புறநானூறு பாடல் 40 - சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

(சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் - அறிமுகம் காண்க)

ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார் ஒரு சமயம் இக் கிள்ளி வளவனைக் காண வந்தார். அவர்க்கு இவனைக் காண்பது அரிதாயிற்று. நாட்கள் சில கழிந்ததும், அவனைக் காண்பதற்கு வேண்டிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த சந்தர்ப்பத்தில் பாடிய இப்பாட்டில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை நோக்கி, ‘பகைவர்கள் பாதுகாத்த மறம் நிலை பெற்ற அரண்களைப் பாதுகாக்காமல் எதிர் நின்று அவற்றை நீ அழித்து பகைவர்களின் முடியில் சூடிய மகுடம் செய்யப்பட்ட பசும்பொன்னால் உனது கால்கள் அழகுபெற வீரக் கழல்கள் செய்து அணிந்த வலிய ஆண்மையை உடையவனே! வெற்றி யுடைய வேந்தே!

ஒரு பெண்யானை படுக்கும் சிறிய இடத்தில் ஏழு யானைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் விளையும் நாட்டுக்கு உரியவனே! எந்நாளும் இனிய மொழியோடும் எளிதில் அணுகக் கூடியவனாகவும் இருப்பாயாக பெருமானே!

'நாங்கள் உன்னை இகழ்ந்து பாடுவோர் நாணி கழுத்தோடு தலை குனியவும், புகழ்ந்து பாடுவோர் பெருமிதத்தால் சிறப்பாகத் திகழவும் இன்று காண்பது போல் அவ்வாறே என்றும் உன்னைக் காண்போமாக' என்று ஆவூர் மூலங்கிழார் கூறுகிறார்.

இனி இதற்கான புற நானூற்றுப் பாடலைப் பார்க்கலாமா!

நீயே, பிறரோம்புறு மறமன்னெயில்
ஓம்பாது கடந்தட்டவர்
முடிபுனைந்த பசும்பொன்னின்
அடிபொலியக் கழறைஇய
வல்லாளனை வயவேந்தே 5

யாமேநின், இகழ்பாடுவோ ரெருத்தடங்கப்
புகழ்பாடுவோர் பொலிவுதோன்ற
இன்று கண்டாங்குக் காண்குவ மென்றும்
இன்சொலெண் பதத்தை யாகுமதி பெரும
ஒருபிடி படியுஞ் சீறிடம் 10
எழுகளிறு புரக்கு நாடுகிழ வோயே.

பதவுரை:

நீயே, பிறர் ஓம்புறு மற மன் எயில் ஓம்பாது – நீ பகைவர்கள் பாதுகாத்த மறம் நிலை பெற்ற அரண்களைப் பாதுகாக்காமல்

கடந்தட்டு – எதிர் நின்று அவற்றை அழித்து
அவர் முடி புனைந்த பசும் பொன்னின் - பகைவர் களின் முடியில் சூடிய மகுடம் செய்யப்பட்ட பசும்பொன்னால்

அடி பொலியக் கழல் தைஇய – உனது கால்கள் அழகுபெற வீரக் கழல்கள் செய்து அணிந்த

வல்லாளனை வய வேந்தே - வலிய ஆண்மையை உடையவனே! வெற்றியுடைய வேந்தே!

யாம் நின், இகழ் பாடுவோர் எருத்து அடங்க - நாங்கள் உன்னை இகழ்ந்து பாடுவோர் நாணி, கழுத்தோடு தலை குனியவும்

புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற – புகழ்ந்து பாடுவோர் பெருமிதத்தால் சிறப்பாகத் திகழவும்

இன்று கண்டு ஆங்குக் காண்குவம் – இன்று காண்பது போல் அவ்வாறே என்றும் காண்போமாக.

என்றும் இன் சொல் – எந்நாளும் இனிய மொழி யோடும்

எண் பதத்தை ஆகுமதி பெரும – எளிதில் அணுகக் கூடியவனாகவும் இருப்பாயாக பெருமானே!

(எண்பதம் – எளியசெவ்வி, Easy accessibility)

ஒரு பிடி படியும் சீறிடம் - ஒரு பெண்யானை படுக்கும் சிறிய இடத்தில்

எழு களிறு புரக்கும் நாடுகிழ வோயே - ஏழு யானை களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் விளையும் நாட்டுக்கு உரியவனே!

விளக்கம்:

’கழல் தைஇய வல்லாளன்’ என்றதனால் பகையின் மையும், ’ஒரு பிடி படியும் சீறிடம் எழு களிறு புரக்கும் நாடுகிழ வோய்’ என்றதனால் பொருட் குறைவின்மையும் கூறப்படுகிறது.

திணை: இப்பாடல் பாடாண்திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்பு களைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண்திணை ஆகும்.

’நீயே, பிறரோம்புறு மறமன்னெயில் ஓம்பாது கடந்தட்டவர் முடிபுனைந்த பசும்பொன்னின் அடிபொலியக் கழறைஇய வல்லாளன்’ என ஆவூர் மூலங்கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனின் புகழையும், வலிமையையும் கூறுவதால் இப்பாடல் பாடாண்திணை ஆகும்.

துறை: செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்துவது செவியறிவுறூஉ துறை யாகும். பகைவர் முடிப் பொன்னால் செய்த வீரக்கழல் அணிந்தவனாகிய உன்னை இகழ்ந்த வரை இகழ்ந்தும், புகழ்ந்தவரைப் போற்றியும் பாடும் புலவன் நான். எனவே, என் போன்ற புலவர்களிடம் ’இன் சொல் எண் பதத்தை ஆகுமதி’ என்றும் ஆவூர் மூலங்கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனின் செவியில் அறிவுறுத்துவதால் இப்பாடல் செவியறிவுறூஉ துறையாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Aug-13, 12:07 pm)
பார்வை : 246

மேலே