ஆசை ரெக்கைக்கொண்ட கனவு ஈக்களை இனிப்பு இன்பங்களிலே மொய்த்திருக்க...
ஆசை ரெக்கைக்கொண்ட
கனவு ஈக்களை
இனிப்பு இன்பங்களிலே
மொய்த்திருக்க வைக்கின்றன.
மனித மனம்.
ஆசை எது ?
இலட்சியம் எது ?
பாகுப்பாடுகள் தெரியா
பகுத்தறிவில் நிம்மதிக்கான
குருட்டு மூடநம்பிக்கைக்கு
அடங்கவே செய்கின்றன
மனித மனம்.
வருடும் தென்றல்..!
மிரட்டும் சூறாவளி ..!
காற்றின்
இருவேறுப்பட்ட
இந்த முகங்கள் என
அறிய தெரியாமல்
ஆராய விரும்பாமல்
அறிவிலித்தனத்தில்
மனிதனை முடக்கவே
பாடுப்படுகின்றன இந்த
மேதாவித்தனமான மனம்.
உயிர் மூச்சை
கட்டுப்படுத்தி ஓடுபவனே
வெற்றி எல்லையை
இனிதே தொடுவான்.
உயிர் பிச்சைக்கு
கையேந்தி நிற்பவன்
வெற்றி இல்லையே
என்றே புலம்புவான்.
சுழலில் சிக்கிக்கொண்டு
சருகாய் பதறுவதைவிட
ஆழிபேரலையில் கூட
படகை செலுத்தவே
விரும்பி துணியும்
எதையும் தாங்கும்
இதயம் கொண்டவனின்
வைராக்கிய மனது.
வாழ்வது ஒருமுறை
சாவதும் ஒருமுறை
எதை எதிர்த்து
எதை சாதித்து
எதை பெற்றோம்
என்பதில் இருக்கிறது
நம் பிறப்பின் அர்த்தம்.
கர்ப்ப பையிலிருந்து
முட்டி மோதி
குழந்தையாய் பிறந்தபோதே
ஆரம்பித்துவிட்டது.
நமது விளையாட்டு.
விளையாடிதான் பார்ப்போமே…!
வாழ்க்கை என்ற போர்களத்தில்
விளையாடிதான் பார்ப்போமே…!
வெற்றியா? தோல்வியா ?
முடிவுரை எதுவாககூட இருக்கட்டுமே..!
எனக்கென்ன கவலை ?!!
என் மனமே….!
கவலை விடு..!
போராடு..! விளையாடு..!
இறுதிவரை தளராமல்
உறுதியோடு விளையாடு..!
முடிவுரை எதுவென்று
நாளைய சரித்திரம்
இந்த உலகத்திற்கு
அறிவிக்கட்டும்.
இதுதான் வாழ்க்கை...!
அடத்தூ ..! இவ்வளவுதான் வாழ்க்கை...!
விளையாடு..! மனமே...! விளையாடு...!
---------------------இரா.சந்தோஷ் குமார்