தமிழ் கவிஞர்கள்
>>
யாழன் ஆதி
>>
ஒற்றைக் கண்ணீர்த் துளி
ஒற்றைக் கண்ணீர்த் துளி
ஒற்றைக் கண்ணீர்த் துளியென
இரவின் மீதொரு துயரம்
உயர்ந்த கம்பங்களில்
தெறிக்கின்றது வெளிச்சம்
தார்ச்சாலையின் நீண்ட தனிமையில்
கொதிக்கிறது துயில்
இருளடைந்த வயிற்றுக்குள்
நிரம்பியிருக்கின்றன கைகள்
நூலறுந்த பகல்பட்டம் சிக்கிய
இரவின் துன்ப வனத்தில்
எழும்புகிறது பாடக்கனவு
கால்மடக்கி உடல்குறுக்கி
தலைதொங்கி காலத்தின் கைகளில்
பதுங்குகிறது உழைப்புத் தளிர்
இரக்கமற்ற சுரண்டலின்
குன்றாத வெப்பத்தில்
கனறுகிறது துரத்தப்பட்ட சுவாசக் காற்று
உழைத்துப் பசித்த அயர்வில்
தளும்பி நிற்கிறது
சாத்திய இமைகளோடு உயிர் எழுத்து
வெட்கமேயில்லாமல்
இழுத்துப் போர்த்திக் கொண்டு
மல்லாந்து தூங்குகிறது தேசம்