காடைப்போர் கண்டுவந்த கணவன்!

* நில்ஆங்கு; நில்ஆங்கு; இவர்தரல் - எல்லா! நீ
நாறுஇருங் கூந்தலார் இச்செல்வாய், இவ்வழி,
மாறு மயங்கினை போறிநீ! வந்தாங்கே
மாறு, இனி நின்னாங்கே நின், சேவடி சிவப்பச்
செறிந்து ஒளிர் வெண்பல்லாய்! யாம்வேறு இயைந்த
குறும் பூம்ப்போர் கண்டேம்; அணைத்தல்லது, யாதும்
அடுத்ததோ இல்லை, நீ வேறு ஓர்ப்பது.
குறும் பூழ்ப்போர் கண்டமை கேட்டேன், நீ என்றும்
புதுவன நகை வளம்பாடிக், காலிற்
பிரியாக் கவிகைப் புலையன் தன் யாழின்
இகுத்த செவிசாய்த்து, இனிஇனிப் பட்டன
ஈகைப்போர் கண்டாயும் போறி; மெய்எண்ணின்,
தபுத்த புலர்வில புண்.

நல்லாய்! பொய்யெல்லாம் ஏற்றித், தவறு தலைப்பெய்து,
கையொடு கண்டாய், பிழைத்தேன்; அருள் இனி,
அருளகம் யாம்; யாரேம்; எல்லா! தெருள
அளித்து நீ பண்ணிய பூழெல்லாம் - இன்னும்
விளித்த, நின் பாணனோ டாடி, அளித்தி
விடலை நீ நீத்தலின், நோய் பெரிது ஏய்க்கும்;
நடலைப்பட்டு, எல்லா நின் பூழ்.

(கலித்தொகை : பாடல் 95 (மருதக்கலி) எண் : 30 பாடியவர் : மருதன் இளநாகனார்.)

பொருள் விளக்கம்:

மாறு = திரும்பிப் போ.
குறும்பூழ் = காடை அல்லது கானாங் கோழி.
தபுத்த புலர்வில = ஈரம் உலராத!

கல்லொன்று நெற்றிப்பொட்டில் பட்டதுபோல்
"நில்" என்று நேரிழையாள் எதிர்நின்று
சொல் ஒன்றால் தாக்கியதால் திடுக்கிட்டுப்போய்
வில்லம்பு விழியாளே; ஏனிந்த வெறுப்பென்று கேட்டான்!
தோட்டத்து முல்லை; அவன் தேர்த்தட்டு மார்பில் படர்வதற்குத் தவித்திருக்க;
வாட்டத்தின் உருவமாக அவளை மாற்றிப் பரத்தையர் இல்லம் ஏகி
கொஞ்சு மொழிக் கோலவிழிக் கோகிலங்கள் கற்பித்த கலையனைத்தும் அவர்தம்
பஞ்சணையில் படர்ந்தன்றோ பயின்று வருகின்றான்.
நீருக்குள்ளிருந்த தாமரைக் கொடியெடுத்துக்
கோடை வெயில் தகிக்கின்ற பாறையின்மேல் படுக்கவைத்தால்
துள்ளி மகிழ்ந்து ஆடுமோ; அன்றித் துவண்டு வீழ்ந்து வாடுமோ?
நெருப்புப்பூ எடுத்துக் குடும்ப மெழுகுவத்திக்குச் சூட்டிவிட்டு
நித்த நித்தம் அவள் செத்துருகிச் சிர்குலையும்போது;
மறுப்புக்கே இடமின்றி மஞ்சத்து விருந்தளித்த பரத்தையரின்
சிரிப்புப் பூ அழகு கண்டு நன்றாகச் சிக்கிக்கொண்டான்!
காலை முதல் மாலை வரை மனைபுதுக்கி, உணவு சமைத்து, உடை துவைத்துக்
கண்மணியாம் மழலைதனைக் கல்வி பயில்வதற்கனுப்புகின்ற பணி முடித்துக்
கால் கடுக்கக் காத்திருந்து கண்பூத்துப் போகுமட்டும்
கணவனது வருகைக்காகக் காத்திருப்பாள் இங்கே!
அவனோ;
பலரிதழ் பட்டுப் பவளம் போல் சிவந்திருக்கும் பரத்தையர் இதழை,
மலரிதழ் இதுதான் என்று மாறி மாறிச் சுவைத்திருப்பான்!
அலர் தூற்றும் ஊர் என்றும் கவலைப்படாமல்
புலர் பொழுதும் போம்பொழுதும் தெரியாமல் அவளைப் புசித்திருப்பான்!
இல்லத்துக்கிளியோ சோகக் கூண்டினிலே - தன்
இறைவன் இன்னும் வரவில்லையே என ஏங்கிக் கிடக்கும்;
வெல்லத்தைப் பேச்சில் கலக்கும் பரத்தையரின் தூண்டிலிலே சிக்கி
விருந்துண்ட மயக்கத்தில் அவன் தூங்கிக் கிடப்பான்!
பாலும் தெளிதேனும் கூடத் தெவிட்டுமென்பான்; ஆனால் அந்தப்
பரத்தையரின் பட்டு மேனிக் கட்டவிழா மொட்டுகளைத் தெவிட்டாத தேமாங்கனி யென்பான்!
கன்னல் கசக்கும் என்பான்; கணிகையரின்
கன்னம்தான் கனியிடையேறிய சுளையென்பான்!
இன்னலுற்றே இல்லத்தில் குலமங்கையவள் விழிநீர் பெருக்கும்போது; அவன்
மின்னல் கீற்றே எனப் பரத்தையரின் மெல்லிடை வீணையினை மீட்டி மகிழ்வான்!
வாயிற்புறம் வந்து வந்து வருகின்றானா என
வாழவந்த பத்தினிப் பெண் பார்த்துப் போவாள்; அந்நேரம் அவனோ-
வாடகைப் பத்தினியின் வாயில் உள்ள தாம்பூலத்தைத்
தன வாய்க்கு மாற்றச் சொல்லித் தவமிருப்பான்!
எல்லையொன்றைக் கடந்துவிட்டால் - அது
எதுவாயினும் கசந்துவிடும்!
அஃதேபோல் அமுதம் என அவன் கருதி
"இஃதே என் பிறவிப் பயன்" எனக் கொண்டிருந்த
பரத்தையரின் பாசம் நேசமெல்லாம் - தன்
கரத்தினிலே காசுள்ளவரையில்தான் எனக் கண்டவுடன்;
மரங்கொத்திப் பறவைகளை விட்டகன்று;
மாங்குயில் கூவும் தனது மனைநோக்கித் திரும்பி வந்தான்!

வந்தான் கணவன் எனத் தெரிந்தவுடன்
நொந்த உள்ளம் ஒரு நொடியில் வேலாக மாற
இந்த வழி; தவறி வந்தாயோ எனக் கேலி பேசிச்
சொந்தமென்ன இனி வந்ததென "நில்" என்றாள்; சுடுசொல் வீசிவிட்டாள்!

பசுப்போலச் சாந்தமிகு பத்தினியாள்
பாயும் புலி போலத் தோன்றியதால்
பதைத்தான், திகைத்தான்;
பக்குவமாய் அவளை வயப்படுத்தப்
பாகுமொழி மிக உதிர்த்தான்!

கற்பனையில் மிதக்கின்றாய் கண்மணியே; அதனால்தான்
கண்ணில் கனல் அள்ளிப் பொழிகின்றாய்! - நான்
ஆணாக இருப்பதாலே ஆயிரம் ஐயம் உனக்கு
வீணாகத் தேவையில்லை; இத்தனை நாளும் நான்
காடைப் பறவைகளின் சண்டைக் காட்சிகளைத்தான் கண்ட வந்தேன் எனக்
கற்கண்டப் பொடி தூவி அவளைக் கவிழ்க்கப் பார்த்தான்.

ஆனால் அவளோ;
செந்தணலை இறைப்பது போல் சிரிப்பினூடே
சினத்தைக் கொட்டி ஏளனமாய்;

காடைப் பறவைகளின் சண்டைதனை நீ
கண்டவந்த விதமெல்லாம் கேள்வியுற்றேன்.
ஆடை களைந்த அப்பறவைகள் உன்னை
ஆரத்தழுவி அணைத்துப் போர் நடத்துதற்கு;
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றெனவே உன்
மெய்த்தோழன் பாணன்; யாழ்கூட இசைத்திருப்பானே!
அய்யோ பாவம்; காடைகளின் சண்டையினால்
ஆறாத புண்களன்றோ உன் அங்கமெலாம் காணுகின்றேன்!
புதுப் புதுக் காடைகள் உன்மீது மோதி
போர் புரிந்த காரணத்தால் திரண்டுருண்ட நின்
தோள்களெல்லாம்; உலராத காயங்களைத்
தூக்கிச் சுமப்பதையும் தோகை நான் காணுகின்றேன்!
வென்றிடுக என வேண்டினாலும்
வெல்லாது அப்பறவையுடன்
நெடுநேரம் பஞ்சணைப் போர் புரிந்ததாலே
நின் முகத்திலுள்ள நினைவுச் சின்னமெல்லாம்
நிலவின் முகத்தில் பரவிய களங்கம் போல்
நிலைத்துவிட்ட காட்சியினைக் காணுகின்றேன்!
இப்படி
வெடித்துக் கிளம்பிய வார்த்தைகள் கேட்டு; அவன்
வடித்துச் சொன்ன பொய்யுரை விடுத்து,
அன்பே; அத்தனை உண்மையும் நீ எப்படியோ தெரிந்து கொண்டாய்;
அறியாமல் செய்த குற்றத்தை மறந்திடுக பெண்ணே!
அருள் பாலித்து என்னை ஏற்றிடுக கண்ணே - என
அவளடி தொழாக் குறையாய் அழுது புலம்பினான்.

அவளோ;
அணுவளவும் கோபத்தைக் குறைத்துக் கொள்ளாமல்
அருள் செய்வதற்கு நான் யார் அய்யா? அன்பு பொங்கிட நீ
அருள் செய்து பின்னர் அருளாது கைவிட்ட
அழகுமிகு காடைகள் எல்லாம் - நீ மீண்டும்
அருள்வதற்கு வருவாய் எனக் காத்திருக்கும்.
அவற்றைக் கைவிடாமல் அங்கேயே செல்க என்றாள்;
அவளும் உடன் உள்ளே சென்று விட்டாள்,
அவன் பாவம்; அங்கே சிலையாக நின்றுவிட்டான்!


கவிஞர் : கருணாநிதி(18-Mar-11, 7:23 pm)
பார்வை : 320


மேலே