முடிவில்லா மழையோடு வந்தான் வென்றான்

முடிவில்லா மழையோடு
விளையாடும் எங்கள் கூட்டம்
அடிவானின் நிறமெல்லாம்
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்
விடிகாலை பனியோடு நம்
புன்னகையின் மூட்டம்
அடிநெஞ்சில் உற்சாகம்
கற்பூரம் போலே பற்றட்டும்

சீறிப் பாயும் வெள்ளம் என
உள்ளம் துள்ளி ஆடட்டும்!
காட்டுத் தீயின் பந்தாய் - என்
கால்கள் இங்கே ஓடட்டும்!

அடி வைத்தால்
அதிரட்டும்
வான் மீன்கள்
உதிரட்டும்
போராடும் மட்டும்
ஏதும் எட்டும்
மேகம் முட்டிக்
கொட்டட்டும்!

நம் பாதை செல்லும் நீளந்தான்
நம் புன்னகையின் நீளங்கள்
நாம் ஏறி வரும் ஆழந்தான்
நம் இன்பங்களின் ஆழங்கள்

சேற்றிலே நீ விழுந்தாலும்
தாமரை மாலைகள் மாட்டிடு
நேற்று நீ போர் இழந்தாலும்
நாளை உன் நாளெனக் காட்டிடு

உன் பாதம் கொஞ்சம் தேயாமல்
உன் வாழ்க்கை என்றும் மாறாது!
கண் ஈரம் கொஞ்சம் காயாமல்
உன் காயம் ஒன்றும் ஆறாது!

தோல்விகள் ஆயிரம் எல்லாம்
தோரணம் கோர்த்திடு தோழா!
வெற்றியின் வாசலைச் சேர
காரணம் பார்த்திடு தோழா!


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 1:00 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே