புறநானூறு பாடல் 23 - பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

இப்பாண்டியனது இயற்பெயர் நெடுஞ்செழியன் ஆகும். இவன் சிறுவதிலேயே பாண்டிய நாட்டுக்கு மன்னனாக முடிசூட்டப்பட்டான். இவன் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளில் முடிவேந்தர்கள் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை மற்றும் வேளிர்கள் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள் மற்றும் பொருநன் ஆகிய எழுவரை தலையாலங்கானத்தில் நடைபெற்ற போரில் வெற்றி பெற்று இவன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று சிறப்பிக்கப்பட்டான்.

இப்பாடலைப் பாடிய கல்லாடனார் சங்க காலத்தின் தொடக்கப் பகுதியில் வாழ்ந்த புலவர் ஆவார். கல்லாடம் என்னும் ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கல்லாடா என்னும் பெயருடன் இன்றும் உள்ளது. கல்லாடம் வேங்கடமலைக்கு வடக்கில் இருந்தது என்றும், அங்கு வாழ்ந்த இந்தப் புலவரின் குடும்பத்தார் பசியால் வாடியபோது தமிழ்நாட்டு ஊர் பொறையாற்றுக்கு வந்து அரசன் பெரியன் கொடையால் தம் பசியைப் போக்கிக் கொண்டனர் என்றும் புலவர் கல்லாடனார் குறிப்பிடுகிறார்.

இப்பாட்டில் கல்லாடனார், இப்பாண்டியனுடைய படையிலுள்ள யானைகளாற் கலக்கப்பட்ட பகைவர் நாட்டு நீர்த்துறைகளையும், வில் வீரர் பகைவர் நாட்டில் தாம் கொள்வது கொண்டு எஞ்சியவற்றை அழித்துப் பாழ் செய்த புலங்களையும், ஊர் தோறும் காவல்மரங்கள் அழிக்கப்பட்ட காட்டையும், நெருப்பால் கொளுத்தப்பட்ட அருகாமையிலுள்ள இடங்களையும் கண்டேன்.

இனிமேலும் எதிர்த்து நிற்கும் பகைவர் நாட்டில் இது போன்ற பல செய்கைகளைச் செய்யும் துணிவு டையவன் இப்பாண்டியன் என்று பகைவர்கள் அஞ்சுவதையும் மனதில் எண்ணியபடி, ஆட்கள் நடமாட்டமின்றிப் பாழ்பட்ட காட்டு வழியே கண்ட உன் செயல்களில் உன்னையே கண்டு வருகிறேன் என உரைக்கின்றார்.

இனி பாடலைப் பார்ப்போம்.

வெளிறி னோன்காழ்ப் பணைநிலை முனைஇக்
களிறுபடிந் துண்டெனக் கலங்கிய துறையும்
கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியற்
சூர்நவை முருகன் சுற்றத் தன்னநின்
கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர் 5

கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில்
கொள்பத மொழிய வீசிய புலனும்
வடிநவில் நவியம் பாய்தலி னூர்தொறும்
கடிமரந் துளங்கிய காவு நெடுநகர்
வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்பக் 10

கனையெரி யுரறிய மருங்கு நோக்கி
நண்ணார் நாண நாடொறுந் தலைச்சென்
றின்னு மின்னபல செய்குவன் யாவரும்
துன்னல் போகிய துணிவி னோனென
ஞால நெளிய வீண்டிய வியன்படை 15

ஆலங் கானத் தமர்கடந் தட்ட
கால முன்பநிற் கண்டனென் வருவல்
அறுமருப் பெழிற்கலை புலிப்பாற் பட்டெனச்
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை 20
வேளை வெண்பூக் கறிக்கும்
ஆளி லத்த மாகிய காடே.

பதவுரை:

வெளிறில் நோன் காழ் பணை நிலை முனைஇ – மென்மையாக இல்லாத, வலிமையான வயிரம் பாய்ந்த கட்டுக் கம்பத்தையுடைய கூடத்தில் நிற்பதை வெறுத்த

களிறுபடிந்து உண்டென கலங்கிய துறையும் – யானைகள் இறங்கி நீருண்டதால் கலங்கிய நீர்த்தேக்கத்தையும்

கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல் – கார்காலத்து மணம் வீசும் கடம்பின் பசுமையான இலையோடு விரவிய மாலையையுடைய

சூர் நவை முருகன் சுற்றத் தன்ன – சூரபத்மனைக் கொன்ற முருகனது கூளிச் சுற்றத்தைப் போல

நின் கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர் – நல்ல கூர்மையான அம்பையும், வளைந்த வில்லினை யும் உடைய உனது மறவர்கள்

கொள்வது கொண்டு – தமக்குத் தேவையானவை களை எடுத்துக் கொண்டு

கொள்ளா மிச்சில் – தேவையில்லாத பிற பொருட்களை

கொள்பதம் ஒழிய வீசிய புலனும் – பிறர் எடுத்து பயன்படுத்தும் உணவாக்காதபடி அழிக்கப்பட்ட நிலங்களையும்

வடி நவில் நவியம் பாய்தலின் – சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கோடாரி வெட்டுவதால்

ஊர் தொறும் கடி மரம் துளங்கிய காவும் – ஒவ்வொரு ஊர்களிலும் காவல் மரங்கள் வெட்டி அழிக்கப்பட்ட காடுகளையும்

நெடு நகர் வினை புனை நல்லில் – பெரிய நகரங்களில் தொழில்கள் செய்யப்படும் நல்ல இல்லங்களில்

வெவ் வெரி நைப்ப – விருந்தோம்பல் முதலிய நற்செயல் குறித்த சோறிடும் தீயை அணைத்துக் கெடுத்தும்

கனை எரி உரறிய மருங்கு நோக்கி – மிகுதியான நெருப்பால் எரிந்து கொண்டிருக்கும் பிற இடங்களை யும் பார்த்து

நண்ணார் நாண – பகைவர் வெட்கப்பட்டுக் கலங்க

நாடொறுந் தலைச் சென்று – நாள்தோறும் அவரிடத்துச் சென்று

இன்னும் இன்ன பல செய்குவன் – இன்னமும் இதுபோல பல தீமைகள் செய்வேன் என்றபடி

யாவரும் துன்னல் போகிய துணிவினோன் என – பகைவர் யாவரும் தன்னை நெருங்க முடியாத சூழ்ச்சித் திறனுடைய துணிவுடையவன் எனக்கருதி

ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை – உலகமே கொள்ளாத அளவு திரட்டிய பெரும்படையுடன்

ஆலங் கானத்து அமர் கடந்தட்ட கால முன்ப – தலையாலங்கானத்தில் போரில் எதிர் நின்று கொன்ற காலன் போன்ற வலிமையுடையவனே!

அறு மருப்பு எழிற்கலை புலிப்பாற் பட்டென – கொம்பை இழந்த பெரிய கலைமான், புலியிடம் சிக்கி உயிரிழந்ததால்

சிறுமறி தழீஇய தெறி நடை மடப் பிணை – தன் சிறிய மான்குட்டியை அணைத்துக் கொண்ட துள்ளிய நடையையுடைய மெல்லிய பெண் மான்

பூளை நீடிய வெருவரு பறந்தலை – பூளைச்செடிகள் வெகுவாக வளர்ந்துள்ள அஞ்சத்தக்க பாழிடத்தில்

வேளை வெண்பூ கறிக்கும் – வேளைச்செடியின் வெண்மையான பூக்களைத் தின்னும்

ஆளில் அத்தமாகிய காடே – ஆட்கள் நடமாட்ட மற்ற பாலைநிலக் காட்டு வழியே

நிற் கண்டனென் வருவல் – உன் செயல்களைக் கண்டவனாக வருகின்றேன்.

பொருளுரை:

மென்மையாக இல்லாத, வலிமையான வயிரம் பாய்ந்த கட்டுக் கம்பத்தையுடைய கூடத்தில் நிற்பதை வெறுத்த யானைகள் இறங்கி நீருண்டதால் பகைவர் நாட்டு நீர்த்தேக்கங்கள் கலங்கி உள்ளன. கார்காலத்து மணம் வீசும் கடம்பின் பசுமையான இலையோடு விரவிய மாலையை அணிந்து, சூரபத்மனைக் கொன்ற முருகனது கூளிச் சுற்றத்தைப் போல, நல்ல கூர்மையான அம்பையும், வளைந்த வில்லினை யும் உடையவர்களாகிய உனது மறவர்கள்;

தமக்குத் தேவையானவைகளை எடுத்துக் கொண்டு தேவையில்லாத பிற பொருட்களை பிறர் எடுத்து உணவாகப் பயன்படுத்தாதபடி அழிக்கப்பட்ட நிலங்களையும், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கோடாரி வெட்டுவதால் ஒவ்வொரு ஊர்களிலும் காவல் மரங்கள் வெட்டி காடுகள் அழிக்கப்பட்டிருக் கின்றன.

பெரிய நகரங்களில் தொழில்கள் செய்யப்படும் நல்ல இல்லங்களில் விருந்தோம்பல் முதலிய நற்செயல் குறித்த சோறிடும் தீயை அணைத்துக் கெடுத்தும் மிகுதியான நெருப்பால் எரிந்து கொண்டிருக்கும் மருங்கிலுள்ள பிற இடங்களையும் பார்த்து பகைவர் வெட்கப்பட்டுக் கலங்குகிறார்கள்.

நாள்தோறும் அவரிடத்துச் சென்று இன்னமும் இதுபோல பல தீமைகள் செய்வேன் என்றபடி பகைவர் யாவரும் தன்னை நெருங்க முடியாத சூழ்ச்சித் திறனுடைய துணிவுடையவன் எனக் கருதி உலகமே கொள்ளாத அளவு திரட்டிய பெரும்படையுடன் தலையாலங்கானத்தில் போரில் எதிர் நின்று கொன்ற காலன் போன்ற வலிமை உடையவனே!

கொம்பை இழந்த பெரிய கலைமான், புலியிடம் சிக்கி உயிரிழந்ததால் தன் சிறிய மான்குட்டியை அணைத்துக் கொண்டு, துள்ளிய நடையுடைய மெல்லிய பெண் மான் பூளைச்செடிகள் வெகுவாக வளர்ந்துள்ள அஞ்சத்தக்க பாழிடத்தில் வேளைச் செடியின் வெண்மையான பூக்களைத் தின்கின்ற ஆட்கள் நடமாட்டம் இல்லாத பாலைநிலக் காட்டு வழியே உன் செயல்களைக் கண்டவனாக வருகின்றேன்.

குறிப்பு: கலை புலிப்பாற் பட்டெனச் சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை பறந்தலை வேளை வெண்பூக் கறிக்கும் என்று இப்பாட்டில் சொல்லப்படுவது, இப்பாண்டியன் அவன் பகைவரைக் கொன்றதனால் பகைவர்களின் பெண்டிர் தம் இளம்புதல்வரைக் காப்பாற்றுவதற் காக இறந்து விடாமல் இலைதளைகளைச் சாப்பிட்டு உயிர் வாழ்கிறார்கள் என்று அவர்களின் மனைவியரும் குழந்தைகளும் படும் துன்பத்தை மறைமுகமாகப் பாண்டியனுக்குச் சுட்டிக் காட்டு வதாகத் பொருள்பட இப்புலவர் சொல்கிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும். ’நண்ணார் நாண நாடொறுந் தலைச்சென்று இன்னும் இன்னபல செய்குவன் யாவரும் துன்னல் போகிய துணிவினோன் என’ இப்பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழி யனின் வீரத்தையும், வெற்றியையும் கூறுவதால் இப்பாடல் வாகைத்திணையாகும்.

துறை: அரசவாகை; நல்லிசை வஞ்சியும் ஆம்.

அரசவாகை: அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

1. அரசனது இயல்பையோ, வெற்றியையோ எடுத்துரைத்தல் அரசவாகைத் துறையாகும்.

2. ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்குதல், குடியோம்புதல் ஆகிய ஐந்தும் அரச வாகை எனப்படுகிறது.

3. அரசவாகையில் பிறரை நோகச் செய்யாத பண்பு, கொடைத்திறம், நாட்டின் பரப்பு, நாட்டுமக்கள் அச்சமின்றி வாழ்தல், நாட்டில் விழா, வீரம், பகைவர் அச்சம், பகைவர் திறை தருதல், பகை நாட்டு அழிவு, வேள்வி செய்தல் முதலான செய்திகள் கூறப்படுகின்றன.

உலகமே கொள்ளாத அளவு திரட்டிய பெரும்படை யுடன் தலையாலங்கானத்தில் போரில் எதிர் நின்று கொன்ற காலன் போன்ற வலிமையும், வெற்றியும் உடையவன் இப்பாண்டியன் ஆதலால் இது அரச வாகைத் துறையாகும்.

இப்பாடல் துறை நல்லிசை வஞ்சியுமாம். பகைவரது இடங்கள் கெடுமாறு வென்ற வீரனின் வெற்றியைப் பற்றிக் கூறுதல். பகைவர் நாட்டுப் பொருளைக் கொள்ளை கொண்டு வரும் மறவர் தம்மாற் கொள்ளப்படாது மீந்திருக்கும் பொருள் பிறர் எவர்க்கும் பயன்படாதவாறு அவற்றை அழித்துச் சிதைப்பதும், விளைவயல்களை அழிப்பதும் பண்டைய போர் மரபு.

களிறுபடிந் துண்டெனக் கலங்கிய துறையும், ’கொள்ளா மிச்சில் கொள்பத மொழிய வீசிய புலனும், வடிநவில் நவியம் பாய்தலி னூர்தொறும் கடிமரந் துளங்கிய காவு நெடுநகர் வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்ப’ என்பதற்கேற்ப பகைவர் நாட்டு வளங்களை அழித்து பெற்ற வெற்றியைக் கூறுவதால் இது நல்லிசை வஞ்சித் துறையுமாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jun-13, 3:32 pm)
பார்வை : 283

மேலே