வித்தக விநாயக விரைகழல் சரணே

...............................................................................................
தந்த மொடித்துத்தம் தண்கருணைத் திறங்கொண்டு
முந்தி வரைந்தானோர் நற்பெருங் காவியம்!
தொந்தித்தன் முன்னாலே பந்தைப்போல் நெளிந்தாடத்
தும்பிக்கை வளைத்தத்தை ஓவென்று ஆக்கினான்!
விந்தை விலங்கொத்த உருவத்தைக் கொண்டிங்கே
நஞ்சிந்தைச் சிந்திக்க நற்பாடம் நவில்கின்றான்!
பஞ்சத்தைப் பேராழிப் போல்கொண்ட நெஞ்சமே,
நஞ்சுண்ட கருங்கண்டன் றன்பிள்ளை நம்நெஞ்சுள்
வஞ்சத்தை வாழாது ஓட்டவே வழுத்துவாம்!
...............................................................................................


விரிவு
**********

தம்மை உணர்வோர் உள்ளத்துள் குளிர்ச்சியை உணரச்செய்யும் தனது கருணை எனும் திறத்தினால் வியாசனின் வேண்டுகோளுக்கிணங்க, தனது கூர்மையான தந்தங்களுள் ஒன்றினை ஒடித்து அறம் பல உரைக்கும் நல்லதோர் பெருங்காவியமாம் மகாபாரதத்தை முன்பு அவன் எழுதினான்!

காற்றடைத்த பந்தைப்போல் தன் முன்புறம் குதித்தாடும் பெரும் தொந்தியைப்பெற்றவன், தனது துதிக்கையை அழகாக வளைத்து அந்த வளைவில் ‘ஓம்’ எனும் மந்திரத்தின் வடிவை காணச்செய்து, தாம் ஓங்கார வடிவினன் என்பதை நமக்கெல்லாம் உணர்த்தினான்!

உலகில் எவர்க்கும் இல்லாததாய் முறம்போன்ற காதுகளையும், நீண்ட மூக்கினையும் உடைத்த யானையின் தலையும், மனித உடலும் கொண்ட விந்தையான விலங்கினைப்போல் காட்சியளிக்கும் அவன், தனது உருவத்தின் மூலமாகவே அறம்நிறை சொல்கேட்டல், நற்பொருள் நுகரல் முதலான அரும்பாடங்களை நாம் நம் சிந்தையுள் சிந்திக்க நயமுடன் புகட்டுகின்றான்.

ஆலகால விஷத்தினைப் பாருய்யும் பொருட்டு விருப்புடன் தானுண்டு நீலகண்டனாய் விளங்குகின்ற சிவபெருமானின் அன்பிற்குரிய பிள்ளையாகிய இத்தகைய பெருங்குணங்களைத் தன்வசம் கொண்டிலங்கும் விநாயகனை,

நல்ல செல்வமாகிய எண்ணங்கள் ஏதுமில்லாததான பண்பின்மை எனும் வறுமையைப் பெருங்கடலைப்போல் தம்முள் குடியிருக்கச் செய்திருக்கும் நெஞ்சமே, தீமையை வளர்க்கின்ற; நம்மை அழித்துக் கேடு விளைவிக்கின்ற; நமது இத்தன்மையதான வஞ்சக எண்ணங்களை அழித்து, அவை மேலும் நம்மிடம் தோன்றாமலிருக்க நாம் போற்றி வணங்குவோம்.

.........................................................................................................................
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (27-Mar-15, 6:08 pm)
பார்வை : 2289

மேலே