வர்தா

#வர்தா

நடா புயல் ஜீவனற்று
தடுக்கி விழுந்தது கண்டு
வர்தாவே
நீ நையாண்டி செய்திருக்கக்கூடும்..!

வங்கக்கடலில் பம்பரம் சுழற்றி
அலை கயிற்றால்
கரையோர படகுகளை
சுருட்டிக் கொண்டாயே..!

மீன் பிடிக்க வந்த அப்பாவிகளை
ஏன் பிடித்துக் கொண்டாய்
வலைக்கயிறு போட்டு
உயிரையும்தான்..!

பஞ்ச பூதங்களில் காற்றும் ஒன்றாம்
புரிந்துவிட்டது புயலாய் வரும்போது
நீ மாபெரும் பூதம்தான்..!

கரையேறிய வர்தா
காமவயப்பட்டிருந்ததா..?
கைக்கு அகப்பட்ட மரங்களையெல்லாம்
திமிர திமிர கற்பழித்துவிட்டதே,,?
கற்புள்ள மரங்கள்
கட்டையை சாய்த்து கட்டையாய்..
இனி கரியாகவும் கூடும்..!

உரமிட்டோம் மழை வளர்க்க
மழை காணும் முன்
மரங்களை மரணம் காண வைத்தாயே
நீ பூதமேதான்..!

உனக்கு தாழேது..?
தாழினையும் உடைக்கும்
சர்வ வல்லமை
உனக்கு யார் தந்தது..?

இருட்டினில் மூழ்க வைத்தாய்
எண்ணிக்கையில்லா வீடுகள் இடித்தாய்
கோடரியின்றி மரங்கள் வெட்டினாய்

கொண்டுவர வேண்டிய
மழையை மட்டும்
ஏன் மறந்தாய்..?

மழைக்காய்
சேதங்களுக்கும் துணிந்தோம்..
சேதங்களை மட்டும் நிகழ்த்திவிட்டு
சோகத்தில் ஆழ்த்திவிட்டாயே
மழையை சுமந்து வர
உனக்கும் தான் சக்தியில்லை...

வர்தா
நீ வராமலே இருந்திருக்கலாம்..
எல்லோர் வீட்டு வாயிலிலும் நுழைந்த நீ
எல்லோர் வாயிலும் நுழைந்துவிட்டாய்
அத்தனையும்
உனக்கான சாபங்களாய்..!

-சொ.சாந்தி-

எழுதியவர் : சொ. சாந்தி (14-Dec-16, 11:03 pm)
பார்வை : 362

மேலே