யாரும் அறிவதில்லை

காதலெனும் பருவத்தை
காலமகள் தந்துவிட
கன்னிநீ நிராகரித்தாய்
கண்ணிரண்டும் கலங்குதடி!

உனைமெல்ல சிறைகொள்ள
உயிர்கொண்டு வந்தவனை
சிறையிட்டு தீவைத்தாய்
சதையெல்லாம் வேகுதடி!

காயங்கள் பட்டமனம்
காலத்தில் ஆறாமல்
காரிகையே உனைநினைத்து
கவிதைகள் எழுதுதடி!

உதறிவிட்ட காதலோடு
உதறிவிட மறந்துவிட்ட
நினைவுகளோ ஒவ்வொன்றாய்
உன்னுருவம் காட்டுதடி!

வாழையிலை பச்சைபோல்
வாழ்ந்துவந்த என்னுள்ளம்
பாலைவன நிலம்போல
பாவையே மாறுதடி!

தண்ணீர்கொண்ட மேகங்கள்
தாகம்தீர்க்க பொழியாமல்
என்வீட்டில் வாசல்மட்டும்
திராவகம்போல் பொழியுதடி!

பாராண்ட மனிதரெல்லாம்
பார்வைமுன் வந்தாலும்
எனையாண்ட உன்முகமே
என்னுள்ளம் தேடுதடி!

உலகத்தில் ஒருஓரம்
உயிர்பிழைக்கும் என்தேகம்
உனைநினைத்தே பலநாளாய்
உருக்குலைந்து போகுதடி!

வாழுகின்ற நாள்களிலே
வாராமல் போய்விட்டால்,
கன்னிஎன் வலியெல்லாம்
காவியங்கள் பாடுமடி!

எதிர்கால கட்டத்தில்
ஏமாந்து போய்விட்டால்
உயிரே! என்கவியெல்லாம்
உனைவாழ வைக்குமடி

எழுதியவர் : (22-Jan-17, 11:23 am)
சேர்த்தது : Ijaz R Ijas
பார்வை : 246

மேலே