புறநானூறு பாடல் 22 - சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

சேரர் மரபில் இரும்பொறைக் குடியில் பிறந்த இச்சேரமன்னனின் இயற் பெயர் சேய் என்பது ஆகும். யானையினது நோக்குப்போலும் தீர்க்கமான நோக்கினை உடையவன் என்பதனால் இவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை எனப்படுகிறான்.

இவன் தொண்டி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு கி. பி. 200 - 225 கால கட்டத்தில் ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகிறது. இப்பாட்டின் ஆசிரியர் குறுங்கோழியூர் கிழார் ஆவார். கோழியூர் என்பது உறையூருக்கு இன்னொரு பெயராகும். குறுங்கோழியூர் என்பது உறையூரைச் சார்ந்த ஒருபகுதி எனப்படுகிறது.

ஆசிரியர் குறுங்கோழியூர் கிழார் இப்பாட்டில், ‘இச்சேரமான் சோம்பலின்றி முயல்வதே செயலாக உடையவன். அதனால் இவன் நாடு சோறு வளமும், செல்வப்படைப்பும் மிக்கது. இவனது காவல் நலம் கண்ட சான்றோர் ’மாந்தரஞ்சேரல் இரும்பொறை பேணிப் பாதுகாக்கும் நாடு போல புத்தேளுலகத் தற்று’ எனக் கூறுகின்றனர்.

இச்சேரமான் தன்னைப் பாடிய புலவர் பிறர்பாற் சென்று அவர் இசையினைப் பாடாதவாறு பெருங்கொடை நல்குவன் என்றும், இத்தகைய சிறப்பைக் கேட்டுத் தான் வந்து கண்டு மகிழ்ந்ததாகவும் கூறுகின்றார்.

இனி பாடலைப் பார்ப்போம்.

தூங்குகையா னோங்குநடைய
உறழ்மணியா னுயர்மருப்பின
பிறைநுதலாற் செறனோக்கின
பாவடியாற் பணையெருத்தின
தேன் சிதைந்த வரைபோல 5

மிஞிறார்க்குங் கமழ்கடாத்
தயறுசோரு மிருஞ்சென்னிய
மைந்துமலிந்த மழகளிறு
கந்துசேர்பு நிலைஇவழங்கப்
பாஅனின்று கதிர்சோரும் 10

வானுறையும் மதிபோலும்
மாலைவெண் குடைநீழலான்
வாண்மருங்கிலோர் காப்புறங்க
அலங்குசெந்நெற் கதிர்வேய்ந்த
ஆய்கரும்பின் கொடிக்கூரை 15

சாறுகொண்ட களம்போல
வேறுவேறு பொலிவுதோன்றக்
குற்றானா வுலக்கையாற்
கலிச்சும்மை வியலாங்கட்
பொலந்தோட்டுப் பைந்தும்பை 20

மிசையலங் குளைய பனைப்போழ் செரீஇச்
சினமாந்தர் வெறிக்குரவை
ஓத நீரிற் பெயர்பு பொங்க
வாய்காவாது பரந்துபட்ட
வியன்பாசறைக் காப்பாள 25

வேந்துதந்த பணிதிறையாற்
சேர்ந்தவர் கடும்பார்த்தும்
ஓங்குகொல்லியோ ரடுபொருந
வேழநோக்கின் விறல்வெஞ்சேஎய்
வாழிய பெருமநின் வரம்பில் படைப்பே 30

நிற்பாடிய வலங்குசெந்நாப்
பிற்பிறரிசை நுவலாமை
ஓம்பா தீயு மாற்ற லெங்கோ
மாந்தரஞ் சேரலிரும்பொறை யோம்பிய நாடே
புத்தே ளுலகத் தற்றெனக் கேட்டுவந் 35

தினிது கண்டிசிற் பெரும முனிவிலை
வேறுபுலத் திறுக்குந் தானையொடு
சோறுபட நடத்திநீ துஞ்சாய் மாறே.

பதவுரை:

தூங்குகையான் – அசைந்த பெரும் தும்பிக்கை யுடன்

ஓங்கு நடைய – தலையை உயர்த்தி நடக்கும் உயர் நடையை யுடையனவும்

உறழ் மணியான் – அந்நடைக்கேற்ப ஒன்றுக் கொன்று மாறுபட்டு ஒலிக்கும் மணியுடனே

உயர்மருப்பின – உயர்ந்த தந்தக் கொம்பினை உடையனவும்

பிறை நுதலால் செறல் நோக்கின – பிறை வடிவமாக இடப்பட்ட மத்தகத்துடன் சினம் பொருந்திய பார்வையை உடையனவும்

பாவடியால் பணை எருத்தின – பரந்த பெரிய காலடியுடனே பெருத்த கழுத்தையுடையனவும்

தேன் சிதைந்த வரை போல – தேனழிந்த மலை போல

மிஞிறார்க்கும் கமழ் கடாத்து – தேனீக்கள் ரீங்கரிக்கும் வாசமிகு மதத்துடனே

அயறு சோரும் இருஞ் சென்னிய – புண் வழலை யிலிருந்து நீர் வடியும் பெரிய தலையை உடையன வுமாகிய

மைந்து மலிந்த மழ களிறு – வலிமை மிக்க இளங் களிறு

கந்து சேர்பு நிலைஇ வழங்க – அது கட்டப்பட்ட கம்பத்தைப் பொருந்தித் தான் நின்ற நிலையிலே நின்று அசைய

பா அல் நின்று கதிர் சோரும் – பக்கத்தே நின்று கிரணத்தை விடுகின்ற

வான் உறையும் மதி போலும் மாலை வெண்குடை நீழலான் – வானத்திலே இருந்து உறையும் சந்திரன் போலும், முத்து மாலையையுடைய வெண் கொற்றக் குடையின் நிழலருகில்

மருங்கு வாள் இல்லோர் காப்பு உறங்க – தம் அருகில் வாள் இல்லாதோர் அக்குடையே காவலாக உறங்க

அலங்கு செந்நெற் கதிர் வேய்ந்த – அசைந்த செந்நெற் கதிரால் வேயப்பட்டு

ஆய் கரும்பின் கொடிக் கூரை – மெல்லிய கரும்புகளால் கட்டப்பட்ட ஒழுங்கான கூரை ஆகியனவும்

சாறு கொண்ட களம் போல – விழா எடுத்து நடத்தப்பட்ட இடம் போல

வேறு வேறு பொலிவு தோன்ற – அந்த இடம் வேறு வேறாக அழகுபடத் தோன்ற

குற்று ஆனா உலக்கையால் – குற்று நிறுத்தப்படாத உலக்கை ஒலியுடனே

கலிச் சும்மை வியல் ஆங்கண் – மிக்க ஆரவாரத்தையுடைய அகன்ற அந்த இடத்தில்

பொலந் தோட்டுப் பைந் தும்பை – பொன்னாலான இதழுடைய பசுமையான தும்பை மலர்களுடன்

மிசை அலங்கு உளைஇய பனைப் போழ் செரீஇ – அதன் அருகிலே அசைந்த தலையினை உடைய பனந்தோட்டைச் சொருகி

சினமாந்தர் வெறிக்குரவை – சினத்தையுடைய வீரர் வெறியோடு ஆடும் குரவைக் கூத்தின் ஒலி

ஓத நீரிற் பெயர்பு பொங்க – கடல் நீர் ஆர்ப்பரித்துப் பொங்க

வாய் காவாது பரந்து பட்ட – உனது படைப் பெருமையால் பகைவர் அஞ்சும் மதிப்புடைய காவலின்றிப் பரந்து கிடக்கின்ற

வியன் பாசறைக் காப்பாள – அகன்ற பாசறையுடைய காவலனே!

வேந்து தந்த பணி திறையால் – மாற்றரசர் பணிவுடன் தந்த திறைப் பொருட்களால்

சேர்ந்தவர் கடும்பு ஆர்த்தும் – உன்னை அடைந்தவர் களுடைய சுற்றத்தார்க்குக் கொடுத்தும்

ஓங்கு கொல்லியோர் அடு பொருந - உயர்ந்த கொல்லிமலையினரின் வெற்றி மிகுந்த தலைவனே!

வேழ நோக்கின் விறல் வெஞ் சேஎய் – யானையின் நோக்குப்போன்ற பார்வையுடன் வெற்றியை விரும்பும் சேயே!

வாழிய பெரும – நீ வாழ்க பெருமானே

நின் வரம்பில் படைப்பு – உன் எல்லையில்லாத செல்வம்

நிற் பாடிய அலங்கு செந்நா – உன்னைப் பாட அசைந்த செவ்விய நாக்கு

பின் பிறர் இசை நுவலாமை – பின்னைப் பிறருடைய புகழைச் சொல்லாமல்

ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ – அளவில்லாது வழங்கும் தன்மையுடைய எங்கள் அரசர்

மாந்தரஞ் சேரலிரும்பொறை ஓம்பிய நாடே - மாந்தரஞ் சேரலிரும்பொறை பாதுகாத்த நாடே யாகும்

புத்தேளுலகத்து அற்று எனக் கேட்டு வந்து – தேவ லோகத்தைப் போன்றது என்று பிறர் சொல்லக் கேட்டு வந்து

இனிது கண்டிசின் பெரும – இனிமையாக கண்குளிர உன்னைக் கண்டேன் பெருமானே!

முனிவிலை – முயற்சியில் வெறுப்பும், சினமும் இன்றி

வேறு புலத்து திறுக்கும் தானையொடு – வேற்று நாட்டிற்குப் படையெடுத்துப் படையோடு சென்று

சோறு பட நடத்தி – உன் நாட்டில் வளம் பெருகும்படி செய்து

நீ துஞ்சாய் மாறே – சோம்பலின்றி நீ ஆட்சி செய்வாயாக!

பொருளுரை:

அசைந்த பெரும் தும்பிக்கையுடன் தலையை உயர்த்தி நடக்கும் உயர் நடையையுடையனவும், அந்நடைக்கேற்ப ஒன்றுக்கொன்று மாறுபட்டு ஒலிக்கும் மணியுடனே உயர்ந்த தந்தக் கொம்பினை உடையனவும், பிறை வடிவமாக இடப்பட்ட மத்தகத்துடன் சினம் பொருந்திய பார்வையை உடையனவும், பரந்த பெரிய காலடி யுடனே பெருத்த கழுத்தையுடையனவும் தேனழிந்த மலை போல தேனீக்கள் ரீங்கரிக்கும் வாசமிகு மதத்துடனே புண் வழலையிலிருந்து நீர் வடியும் பெரிய தலையை உடையனவுமாகிய வலிமை மிக்க இளங்களிறு நிற்கிறது.

அக்களிறு கட்டப்பட்ட கம்பத்தைப் பொருந்தித் தான் நின்ற நிலையிலே நின்று அசைய, பக்கத்தே நின்று கிரணத்தை விடுகின்ற வானத்திலே இருந்து உறையும் சந்திரன் போலும், முத்து மாலையை யுடைய வெண்கொற்றக் குடையின் நிழலருகில் தம் அருகில் வாள் இல்லாதோர் அக்குடையே காவலாக உறங்க அசைந்த செந்நெற் கதிரால் வேயப்பட்டு மெல்லிய கரும்புகளால் கட்டப்பட்ட ஒழுங்கான கூரை ஆகியனவும், விழா எடுத்து நடத்தப்பட்ட இடம் போல அந்த இடம் வேறு வேறாக அழகுபடத் தோன்றுகிறது.

குற்று நிறுத்தப்படாத உலக்கை ஒலியுடனே மிக்க ஆரவாரத்தையுடைய அகன்ற அந்த இடத்தில் பொன்னாலான இதழுடைய பசுமையான தும்பை மலர்களுடன் அதன் அருகிலே அசைந்த தலை யினை உடைய பனந்தோட்டைச் சொருகி சினத்தை யுடைய வீரர் வெறியோடு ஆடும் குரவைக் கூத்தின் ஒலியானது கடல் நீர் ஆர்ப்பரித்துப் பொங்குவது போல இருக்கிறது. உனது படைப் பெருமையால் பகைவர் அஞ்சும் மதிப்புடைய காவலின்றிப் பரந்து கிடக்கின்ற அகன்ற பாசறை யுடைய காவலனே!

மாற்றரசர் பணிவுடன் தந்த திறைப்பொருட்களால் உன்னை அடைந்தவர்களுடைய சுற்றத்தார்க்குக் கொடுத்தும் உயர்ந்த கொல்லிமலையினரின் வெற்றி மிகுந்த தலைவனே! யானையின் நோக்குப் போன்ற பார்வையுடன் வெற்றியை விரும்பும் சேயே! நீ வாழ்க பெருமானே!

உன் எல்லையில்லாத செல்வம், உன்னைப் பாட அசைந்த செவ்விய நாக்கு பின்னைப் பிறருடைய புகழைச் சொல்லாமல் அளவில்லாது வழங்கும் தன்மையுடைய எங்கள் அரசர் மாந்தரஞ் சேரலிரும் பொறை பாதுகாத்த நாடேயாகும் என்றும், தேவ லோகத்தைப் போன்றது என்றும் பிறர் சொல்லக் கேட்டு வந்து இனிமையாக கண்குளிர உன்னைக் கண்டேன் பெருமானே!

முயற்சியில் வெறுப்பும், சினமும் இன்றி வேற்று நாட்டிற்குப் படையெடுத்துப் படையோடு சென்று உன் நாட்டில் வளம் பெருகும்படி செய்து சோம்பலின்றி நீ ஆட்சி செய்வாயாக!

திணை: வாகைத்திணை. வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது வாகைத்திணை. ‘வாய்காவாது பரந்துபட்ட வியன்பாசறைக் காப்பாள’ என்றும், ’ஓங்கு கொல்லியோர் அடு பொருந, வேழ நோக்கின் விறல் வெஞ்சேஎய்’ என்றும் பாடப்படுவதிலிருந்து மாந்தரஞ்சேரல் இரும் பொறையின் வீரமும் வெற்றியும் புலப்படுவதால் இப்பாடல் வாகைத்திணை ஆகும்.

துறை: அரசவாகை ஆகும். இது இயன் மொழியுமாம்.

1. அரசனது இயல்பையோ, வெற்றியையோ எடுத்துரைத்தல் அரசவாகைத் துறையாகும்.

2. ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்குதல், குடியோம்புதல் ஆகிய ஐந்தும் அரச வாகை எனப்படுகிறது.

3. அரசவாகையில் பிறரை நோகச் செய்யாத பண்பு, கொடைத்திறம், நாட்டின் பரப்பு, நாட்டுமக்கள் அச்சமின்றி வாழ்தல், நாட்டில் விழா, வீரம், பகைவர் அச்சம், பகைவர் திறை தருதல், பகை நாட்டு அழிவு, வேள்வி செய்தல் முதலான செய்திகள் கூறப்படுகின்றன.

’வானுறையும் மதிபோலும் மாலைவெண் குடை நீழலான் வாண்மருங்கிலோர் காப்புறங்க’ என்றும், ’ஓம்பா தீயு மாற்றல் எங்கோ மாந்தரஞ் சேரலிரும் பொறை யோம்பிய நாடே புத்தே ளுலகத் தற்று’ என்றும் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் குடியோம்பலும், கொடைத்திறனும் கூறப் படுவதால் இது அரசவாகைத் துறை ஆகும்.

இவர் எமக்கு இது கொடுத்தார், அதுபோல நீயும் கொடு என மன்னவனின் இயல்பை மொழிவதும், வள்ளலை வேண்டுவதும் இயன்மொழித் துறை எனப்படுகிறது. ’வேந்துதந்த பணிதிறையாற் சேர்ந்தவர் கடும்பார்த்தும் ஓங்குகொல்லியோர் அடுபொருந’ என்பதிலிருந்து மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் நல்லியல்பும் ஈகைத்திறனும் வெளிப்படுகிறது. எனவே இப்பாடல் இயன்மொழித் துறையுமாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jun-13, 8:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 472

சிறந்த கட்டுரைகள்

மேலே