இயற்கை

மயக்கும் மாலை நேரம்
மஞ்சள் தூவிய வானம்
நதியோரம் வந்த நானும்
தென்மேற்கு பருவக் காற்று
வீசிவந்து என்னை தொட்டபோது
என்னை மறந்து, இன்னும் என்ன
விருந்து அள்ளி தந்திடுவாய் இயற்கையே
என்று விண்ணை நோக்கி நின்றேன்,
இப்போது இன்ப மண் வாடை என்
மூக்கை துளைக்க மெல்ல மெல்ல
கருமேக போர்வை மஞ்சள் வானை மூட
சிறு தூறல் மழைத்தூறல் என்னை நனைக்க
புது மழைத்தூறலில் என்னவள் என்னைத்தொட்டு
அணைத்த சுகம் கண்டேன் ; இது போதாது என்று
எண்ணிய இயற்கை கண்ணசைக்கும் நேரத்தில்
என் தலைக்கு மேலே விண்ணையும் மண்ணையும்
இணைத்தது போல் பெரும் வானவில் ஒன்றை
தோற்றுவித்தாள் அதைப் பார்த்து பார்த்து
அனுபவிக்கையிலே , மழைத்தூறலும்
சிறு மழையாய் மாறியது, காற்றும் சற்று
வேகம் கொண்டது -காற்றோடு சேர்ந்து மழை
சல்லாபமாய் சதிராட்டம் போட்டது
ஆடி, அசைந்து, நெளிந்து மழை கற்றை
காற்றில் அசைந்தாடுவது நங்கை ஒருவள்
அரங்கில் தில்லானா அபிநயம் போல் தோன்றியது
எங்கோ குயில் ஒன்றின் இன்னிசை இதில் சேர்ந்து
மெல்ல கொட்டிய இடி ஓசை மத்தளம் இசைத்தது போல்
மேல்வானில் வானவில் தோரணம்
மறையும் கதிரோனின் ஒளியில்
மின்னுவது போல் ஒரு மயக்கம் நெஞ்சில் ;

கதிரோனும் மறைந்து விட்டான் இப்போது
வானவில் காணவில்லை இப்போது ,, ,
மழையும் நின்றது,மேகமும் மறைந்தது
சில்லென்று காற்று மட்டும் வீசியது
மாலை மயக்கத்தில் இருந்து மீண்ட நான்
வீடு நோக்கி நடந்தேன்
என்ன மாயம் என்ன ஜாலம் தந்தது
இந்த இயற்கை,அப்பப்பா மனதில்
ஓர் இன்ப தாக்கம் தந்ததே நதியோர
வழிப்போக்கன் எனக்கு!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Jun-17, 5:05 pm)
Tanglish : iyarkai
பார்வை : 1035

மேலே