புறநானூறு பாடல் 13 - சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி
இப்பாடலை எழுதிய முடமோசியார் என்னும் சான்றோர் ஏணிச்சேரி என்ற ஊரினர். இவர் உறையூரிடத்தே தங்கியிருந்தமையால், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் எனப்படுகிறார். புறநானூற்றில் இவர் பதின்மூன்று பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் பன்னிரண்டு பாடல்கள் ஆய் அண்டிரன் என்ற வள்ளலைப் புகழந்து பாடியவை.
சோழ வேந்தனான கோப்பெருநற்கிள்ளியின் இயற்பெயர் பெருநற்கிள்ளி ஆகும். இவன் முடிசூடுவதற்கு உரிய இளவரசனானதால் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி எனப்பட்டான். இவன் தன்னொடு பகை கொண்ட சேரமன்னனுடன் போர் செய்யும் எண்ணத்துடன் கருவூரை முற்றுகை இட்டிருந்தான்.
அப்போது சேரமன்னனாக சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறை இருந்து வந்தான். ஒருநாள் சோழன் கோப்பெருநற்கிள்ளி கருவூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவன் ஏறி வந்த களிறுக்கு மதம் பிடித்து விட்டது.
அப்பொழுது முடமோசியார் சேரமன்னனுடன் அவனது அரசமாளிகையின் வேண்மாடத்து மேலிருந்தார். சோழன் களிற்றின் மேல் இருப்பதும், களிறு மதம் பிடித்துத் திரிவதும், பாகரும் வீரர்களும் அதனை அடக்க முயல்வதும் கண்ட சேரமான் மோசியாருக்குக் காட்டி இவன் யாரெனக் கேட்க, அவர் சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறையோடு இருந்து இப்பாடலைப் பாடினார்.
இப்பாட்டில், களிற்றுமேலிருந்த சோழனை யாரென்றறியாது கேட்ட சேரமானுக்கு களிற்றின் மேல் செல்லும் இவன் யாரென்றால், நீர் வளத்தால் மிகுதியாக விளைந்த நெல்லையறுக்கும் உழவர், மீனும் கள்ளும் பெறும் நீர்நாட்டை உடையவன்; இவன் களிறு மதம் பிடித்ததனால், அவனுக்குத் தீங்கு ஏதும் நேராமல் நோயின்றிச் செல்லவும் வேண்டும் என்று விரும்பிப் பாடுகின்றார்.
இனி பாடலைப் பார்ப்போம்.
இவனியா ரென்குவை யாயி னிவனே
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின்
மறலி யன்ன களிற்றுமிசை யோனே
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும் 5
பன்மீ னாப்பட் டிங்கள் போலவும்
சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோ ரறியாது மைந்துபட் டன்றே
நோயில னாகிப் பெயர்கதி லம்ம
பழன மஞ்ஞை யுகுத்த பீலி 10
கழனி யுழவர் சூட்டொடு தொகுக்கும்
கொழுமீன் விளைந்த கள்ளின்
விழுநீர் வேலி நாடுகிழ வோனே.
பதவுரை:
இவனியார் என்குவையாயின் – இவன் யார் என்று கேட்பாயானால்,
இவனே – இவன்தான்
புலிநிறக் கவசம் – புலியின் தோலால் செய்யப்பட்ட கவசத்தின்
பூம்பொறி சிதைய – பொலிவுடைய தோலினது இணைப்பு பிளவுபட
எய் கணை கிழித்த – எய்த அம்புகள் கிழித்த
பகட்டு எழில் மார்பின் – பரந்த அழகுடைய மார்பினையுடையவன்
மறலி யன்ன களிற்று மிசையோன் – கூற்றம் போன்ற மதம் பிடித்த களிற்றின் மேலே உள்ளவன்
களிறே – இக்களிறு
முந்நீர் வழங்கும் நாவாய் போலவும் – எதிரிப் படையைக் கிழித்தோடலில் கடலில் நீரைக் கிழித்து இயங்கும் மரக்கலத்தைப் போலவும்
பன்மீன் நாப்பண் திங்கள் போலவும் – பல விண் மீன்கள் புடைசூழ நடுவே மையமாக வானில் பவனி வரும் நிலவு போலவும்
(நாப்பண் – centre)
சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப – சுறாவின் இனத்தை ஒத்த வாள் மறவர்கள் பரபரவெனச் சுற்றிச் சூழ
மரீஇயோர் அறியாது – தன்னை மருவி வழி நடத்திச் செல்லும் பாகர்களை அறியாமலும்
மைந்து பட்டன்றே – மதம் பிடித்துத் திரிகிறதே!
நோயிலனாகிப் பெயர்க தில் அம்ம – இச்சோழ மன்னன் எந்தத் தீங்கு நேராமலும் நோய்வாய்ப் படாமலும் நலமாகப் போய்ச் சேரவேண்டும், ஐயா!
பழனம் மஞ்ஞை உகுத்த பீலி – வயல் வெளிகளில் மயில்கள் உதித்த பீலியால்
கழனி யுழவர் சூட்டொடு தொகுக்கும் – வயலில் உள்ள உழவர்கள் நெற்சூட்டுடனே திரட்டும்
கொழுமீன் – நன்கு கொழுத்த மீன்களையும்
விளைந்த கள்ளின் – இறக்கப்பட்டுப் பதமான கள்ளையும்
விழுநீர் வேலி நாடுகிழ வோனே – மிகுந்த செழுமையான நீர் நிறைந்த வயல்களையும் உடைய நாட்டுக்கு உரிய தலைவன்!
பொருளுரை:
இவன் யார் என்று கேட்பாயானால், இவன்தான் புலியின் தோலால் செய்யப்பட்ட கவசத்தின், பொலிவுடைய தோலினது இணைப்பு பிளவுபட எய்த அம்புகள் கிழித்த பரந்த அழகுடைய மார்பினை உடையவனும், கூற்றம் போன்ற மதம் பிடித்த களிற்றின் மேலே உள்ளவனும் அமர்ந்திருக்கும் இக்களிறு எதிரிப் படையைக் கிழித்தோடலில் கடலில் நீரைக் கிழித்து இயங்கும் மரக்கலத்தைப் போலவும் பல விண்மீன்கள் புடைசூழ நடுவே மையமாக வானில் பவனி வரும் நிலவு போலவும் சுறாவின் இனத்தை ஒத்த வாள் மறவர்கள் பரபரவெனச் சுற்றிச் சூழ தன்னை மருவி வழி நடத்திச் செல்லும் பாகர்களை அறியாமலும் மதம் பிடித்துத் திரிகிறதே!
வயல் வெளிகளில் மயில்கள் உதித்த பீலியால் வயலில் உள்ள உழவர்கள் நெற்சூட்டுடனே திரட்டும் நன்கு கொழுத்த மீன்களையும், புதிதாக இறக்கப்பட்டுப் பதமான கள்ளையும், மிகுந்த செழுமையான நீர் நிறைந்த வயல்களையும் உடைய சோழ நாட்டுக்கு உரிய தலைவனும் மன்னனும் ஆவான்! இச்சோழ மன்னன் எந்தத் தீங்கு நேராமலும் நோய்வாய்ப் படாமலும் நலமாகப் போய்ச் சேரவேண்டும், ஐயா!
விளக்கம்:
சோழன் கருவூரை முற்றுகை இட்டிருக்கிறதனால், பகைப் புலமாகிய கருவூரிடம் செல்கையில் ஊர்ந்து செல்லும் களிறு மதம் கொண்டது காணும் பகைவர் அதனை அடக்க முயலாது சினம் மிகுவித்து, அதற்கும் அதன் மேல் பவனி வரும் சோழற்கும் தீங்கு விளைவிக்கலாம் என்ற கருத்தால் ’நோயிலனாகிப் பெயர்க தில்’ என வாழ்த்துகின்றார்.
இவனுக்குத் தீங்குண்டாயின் இவனது ஆதரவு பெற்று வாழும் தம்மைப்போன்ற பரிசிலர்க்கும் ஆதரவின்றித் தீங்குண்டு என்பதாம். தந்நலம் நோக்காது பிறர் நலமே பேணி வாழ்த்துவது வாழ்த்தியலாகும்.
திணை: பாடாண்டிணை.
ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண்திணை. ’புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பினன்’ என்று சோழ வேந்தன் கோப்பெருநற்கிள்ளியின் வீரத்தயும், ’கழனி யுழவர் சூட்டொடு தொகுக்கும் கொழுமீன் விளைந்த கள்ளின் விழுநீர் வேலி நாடு கிழவோன்’ என்று அவன் நாட்டு செழிப்பின் பெருமையையும் பாடுவதால், இப்பாடல் பாடாண்திணை ஆகும்.
பெருநற்கிள்ளியின் களிறு மதம் பிடித்து கட்டுப்பாடின்றித் திரிந்து, பகையகத்துப் புகுந்தமையால் அவற்குத் தீங்குறுமென்று அஞ்சி ’நோயிலனாகிப் பெயர்க’ என வாழ்த்தியதால், இது வாழ்த்தியலும் துறையும் ஆயிற்று.