்கிறேன்
**********************************************************
பிரமிள் இயற்கைக்குள் ரகசியங்களை ஒரு சித்தரைப் போல் தேடியவர்.

'சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது....'

என்பது போன்ற பல மகத்தான கவிதைகளில் இயற்கையோடு இடையீடின்றிப் பழகியவர்.

ஒவ்வொரு மணித்துளியையும் சுவைக்கும் வாழ்க்கை தன்னை முரண்பட்ட அழகில் படிமப்படுத்தும் வரிகளை கீழே காணலாம்.

ஒவ்வொரு
நாள்மலரிலும்
தேனாய் சூல் கொள்கிறேன்....

வாழ்க்கை என்னை
சுவைக்கிறது
ஒரு அழகிய
பொன்வண்டாய்...! (கவித்தாசபாபதி)

ஆயிரத்தில் ஒரு கவிதைதான் நம்மை சிலிர்க்க வைக்கும்.

பத்தாவது முறையாக
வீழ்ந்தவனை
முத்தமிட்டு சொன்னது
பூமி
"ஒன்பது முறை
எழுந்தவனல்லவா நீ...!" (யாரோ)

அந்த ஆயிரத்தில் ஒன்றாக, துவண்டு போனவனை முத்தமிட்டு அழைக்கும் இச்சிறு கவிதையில் தான் எத்தனை வீரியம்?

அகன்ற உலகு நான்
என்றது அகல்
அழகிய உடல் நான்
என்றது திரி
அசையும் உயிர் நான்
எனறது சுடர்
உழைப்பு வடித்த
உதிரத் துளிகளாய்த்
தேங்கிய எண்ணெய்
வாய்
திறக்கவே இல்லை!(சிற்பி)

என்று சிற்பின் 'மௌனம்' உதிரத்துனிகளாய் கசிந்து வருவதும்,

ஏழை என்றாலே
இருமித்தான் சாகவேண்டுமா
ஏன்
உருமிச் சாகக்கூடாதா? (கவித்தா சபாபதி)

என்று பசித்த வயிறுகள் வெடித்து வருவதும்,


நேர்த்தியாக வளர்க்கப்பட்ட புற்தரையில்
குருவிகள்
நீர்த்துளிகளில் ஜொலிக்கும்
சூரியனைக் கொறிக்கின்றன.(அனார்)

என்ற எட்ட முடியாத அண்மையின் அழகும்,

கடிகார முள்
காலத்தைக் கடத்துகிறது
காந்தமுள்
திசைகளை நடத்தகிறது
மோகமுள்
மனசைப் படுத்துகிறது

மோகம் ஒரு முள்ளெனில்
காதலும் முள்தானோ?
காதல்முள்ளைக் குத்திக்கொள்வதால்
இதயங்கள் ரோஜாக்களாகின்றன (கவித்தாசபாபதி)

என்று முள்ளும் சிலிர்ப்பதும்,

உன் வாழ்க்கை
பரம பதத்தில்
ஏணிகளை யெல்லாம்
அப்படியே விட்டுவிட்டு
நாகங்களை மட்டும்
நாடு கடத்திவிடு (ம.பிரபு, ஊட்டி)

என்று மாற்றி எழுதும் ஜாதகக் குறிப்பும்,

ஒரு சிறகு
கறுப்பு
மறு சிறகு
வெள்ளை

எந்த ஒரு வயல்வெளியிலும்
இரை கொத்தாமல்
எந்த ஒரு மரக்கிளையிலும்
இளைப்பாறாமல்,
கணப்பொழுதேனும
கண்தூங்காமல்,


தயவான தன் சிறகால்
கடவுளின் நிழல் விரித்து,
பிரபஞ்சத்தின் ஆத்மாவாய்,
என்னமாய். எழிலாய்ப் பறக்கிறது
காலப்பறவை
யுகம்யுகமாய்...யுகம்யுகமாய்... ! (கவித்தாசபாபதி)

என்ற தெய்வப் பறவையின் யுகங்கள் கடந்த சிறகும்,

இப்படி மத்தான குறுங்கவிதைகளை நோக்கி என் தேடல் நீளுகிறது.

'இவர்களால் சிலிர்க்கும் இயற்கை' நூல் இன்னும் எட்டு நாட்களில் வெளி வரவிருக்க, அடுத்து, சிலிர்த்து வரும் மகத்தான சிறு கவிதைகளைத் தொகுத்து கவிதைத் தாயின் காலடியில் சமர்ப்பிக்கலாம் என்று ஆசை.

நீங்கள் மெய் மறந்த பிறர் கவிதைகளையும், நீங்கள் சிலிர்க்க வைத்த உங்கள் கவிதைகளையும் தந்து உதவுங்கள்.

சங்க காலத்து பாடல் திரட்டுகள் போல் ஒரு தங்க காலத்தை நாம் ஏன் வரவேற்க கூடாது?

நேசத்துடன்
கவித்தாசபாபதி

நாள் : 5-Aug-14, 12:51 pm

மேலே