சீரைத் தேடின் கீரையைத் தேடு

நான் தமிழக அரசு இராசாசி மருத்துவமனை கண் மருத்துவப் பிரிவில் பணியாற்றிய போது குழந்தைகள் நலப் பிரிவில் Nutrition Research Centre (NRC) என்ற மையம் இருந்தது. அதில் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு போன்ற நோயினால் ஏற்படும் சத்துக்குறைவு காரணமாக உண்டாகும் கண்பார்வைக் குறைபாடுகளுக்கு தகுந்த ஆலோசனைகளும், மருத்துவமும் வழங்கப்படும்.

அப்பொழுது அரசு செய்தித் துறையிலிருந்து ’கீரைப்பட்டணம்’ என்ற குறும்படம் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் போட்டுக் காண்பிக்கப்படும். அந்தப் படத்தில் வரும் கதையில் அந்நாட்டு அரசனின் மகனும், சாதாரண சேவகன் மகனும் ஒன்றாகப் படிப்பவர்கள். மாலை நேரத்தில் விளையாடும்பொழுது, சிறிது சூரிய ஒளி குன்றிய நேரம் அரசகுமாரனுக்கு விளையாடும் பொருள் தெரியாது. சேவகன் மகனுக்கு எல்லாம் தெரியும்.

அரசனின் உத்தரவுப்படி, அரச வைத்தியர் இருவரையும் பரிசோதித்து, அவர்கள் உண்ணும் உணவு வகைகள் பற்றி விசாரிக்கிறார். அரசகுமாரன் விலை உயர்ந்த காய் கனிகளையும், சேவகன் மகன் சாதாரணமாக விளையும் விலை மலிவான, பசுமையான கீரையையும் சாப்பிடுவதை அறிந்தார்.

அரசன் மகனுக்கு பசுமையான கீரையைச் சாப்பிடாததனால்தான் மாலைக்கண் நோய் பாதிப்பு ஏற்பட்டது என அறிந்ததும், அந்த நாட்டில் யாருக்கும் மாலைக்கண் நோய் பாதிப்பு ஏற்படக்கூடாது என்றும், அனைவரும் கீரையைத் தினமும் சாப்பிடவேண்டுமென்றும் அரசன் ஆணையிட்டான். அந்த நாட்டிலுள்ள நிலங்களிலெல்லாம் கீரை பயிரிடவேண்டும் என்றும் ஆணையிட்டான். அதனால் அவன் நாடும் கீரைப்பட்டணம் என்று அழைக்கப்பட்டது.

இதிலிருந்து கீரையின் மகத்துவம் என்னவென்று யாவரும் புரிந்து கொண்டோம். கீரை உண்பதின் அவசியம் பற்றி தினமணி ’சிறுவர்மணி’ யின் 20.08.11 இதழில் என்.லெட்சுமி என்பவர் எழுதிய எளிமையான கவிதை ஒன்று.

நாளும் ஒரு கீரை!

பாட்டி செய்த சமையலிலே
நாளும் உண்டு ஒரு கீரை!
குழம்பில் தண்டுக் கீரையாம்
கூட்டில் முருங்கைக் கீரையாம்!

பொன்போல் மேனி பெற்றிடவே
பொன்னாங் கண்ணிக் கீரையாம்!
அகத்தின் சூடு குறைந்திடவே
அகத்திக் கீரை உண்டிடலாம்!

அனைவரும் விரும்பும் சிறுகீரை
ஆற்றல் தந்திடும் முளைக்கீரை!
ஞாபக சக்தி வளர்ந்திடவே
வாகாய் வல்லாரைக் கீரையாம்!

நாளும் உணவில் ஒருகீரை
நீயும் உண்ணப் பழகிவிட்டால்
நோய் நொடியின்றி வாழ்ந்திடலாம்
நூறு வயது பெற்றிடலாம்!

’சீரைத் தேடின் கீரையைத் தேடு’ என்ற புதுமொழியைத் தந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த வி.ச.வாசுதேவன் என்ற அன்பர். ஆகையால் பெரியவர்கள் முதல் பள்ளிக் குழந்தைகள் வரை வாரம் இருமுறையாவது பசுமையான கீரை வகைகளை சமையலில் சேர்த்து சாப்பிட்டுவர வேண்டும். மாலைக்கண் நோயின்றி அனைவரும் ஆரோக்கியமாய் வாழ வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Sep-12, 10:57 pm)
பார்வை : 324

சிறந்த கட்டுரைகள்

மேலே