ஊர்ல இருந்து அப்பா கடுதாசி...!!!(Mano Red)

வெளியூர்ல இருக்குற மகனுக்கு
ஊர்ல இருந்து அப்பா கடுதாசி,

அன்பு மகனே,
உண்மைய சொல்றேன்
நாங்க இங்க நல்லா இல்ல..
எங்கள நினச்சு நீயும்
இளச்சு ஓடா போயிருப்பனு
நல்லாவே தெரியும்..!!

முன்னபோல இல்ல
ஒங்க அம்மா ஒடம்பு,
ஆ ஊன்னா காய்ச்ச வருது..!!
குனிஞ்சு நிமிந்து வேல செஞ்சா
நாக்கு தள்ள மூச்சு வருது..!!
எனக்கு கூட செல நேரம்
உக்காந்து நிக்கயில
கிறுகிறுன்னு வருது..!!
நான் ஒரு மடையன்
என் கஷ்டம் சொல்லி
உன்ன அழ வைக்குறேன்,...!!

அப்புறம் மகனே ,
எவன் போட்ட சாபமோ
இந்த வருசமும் மழை தண்ணி காணோம்,
காடு வரப்பு பூமியெல்லாம்
காஞ்சு போய் கண்ணீரு விட,
இருக்குற ஆடுமாடெல்லாம் வித்து
ஒருவேளை கஞ்சி குடிக்கிறோம்னு
உன்கிட்ட எப்படி சொல்ல முடியும்..!!

உன்ன வெளிநாடு போக வைக்க
எவன் பேச்சையோ நம்பி
ராப்பகலா சேத்த
வெள்ளிமணி வித்தாச்சு,
வீடுவாச நிலமெல்லாம்
வீதிக்கு வந்தாச்சு,
வயலுக்கு மருந்தடிச்சு
பலமாசம் கடந்தாச்சு..!!
எல்லாம் கடந்து போகையில
வெளிநாடு கனவு மட்டும்
வெறிச்சோடி நிக்குதுன்னு
உன்கிட்ட எப்படி சொல்ல முடியும்..??

நீ படுற பாடு எனக்கு தெரியும்,
வெளியூரு போகணும்ன்னு
எங்கள பிரிஞ்சு நீ போகயில
பாதி உசுரு அப்பவே போய்டுச்சு..!!
மீதி உசுர காக்க
மருந்து வாங்க கூட காசு இல்ல,
உன்னால முடியாதுன்னு தெரியும்,
உன்ன விட்டா வேறெங்க நாங்க போவோம்,
ஐந்நுறு ரூபா அனுப்பி வச்சா போதும்
அடுத்த வருஷம் உன் மொகம் பாக்க
நாங்க உசுர புடிச்சு இருப்போம்..!!

நல்லபடியா ஒடம்ப பாத்துக்கோன்னு
பொய் சொல்ல கூட மனசு வரல..
நமக்கும் ஒரு காலம் வருமேன்னு
வானத்த அண்ணாந்து பாக்குறேன்
உன்ன நினைச்சுக்கிட்டே...!!!

எழுதியவர் : மனோ ரெட் (26-Aug-13, 3:44 pm)
பார்வை : 96

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே