புறநானூறு பாடல் 30 - சோழன் நலங்கிள்ளி
சோழன் கரிகால் பெருவளத்தானின் இளைய மகனான வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி கரிகாலன் இறந்த பிறகு பூம்புகாரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான். வேற்பஃறடக் கைப் பெருவிறற்கிள்ளிக்கு, கிள்ளி வளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தனர்.
ஒரு சமயம், இவனுக்கும் இமயவரம்பனுக்கும் (அண்ணன் மருமகன்) இடையே போர் நடந்தது. அப்போரில் அவ்விரு மன்னர்களும் இறந்தனர். இவன் போரில் இறந்த பிறகு, இவன் மகனான நலங்கிள்ளி தன் தந்தையைப் போல், பூம்புகாரைத் தலைநகரமாகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான்.
இவனைச் சான்றோர் சேட்சென்னி நலங்கிள்ளி என்றும் கூறுவர். ஒருசமயம், நலங்கிள்ளிக்கும் உறையூரை ஆண்டு வந்த நெடுங்கிள்ளிக்கும் போர் தொடங்கியது. அப்போரில் நெடுங்கிள்ளி தோல்வி யடைந்ததால், நலங்கிள்ளி உறையூரைத் தனக்குரியதாக்கி, தனது வரையா ஈகையால் புகழ் பெற்றான்.
இப்பாட்டில் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளியிடம் காணப்படும் அடக்கமாகிய பண்பு கண்டு வியந்து, ‘வேந்தே! செஞ்ஞாயிற்றின் செலவும், அதன் பரிப்பும், மண்டிலமும், திக்கும், ஆகாயமும் என இவற்றின் அளவை நேரில் சென்று கண்டவரைப் போலத் தம் அறிவால் ஆராய்ந்து சொல்வோரும் உளர்; அவர்களாலும் ஆராய்ந்து அறியக்கூடாத அத்தனை அடக்கமுடையவனாய்க் கல்லைக் கவுளில் அடக்கியுள்ள களிறு போல வலிமை முழுதும் தோன்றாதவாறு விளங்குகின்றாய்’ என்று பாராட்டுகின்றார்.
இனி பாடலைப் பார்ப்போம்.
செஞ்ஞா யிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமு மென்றிவை
சென்றளந் தறிந்தார் போல வென்றும் 5
இனைத்தென் போரு முளரே யனைத்தும்
அறிவறி வாகாச் செறிவினை யாகிக்
களிறுகவு ளடுத்த வெறிகற் போல
ஒளித்த துப்பினை யாதலின் வெளிப்பட
யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு 10
மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடற்பஃ றாரத்த நாடுகிழ வோயே.
பதவுரை:
செஞ்ஞா யிற்றுச் செலவும் – செங்கதிரவன் செல்லும் வழியும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும் – அக்கதிரவனின் இயக்கமும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் – அந்த இயக்கத்தால் சூழப்பட்ட வட்டமான நிலப்பரப்பும்
வளி திரிதரு திசையும் – காற்று இயங்கும் திசையும்
வறிது நிலைஇய காயமும் – ஆதாரம் ஏதுமின்றி தானே நிற்கின்ற ஆகாயமும்
என்றிவை சென்று அளந்தறிந்தோர் போல – என்று சொல்லப்பட்ட இவற்றை அங்கங்கே சென்று அளந்து பார்த்து அறிந்தவர்களைப் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே – எல்லாம் இத்தனை அளவு என்று சொல்லும் கல்வி கற்றோரும் உள்ளனர்
அனைத்தும் அறிவு அறிவாகாச் செறிவினையாகி – அத்தகைய கற்றறிந்த அறிவுடையோர்களாலும் அறிய முடியாத அளவில் அடக்கத்தை உடைய வனாக
களிறு கவுள் அடுத்த எறிகல் போல – யானை தன் வாயினுள் அடக்கிய எறிகல் போல
கவுள் - யானையின் உள்வாய் (Jaw of an elephant)
ஒளித்த துப்பினை யாதலின் – மறைத்த வலிமையுடையவனாதலால்
வெளிப்பட யாங்ஙனம் பாடுவர் புலவர் – உன்னைப் பற்றி முழுவதும் விளங்கும்படி புலவர்கள் எப்படிப் பாட முடியும்?
கூம்பொடு மீப் பாய் களையாது – பாய்மரத்தையும், மேலே விரித்துக் கட்டப்பட்ட பாயையும் எடுத்துச் சுருட்டாது
மிசைப் பரம் தோண்டாது – மரக்கலத்தில் உள்ள அதிகப்படியான பாரத்தையும் குறைக்காமல்
புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் – ஆற்று முகத்துப் புகுந்த பெரிய மரக்கலத்தை
தகாஅர் – பரதவர்களும், மரக்கலங்களைச் செலுத்த அறியாத உப்பு விளைப்போரும், மரக்கலத்திலுள்ள பொருட்களுக்குச் சம்பந்தம் இல்லாதவர்களும்
இடைப்புலப் பெருவழிச் சொரியும் – பொருட்களை மரக்கலத்திலிருந்து எடுத்துச் செல்லும் போது இடைப்பட்ட வழியெங்கும் பொருட்கள் சிதறிக் கிடக்கும்
கடல் பல் தாரத்த நாடுகிழ வோயே – கடல் வழியாகக் கொண்டு வரப்படும் பல வகையான பண்டங்களை உடைய நாட்டை உடையவனே!
பொருளுரை:
செங்கதிரவன் செல்லும் வழியும் அக்கதிரவனின் இயக்கமும் அந்த இயக்கத்தால் சூழப்பட்ட வட்டமான நிலப்பரப்பும் காற்று இயங்கும் திசையும் ஆதாரம் ஏதுமின்றி தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை அங்கங்கே சென்று அளந்து பார்த்து அறிந்தவர்களைப் போல எல்லாம் இத்தனை அளவு என்று சொல்லும் கல்வி கற்றோரும் உள்ளனர்.
அத்தகைய கற்றறிந்த அறிவுடையோர்களாலும் அறிய முடியாத அளவில் அடக்கத்தை உடையவனாக, யானை தன் வாயினுள் அடக்கிய எறிகல் போல மறைத்த வலிமை உடையவனா தலால் உன்னைப்பற்றி முழுவதும் விளங்கும்படி புலவர்கள் எப்படிப் பாட முடியும்?
பாய்மரத்தையும், மேலே விரித்துக் கட்டப்பட்ட பாயையும் எடுத்துச் சுருட்டாது, மரக்கலத்தில் உள்ள அதிகப்படியான பாரத்தையும் குறைக்காமல் ஆற்று முகத்துப் புகுந்த பெரிய மரக்கலத்தை பரதவர்களும், மரக்கலங்களைச் செலுத்த அறியாத உப்பு விளைப்போரும், மரக்கலத்திலுள்ள பொருட்களுக்குச் சம்பந்தம் இல்லாதவர்களும் பொருட்களை மரக்கலத்திலிருந்து எடுத்துச் செல்லும் போது இடைப்பட்ட வழியெங்கும் பொருட்கள் சிதறிக் கிடக்கும் கடல் வழியாகக் கொண்டு வரப்படும் பல வகையான பண்டங்களை உடைய நாட்டை உடையவனே!
இப்பாடல் பாடாண்திணை ஆகும். விரித்துப் பொருள் படும்போது பாடு + ஆண் = திணை = பாடாண்திணை எனப்படும். பாடுதற்குத் தகுதி உடைய ஓர் ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது பாடாண் திணை ஆகும். ’புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர் இடைப்புலப் பெருவழிச் சொரியும் கடற்பஃ றாரத்த நாடுகிழ வோயே’ என்று சோழன் நலங்கிள்ளியின் புகழையும், செல்வ வளத்தையும் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் இப்பாடலில் கூறுவதால் இது பாடாண்திணை ஆயிற்று.
துறை - இயன்மொழி. கற்றறிந்த அறிவுடையோர் களாலும் அறிய முடியாத அளவில் அடக்கத்தை உடையவனாக, யானை தன் வாயினுள் அடக்கிய எறிகல் போல மறைத்த வலிமை உடையவனா தலால் உன்னைப்பற்றி முழுவதும் விளங்கும்படி புலவர்கள் எப்படிப் பாட முடியும்? என்பதிலிருந்து சோழன் நலங்கிள்ளியின் அடக்கமான நல்லியல்பு விளங்குவதால் இப்பாடல் இயன்மொழித்துறை யாகும்.