இந்த தளத்தில் டாப் ஹிட்டான எனது கவிதைகளில் ஒன்று...
இந்த தளத்தில் டாப் ஹிட்டான எனது கவிதைகளில் ஒன்று :
*********************************************************************************
காதல் இல்லாத ஓர் உலகம்
----------------------------------------
காதல்..!
காதல்..!
காதல்..!
அட ச்சே..!
இந்த காதல்
தொல்லையை விட்டு
தொலைவில் நான்
தொலைந்தால்தான் என்ன?
கற்பனையில்...
சிலநிமிடங்கள்
தொலைந்து போனேன்
காதல் இல்லா உலகம்
எப்படியிருந்திருக்கும்..?
------------------------------
-----------------------------
பெண்ணுக்கு அர்த்தம்
அகராதியில் மாற்றப்பட்டிருக்கும்.
பெண்ணுக்கு கற்பு
சுதந்திரமாக்கப்பட்டிருக்கும்
வானத்து நிலா
மயில், குயில், கயல்
பூ, கொடி, செடியெல்லாம்
கவிஞர்களின் உவமைகளிலிருந்து
விடுதலை அடைந்திருக்கும்.
ரோஜாக்கள் பலப்பல மன்மத
ராஜாக்களால் கிள்ளப்பட்டிருக்காது.
ஆண் இதழ் கோல்கள்
பெண் இதழ் தாளில்
முத்தம் எழுத
தெரிந்து இருக்காது.
ஹார்மோன் சுரப்பிகள்
உணர்ச்சி கிளிர்ச்சியின்றி
ஆசுவாசப்பட்டிருக்கும்.
காமத்தின் அர்த்தம்
சதைப்பசி என்றிருக்கும்.
உடலுறவுகள்
இயந்திர கதியில்
சடங்கு ஆகியிருக்கும்.
உணர்ச்சியற்ற காமத்தில்
கடமைக்கு பிறக்கும்
பிண்டமாக குழந்தைகள்..!
பெண்பால் ஈர்ப்பின்றி
பாலுணர்வு வெறியேறாமல்
மனிதர்கள் மனிதர்களாகவே
வாழ்ந்திருக்க கூடும்.
லைலா மஜ்னு
ரோமியோ ஜூலியட்
அம்பிகாபதி அமராவதி
அனார் சலீம்
இவர்கள் எல்லாம்
யாரென்று கேட்டிருப்போம்.
ஏழாவது அதிசியத்தில்
ஒன்று குறைந்திருக்கும்.
உணர்வு உயிரணுக்கள் இன்றி
கவிதைகளின் கர்ப்பப்பை
காலியாகவே இருக்கும்.
மூன்றாம்பால் எழுத
வள்ளுவனுக்கு தோன்றியிருக்காது.
கண்ணம்மா, ராதை
பாடல்கள் இன்றி
பாரதியின் மீசை
வசீகரம் இழந்திருக்கும்.
மொத்தத்தில்
உலக இலக்கியங்கள்
உருப்படியாக எதுவும்
முற்றுப்பெற்றிருக்காது.
மத, இன, நிறவெறியில்
பூமிப்பந்தில் பாதி
எரிக்கப்பட்டிருக்கும்.
மனித எலும்புகளில்
ஜாதிச்சங்கம் கட்டப்பட்டிருக்கும்.
----------------------------------
-----------------------------------
கற்பனையிலிருந்த எனக்கு
காதலியவளிடமிருந்து அழைப்பு ..!
”என்ன செய்கிறாய் ? ” என்னவள்
”காதல் இல்லை என்றால்
உலகம் எப்படியிருக்கும்.
கவிதை எழுதிட்டு இருக்கேன்.”
பதில் உரைத்தேன்.
உரைத்திடும் உணர்ச்சியில்
உடனடி பதில் அளித்தாள்
என் காதல் தேவதை.
”என் செல்ல காதலனே...!
இந்த காதல் இல்லையென்றால்
இந்த உலகமே இல்லையடா...”
”எழுதியது என்ன செய்ய ?”
வினவினேன்.
”கிறுக்கனின்
கிறுக்கல் என்று
பெயரிட்டு
இணையதள
வீதிகளில் அலையவிடு”
.”
”.......................
.......................”
--------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.