தேவதைகள் தூங்குகிறார்கள்பாகம்_11

டக்...டக்...டக்...டக்..டக்...

யாரோ மாடிப்படி ஏறும் சத்தம் கேட்டது.......

ஏறி வந்தவரைப் பார்த்ததும், விஜிக்கு உச்சந்தலையில் இடி விழுந்தது போலிருந்தது

கோவை காந்திபுரம் ஐஸ்கிரீம் கடையில் நான் விஷாந்தினியுடன் இருந்தபோது வந்தவர்... விஷாவின் சித்தப்பாவின் நண்பர்..! விஜிக்கு நடந்த சம்பவங்கள் ஓரளவுக்கு விளங்கியது ஆனால் ஒன்று மட்டும் விளங்கவில்லை... அதாவது தான் கடத்தப்பட்டது.

விஷாந்தினி கடத்தப்பட்டதற்கு காரணம் இருக்கிறது ...ஏனென்றால், அவள் அப்பாவைக் கொன்றாகிவிட்டது, அவளையும் கொன்றுவிட்டால் மொத்த சொத்தையும் அடைந்துவிடலாம்... என்னை ஏன் கடத்தினார்..? அதுவும், ஒரு இன்ஸ்பெக்டரைக் கொன்றுவிட்டு..?

விஷாவின் காதலனுக்கு இவ்வளவு பெரியவிலையை ஏன் அவர் கொடுக்கவேண்டும்..? அதிலும் ஒரே ஒரு நாள் வெறும் பத்து நிமிடமே ஐஸ்கிரீம் கடையில் தூரத்தில் தெரிந்த காதலனை...?

எங்கள் காதல்; ஒன்றும் வருடக்கணக்கில் வளர்ந்து விடவில்லையே... மாதக்கணக்கு கூட இன்னும் ஆகவில்லையே...?

ஒருவேளை எங்களின் குறுகிய நாட்களைக்கூட நாள் தவறாமல் கண்காணித்திருப்பாரோ..?

எங்கள் காதலின் நெருக்கம்....திருமணத்தில் கொண்டுபோய் சேர்த்துவிட்டால்... இருவரும் வாழ்க்கையில் இணைந்துவிட்டால்.. விஷாவின் சொத்தை அடைவதற்கு நானும் இடையூராக இருக்கக்கூடும் என்று நினைத்துவிட்டாரோ..?

அதற்கு போலீஸ் அதிகாரியைக் கொன்று இரண்டு காவலர்களைத் தாக்கி என்னைத்தூக்க வேண்டிய அவசியம் என்ன? காவல் துறையின் மீது கைவைத்துவிட்டு இவரால் தப்பித்துவிட முடியுமா?

நடந்த சம்பவங்களை நினைக்க நினைக்க விஜிக்கு ஆச்சர்யமும், காரணத்தைத் தெரிந்துகொள்ளும் ஆவலும் அதிகமானது.

விஷாந்தினியின் சித்தப்பாவின் நண்பரான ரகு என்கிற ரகுபதி பேச ஆரம்பித்தார்...விஜி காதுகளை நன்றாக தீட்டிவைத்துக்கொண்டு கேட்க ஆரம்பித்தான்

“என்ன தம்பி..அந்தப் பய தப்பிச்சிட்டானா?”

“அய்யா, மன்னிக்கனும், நம்ம ஆளுங்க எவ்வளவோ கவனமா நடந்தும், அப்படி ஆகிடுச்சி..” ஸார் என்று அழைக்கப்பட்ட கருணா பதில் சொன்னான்

”அதனால என்ன தம்பி...? நடப்பதெல்லாம் நன்மைக்கே..”

கருணாவுக்கு ஒன்றும் புரியவில்லை...”அய்யா, என்ன சொல்றீங்க..?”

”உனக்குப் புரியாது... கூலிக்கு வேலை செய்றவங்களுக்குப் புரியாது... சொத்துக்காக வேலை செய்றவங்களுக்குத்தான் புரியும்... இவங்களோட மொத்த சொத்துக்கும் அட்வான்ஸா மட்டுமே இவங்க சித்தப்பாவுக்கு 5 கோடி கொடுத்திருக்கேன்”

”அய்யா...தெளிவா சொல்லுங்களேன்...”

” சொல்றேன்...சொல்றேன்...தம்பி.... நமக்கு இவ தேவை... போலிஸூக்கு அவன் தேவை... ரெண்டு பேரும் காதலிக்காம இருதிருந்தா, இவளோட கதைய மட்டும் முடிச்சிட்டுப் போயிருக்கலாம்... ஆனா இப்போ காதல் குறுக்கே வந்திருச்சே...அது பழிவாங்கத் துடிக்குமே.. அதனால அவனையும் முடிச்சிலாம்னு நினைக்கும்போது போலீஸ் குறுக்க வந்திருச்சி... விசாரிச்சா, பய போலீஸ்க்கு தேவைப்பட்டிருக்கான், அதான், இவளைக் கொன்னுட்டு பழியை அவன் மேல போட திட்டம் போட்டேன்... ஆனா எதிர்பாராதவிதமா போலீஸைக் கொல்ல வேண்டியதாப்போச்சி , இப்போ போலீஸ் அந்தப் புரட்சிக்காரனைத் தீவிரவாதியா முடிவு பண்ணித் தேட ஆரம்பிச்சிட்டாங்க... இனி நாம விஜியைக் கொல்ல வேண்டியதில்ல... அவன போலீஸ்காரங்க போட்டிறுவாங்க...நாம செய்ய வேண்டியதெல்லாம் இவளோட அப்பனைக் கார் ஏத்திக் கொன்னதும்... சொத்துக்கு ஆசைப்பட்டு இவளையும் கொன்னது விஜிதான்னு போலீஸ்க்காரங்களை நம்ப வைக்கனும்...”

“அய்யா...சூப்பருங்கய்யா... அப்ப இவளைப் போட்டுறலாமாய்யா..?”

“இருங்க தம்பி...முதல்ல, போலீஸ நம்ப வைப்போம்...போலீஸ் அவனப் போட்டதும் நாம இவளப் போட்டுறலாம்...” என்று சொல்லிவிட்டு ரகு ஆவேசமாகச் சிரித்தவாறே சென்றார்.

விஜிக்குத் தலை சுற்றியது, தன்னைச்சுற்றி எவ்வளவு பெரிய மாயவலை பின்னப்பட்டிருக்கிறது என்றுதெரியவர இதயம் வழ்க்கத்தைவிட பல மடங்கு துடித்தது, வியர்வையில் போட்டிருந்த உடைகள் மொத்தமும் நனைந்தே விட்டது

நனைந்த உடை போலீஸ் அடித்த காயத்தில் பட்டதும் எரிந்தது. பாவம் விஷாந்தினி அவளை எப்படிக் காப்பாற்றப் போகிறோம்? நானும் இந்த ஆபத்தில் இருந்து எப்படி விடுபடப்போகிறேன்? நினைப்பே கடும் இருளாக இருந்தது விஜிக்கு

அவர் சொன்னது போல் போலீஸ் நிச்சயமாக யார் எது சொன்னாலும் நம்பும், ஏற்கனவே மீடியாவில் புரட்சிக்காரன் , தீவிரவாதி பட்டம் கிடைத்துவிட்டது...இனி அதை யார் நினைத்தாலும் மாற்றிவிட முடியாதநிலை ஆகிவிட்டதே...

போலீஸ் தரப்பில் ஒரு உயிர் போயிருக்கிறது... இரண்டு காவலர்களும் காயம் பட்டிருக்கிறார்கள்... காவல்துறையின் வலைக்கு நான் தப்பிவிட்டாலும்... இனி எனக்கென்று ஒரு நிரந்தர வலை ஏற்பட்டுவிட்டது.

நான் எப்படி காவல்துறையை நம்ப வைப்பேன்? நான் எப்படி விஷாவை மீட்பேன்? என் புரட்சிச்சிந்தனையில் எந்தத் தோய்வும் இல்லாது விஷாவுடன் வாழ்க்கையைத் தொடங்குவேன்?

விஜிக்கு கேள்விகளின் எண்ணிக்கை மட்டும் அதிகமாகிக் கொண்டே போனதே தவிர விடை மட்டும் கிடைக்கவே இல்லை.

இந்த இடத்தில் எத்தனை சாகசம் செய்தாலும், இவர்களை மீறி, நிராயுதபாணியாக என்னால் என்ன செய்து விஷாவைக் காப்பாற்றிவிடமுடியும்? அப்படியே காப்பாற்றிவிட்டாலும் , என்னால் காவல்துறையைமீறி எப்படி விஷாவுடன் வாழ்க்கையை துவங்கிவிட முடியும்?

அப்போது விஜிக்கு ஒரு யோசனை தோன்றியது... விஷா சித்தப்பாவின் நண்பர் சொன்னது போல் எப்படியும் என்னைக் கொன்ன பின்னாலதான் விஷா உயிருக்கு ஆபத்து இருக்கு... அதனால விஷாந்தினி சாகாம இருக்கனும்னா நான் உயிரோட இருக்கணும்... அதனால இங்கிருந்து போகணும், இயக்கத்தோழர்களைத் தொடர்புகொண்டு உதவி கேட்கவேண்டும்... காவல்துறைக்கு உண்மையை விளங்க வைக்க வேண்டும்...

ஒரு முடிவுக்கு வந்தவனாக விஜி அங்கிருந்து நகர்ந்தான்... விஷாந்தினியின் முகம் மனதுக்குள் பிம்பமாக வந்து போனது..சுற்றிலும் அடர்காடாக இருந்தது, கண்ணுக்கு எட்டியதூரம் வரை குடியிருப்புகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை, கேள்விகள் சூன்யமாக சூன்யமாக போலீஸ் அடியின் வலியும் அதிகமானது, கால்கள் தளர்ந்தன, அதிகப்படியான தைரியம் இப்போது தேவைப்பட்டது...

சேகுவாராவை மீண்டும் நினைத்துக்கொண்டான், அடிவாங்கும்போது தைரியம் கொடுத்த சேகுவாராதான் வலியையும் தாங்க உதவினார்.. என் தோழன் ‘பொலிவிய’க் காடுகளில் இப்படித்தானே அலைந்திருப்பார்... தோழனின் பொலிவிய நாட்குறிப்பின் ஒவ்வொரு நாளும் மனதுக்குள் நிழலாடி புதிய தெம்பைக் கொடுத்தது...அந்த தெம்பிலேயே வெகுதூரம் நடந்திருந்தான் விஜி..

சின்ன ஓடை வழிமறித்தது, அந்த தண்ணீர் அப்போது அவசியமாயிருந்தது, தண்ணீர் தாகத்தை மட்டுமல்ல, கொஞ்சம் பசியையும் போக்கியது,

மரக்காற்றின் மெல்லிய அசைவின் இதமே விஜிக்கு தூக்கத்தைக் கொடுத்தது, அப்படியே தூங்கிப்போனான்..

********

காவல்துறைத் தலைவர் அலுவலக் கூட்ட அரங்கில் காவல் துறையைச் சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் பதட்டமாக இருந்தனர்.

சற்று நேரத்திற்கெல்லாம் காவல்துறைத் தலைவர் வந்தார்...அனைவரும் எழுந்து சல்யூட் அடித்து அமர்ந்தனர்.

செருமியபடியே ஆரம்பித்தார்.. ”ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை இழந்திருக்கோம்... ரெண்டு காவலர்கள் காயம் பட்டிருக்காங்க அவனோட இருந்த ஒரு சாப்ட்வேர் பெண்ணும் கடத்தப்பட்டிருக்காங்க விஜியை அரெஸ்ட் பண்ணச் சொன்ன ஏ.சி யை சஸ்பெண்ட் பண்ணிட்டீங்க தானே..?”

“சார்...வந்து...இன்னும் பண்ணல...உங்களப் பார்த்து விளக்கம் சொல்லனும்னு நினைக்கிறாரு அவரு...” டி.சி சொல்ல...

`மிஸ்டர் டி.சி... இல்லனா, உங்கள நான் சஸ்பெண்ட் பண்ண வேண்டியிருக்கும்...”

“சார்... அந்த சம்பவத்திற்கும்....” டி.ஸி முடிப்பதற்குள் இடைமறித்த காவல்துறைத் தலைவர்.. ”மிஸ்டர் டி.ஸி... சி.பி.ஐ நமக்கு கொடுத்த இன்ஸ்ட்ரெக்ஸனே... சி.பி.ஐக்கு உதவி பண்றதும்... நமக்குக் கிடைக்கிற விஜி பற்றிய தகவல்களை அவங்களோட பகிர்ந்துக்கிறதும் தான்... விஜிட்ட அந்த இயக்கம் பத்தின தகவல் இருக்குன்னு தான் சொல்லியிருந்தோம்.... ஆனா தேவை இல்லாம அரெஸ்ட் பண்ணி அடிச்சதுனாலதான், அவங்க இயக்கத்திக்காரங்க வந்து இவ்ளோ சேதப்படுத்தி மீட்டுட்டுப் போயிட்டாங்க.... உங்களுக்கு எல்லா அதிகாரமும் தர்றேன்... என்கவுண்டர் உட்பட... ஒரு உயிர் போயிருக்கு... இன்னும் 24 மணி நேரத்துக்குள்ள அந்த சாப்ட்வேர் பெண்ணைக் கண்டுபிடிக்கணும்... விஜி சாகணும்... விஜி சாவு, அந்தப் புரச்சிக்காரங்களுக்கு சாவு மணியா இருக்கணும்... அண்டர்ஸ்டேண்ட்..?”

“ஸார்....” அந்த டி.ஸி...ஏதோ சொல்ல வர .... “ இடூ இட் ஐ சே....” எழுந்து போய்விட்டார் காவல்துறைத் தலைவர்

காவல் துறை முழுவீச்சில் இறங்கியது... விஜியை சுட்டுக்கொல்ல...

**********

விஷாந்தினியின் கண்கள் கட்டப்பட்டிருந்தது. நேரத்திற்கு உணவு தண்ணீர் வந்தாலும், அவளால் சரியாக சாப்பிடமுடியவில்லை.

தன்னை எல்லாவிதத்திலும் காப்பாற்றுவான் என்று நினைத்திருந்த விஜியாலும் தனது பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காமல் போனது அவளுக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது.

முதல் அத்தியாயத்திலேயே தேவதைகள் கொல்கிறார்கள் என்ற நினைப்பில் இருந்தவனை தேவதைகள் தூங்குகிறார்கள் என்று மாற்ற வைத்தேன்... ஆனாலும் இப்போது அவன் நினைத்தது போலவே ஆகிவிட்டதே... என்னால் அவன் கொல்லப்படும் சூழ்நிலை உருவாகிவிட்டதே...

அவனது துடிப்பின் மூலம் என் குடும்பப் பிரச்சனையையும் தீர்த்துவிட்டு, அவனுடன் நல்லதொரு வாழ்க்கையையும் ஆரம்பிக்கலாம் என்றிருந்தேனே...
இப்படி என் நினைப்பில் மண் விழுந்துவிட்டதே....

தன்னைக் கடத்தியதன் மூலம் சித்தப்பாவே வேறுவகையில் சிக்கிக்கொண்டுவிட்டார்... தமிழ்நாட்டுக் காவல் துறை அவரை சும்மா விட்டுவிடாது..... இதுவும் என் நன்மைக்கே... என நினைத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது....சட...சட வென துப்பாக்கிச் சத்தம் கேட்டது....

அந்தக் கட்டிடத்தை போலீஸ் சுற்றி வளைத்திருந்தது....

(தொடரும்......) *


*(கதையை தொடர விரும்புவோர்... தோழர் கவிஜியை தொடர்பு கொள்ளவும்...)

எழுதியவர் : ஆண்டன் பெனி (30-Nov-15, 2:08 pm)
பார்வை : 216

மேலே