முயல்

ஸ்கர்ட்டின் கீழ்விளிம்பை கடித்தபடி
ஜட்டி தெரிய வாசலில் நிற்கிற
சிறுமி புவனா கேட்கிறாள்
'முயல் என்ன செய்கிறது?'
அவளைக் கவர்வதற்காக
அறையினுள் ரகசியமாக
ஒரு முயல் வளர்ப்பதாகச் சொல்லியிருந்தேன்.
'முயல் சாப்பிடுகிறது'
என்னும் பதிலில் திருப்தியுற்றவளாய்
விளையாடப் போனாள்
'எங்கே முயல்? காட்டு பார்க்கலாம்'
என்று அடுத்த நாள் வந்தாள்
ஆப்பிள் தின்றபடி.
'பெரிய முயல் கடித்துவிடும்' என்று சொல்ல
சந்தேகச் சிரிப்புடன் வெளியே போனாள்
அவள் சொல்லித்தான் நான் முயல் வளர்ப்பது
மற்ற சிறுவர்களுக்கும் தெரிந்தது
வாசலில் கூட்டமாய் வந்து நின்று
'என்ன செய்கிறது முயல்' என்பவர்களுக்கு
பல தடவைகள் அறைக்குள் எட்டிப் பார்த்து
முயல் பற்றிய நிலவரத்தை தெரிவித்தேன்
நாளாக,
அப்படியொரு முயல் இங்கே இல்லை
எனும் உண்மை புரிந்தாலும்
நான் வீட்டைப் பூட்டிப் புறப்படும்போது
என்னையே முயலாக்கி
புவனா கேட்கிறாள்,
'முயல் எங்கே போகிறது..?'
நீண்ட கைகளை ஆட்டி
பஞ்சு ரோமத்தைச் சிலிர்த்து
மிரண்ட விழிகளால்
குறுகுறுப்பாகப் பார்த்து
முயல் சொல்கிறது...


கவிஞர் : யூமா. வாசுகி(2-Nov-11, 4:35 pm)
பார்வை : 77


மேலே