செந்தாமரை

நீர், இலை, நீர்த்துளிகள்
கண்ணாடித் தரையின் மீது கண்கவர் பச்சைத் தட்டில்
எண்ணாத ஒளிமுத்துக்கள் இறைந்தது போல்குளத்துத்
தண்ணீரிலேபடர்ந்த தாமரை இலையும், மேலே
தெண்ணீரின் துளியும் கண்டேன் உவப்பொடு வீடு சேர்ந்தேன்.

தாமரையின் சிற்றரும்பு
சிலநாட்கள் சென்ற பின்னர்க் குளக்கரை சென்றேன்! பச்சை
இலைத்தட்டில் சிந்தும் பால்போல் எழில்நீரும், கரிய பாம்பின்
தலைகள்போல் நிமிர்ந் திருந்த தாமரைச் சிற்ற ரும்பும்
இலகுதல் காணப் பெற்றேன்; காட்சியின் இன்பம் பெற்றேன்.

முதிர் அரும்பு
மணிஇருள் அடர்ந்த வீட்டில் மங்கைமார், செங்கை ஏந்தி,
அணிசெய்த நல்விளக்கின் அழகிய பிழம்பு போலத்
தணிஇலைப் பரப்பி னிற்செந் தாமரைச் செவ்வ ரும்பு
பிணிபோக்கி என்வி ழிக்குப் படைத்தது பெருவி ருந்தே!

அவிழ் அரும்பு
விரிக்கின்ற பச்சைப் பட்டை மேனிபோர்த் துக்கிடந்து
வரிக்கின்ற பெண்கள், வான வீதியைப் பார்த்துப் பார்த்துச்
சிரிக்கின்ற இதழ்க்கூட்டத்தால் மாணிக்கம் சிதறு தல்போல்
இருக்கும் அப் பச்சி லைமேல் அரும்புகள் இதழ்விரிக்கும்!

மலர்களின் தோற்றம்
விண்போன்ற வெள்ளக் காடு, மேலெலாம் ஒளிசெய் கின்ற
வெண்முத்தங் கள்கொழிக்கும் பச்சிலைக் காடு, மேலே
மண்ணுளார் மகிழும் செந்தா மரைமலர்க் காடு, நெஞ்சைக்
கண்ணுளே வைக்கச் சொல்லிக் கவிதையைக் காணச் சொல்லும்.

ஒப்பு
வாய்போலச் சிலம லர்கள்! 'வா' என்றே அழைக்கும் கைபோல்
தூயவை சிலம லர்கள்! தோய்ந்துநீ ராடி மேலே
பாயும்நன் முகம்போல் நெஞ்சைப் பறிப்பன சிலம லர்கள்!
ஆயிரம் பெண்கள் நீரில் ஆர்ப்பாட்டம் போலும் பூக்கள்!

செவ்விதழ்
ஓரிதழ் குழந்தை கன்னம்! ஓரிதழ் விழியை ஒக்கும்!
ஓரிதழ் தன்ம ணாளன் உருவினைக் கண்டுகண்டு
பூரிக்கும் உதடு! மற்றும் ஓரிதழ் பொல்லார் நெஞ்சம்!
வாரித் தரச்சி வந்த உள்ளங்கை யாம் மற்றொன்று!

தேன்
மூடிய வாய்திறந்து உளமார முன்னா ளெல்லாம்
தேடிய தமிழு ணர்வைத் தின்னவே பலர்க்கும் தந்தும்
வாடாத புலவர் போலே அரும்பிப்பின் மலர்ந்த பூக்கள்
வாடாது தேன்கொ டுக்கும் வண்டுகள் அதைக் குடிக்கும்!

வண்டுகள்
தேனுண்ண, வண்டு பாடும்! தேனுண்டபின், ஓர் கூட்டம்
தானோர்பால் தாவும்! வேறோர் தனிக்கூட்டம் களியாட்டத்தை
வானிடை நடத்தும்! ஒன்று மலர் என்னும் கட்டி லுண்டு
நானுண்டென் றுறக்கம் கொள்ளும் நறும்பொடி இறைக்கும் ஒன்று.

பாட்டு, மணம்
என்னைநான் இழந்தேன்; இன்ப உலகத்தில் வாழ லுற்றேன்
பொன்துகள், தென்றற் காற்றுப், புதுமணம், வண்டின் பாட்டுப்,
பன்னூறு செழுமா ணிக்கப் பறவைபோல் கூட்டப் பூக்கள்
இன்றெலாம் பார்த்திட்டாலும் தெவிட்டாத எழிலின் கூத்தே


கவிஞர் : பாரதிதாசன்(3-Jan-13, 6:10 pm)
பார்வை : 0


மேலே