சோமவார விரத கதை

சோமவார விரதம் ஈசனுக்குரிய அஷ்ட மகா விரதங்களுள் ஈசனுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக் கூடியது என புராணங்கள் குறிப்பிடுகின்றன.

பிரஜாபதி தட்சனுக்கு மொத்தம் அறுபது பெண்கள். அவர்களுள் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திர கன்னிகளும் சந்திரனை மணமுடிக்க விரும்பி தவமிருந்து தட்சனின் ஆசிகளோடு அவரை திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் நடந்த புதிதில் சந்திரன் எல்லோரிடமும் அன்பாகவே நடந்து கொண்டான். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவன் ரோஹிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டி மற்றவர்களை ஒதுக்கத் தொடங்கினான்.

இதனால் கோபம் கொண்ட மற்ற இருபத்தாறு மனைவிகளும் சந்திரனின் மீது கோபமும் ரோகிணியிடம் பொறாமையும் அசூசையும் கொண்டு தங்களது தகப்பனாரிடம் முறையிட்டனர்.

இதைக்கேட்ட தட்சன், சந்திரன் அவனது வாக்குறுதியை மீறுவதைப் பார்த்து தன் மக்களின் நிலை கண்டு வருத்தமும் கோபமும் கொண்டான்.

எனவே அவர் சந்திரனைப் பார்த்து தன் இருபத்தியேழு பெண்களையும் சமமாகப் பாவித்து அனைவரிடமும் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

சந்திரன் அப்போதைக்கு அதை ஒப்பு கொண்டாலும் மீண்டும் அவன் அதே போலவே நடக்கத் தொடங்கினான். நிலை பொறுக்காத மற்ற பெண்கள் மீண்டும் தட்சனிடம் முறையிட்டனர்.

சந்திரன் அவனது வாக்குறுதியை மீறுவதைப் பார்த்து தன் மக்களின் நிலை கண்டு வருத்தமும் கோபமும் கொண்டான் தட்சன். தன் பெண்கள் கண்ணீரும் கம்பலையுமாய் நிற்பதைப் பார்த்த தட்சனுக்கு கோபம் அதிகரித்தது.

கோபம் கொண்ட தட்சன், அவனுக்கு கொடிய நோய் தோற்றி அழகு மற்றும் தேஜஸ் அனைத்தையும் இழக்க சாபமிட்டார். இதனால் சந்திரன் மிகவும் பலவீனமாகி, அழகை இழந்து மிகுந்த துன்பத்திற்குள்ளானான்.

சந்திரன் தேவர்களிடம் முறையிட அவர்கள் அவனை பிரமனிடம் அழைத்துச் சென்றனர்.பிரம்மன் சந்திரனுக்கு அறிவுரை கூறி புண்ணியத் தலமான பிரபாசத்திற்குப் போய் பரமசிவனை வணங்கினால் அவர் அவனது குறையை நீக்குவார் என்று கூறி மறைந்தார் .

சந்திரனும் உடன் பிரபாசத்திற்கு சென்று சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து மிருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரித்து இந்த சோமவார விரதம் பின்பற்றி ஈசனை வணங்கினான்.

சந்திரனின் பக்தியில் நெகிழ்ந்த சிவன் அவனுக்கு அருள் புரிய திருவுள்ளம் கொண்டார். எனவே ,ஒரு மாதத்தில் பதினைந்து நாட்கள் சந்திரனின் கலைகள் குறைந்து மீதிப் பதினைந்து நாட்களில் அது மீண்டும் வளர பரமன் அருள் புரிந்து அவனை அவரது சிரசில் சூடி சந்திரசேகரர் / சோமசுந்தரர் ஆனார்.

ஓம் நமசிவாய!

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (30-Nov-15, 3:33 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 290
மேலே