தோழா...வா...வேலை இருக்கு நமக்கு...-பகுதி :12 -அகன்
தோழா...வா...வேலை இருக்கு நமக்கு...-பகுதி :12 -அகன்
###########################################…
லே மக்கா… காடுகள் நெறைய இருந்தப்போ நல்ல மழை, நல்ல காத்து இருந்துச்சு, பயிர் நல்லா வௌஞ்சுது, பசியும், பட்டினியும் நோய் நொடியும் குறைவா இருந்துச்சு. எவனும் எவன்கிட்டெயும் ‘கோப்பை யாண்டியா’ கையேந்தி நிக்கலே அலையிலே! …மரத்தை வளர்த்துப் பாதுகாத்தியேன்னா உங்க காலம் நல்லா இருக்கும்.
தி.அமிர்தகணேசன்
############################################
மரத்தடியில் வீராச்சாமித் தாத்தா வைத்திருந்த ஒன்றிரண்டு கொழுக்கட்டைகளை ஓர் எலி இழுத்துக் கொண்டு இருந்தது!
அந்தக் கொழுக்கட்டைகள் செண்பகத்துடன் ஒரு கணக்காய் , தான் விளையாடியது நினைவிற்கு வந்தது, வீராச்சாமித் தாத்தாவிற்கு!
மஞ்சள் கொழுக்கட்டை
மாவு கொழுக்கட்டை
மாமியா பிடிச்சா
பிடி கொழுக்கட்டை
… செண்பகம் இந்தப் பாட்டைப் பாடித் தன் கையில் ‘கொட்டி’ அடித்ததும், இறுதிவரை ஒரு முறை கூடத் தன்னால் பிடிக்க முடியாமல் போனதும் நினைவிற்கு வந்து வழிநீராய் விழியோரம் மாறியது!
தன் நெஞ்சில் நிலைத்துப் போன நினைவுகள், அந்த நினைவுகளில் பின்னிப் பிணைந்து போன இந்த வேம்பு, இந்த வேம்பில் தன் செண்பகம்… இப்படிப் பல நினைவுகள்!
தான் உள்ளவரை இந்த மரத்தை இருக்க விடாமல், தன் கண்ணெதிரே வெட்டிச் சாய்த்தால்… அதை எப்படித் தாங்குவது?
செண்பகத்தின் புடவையின் ஒரு நுனி காற்றில் ஆடி இப்போது இவர் மேல்பட்டது!
எங்கோ ஓர் மூலையில் ஒரு தாய் தன் குழந்தையைப் பாட்டுப் படிச்சுத் தூங்க வைக்கும் ஓசை கேட்டது
…
“மலர்ந்தும் மலராத பாதி மலர்போல
பிறந்த தமிழ் அன்னமே…”
…இதே பாட்டு ஒரு முறை எப்படித் தன்னையும் செண்பகத்தையும் ஊரையும் கூட்டி நக்கலடிக்க வைத்தது என்பது நினைவிற்கு வந்தது, வீராச்சாமி தாத்தாவிற்கு!
கல்யாணம் ஆனகையோடு முதலும், கடைசியுமாகத் தன்னுடன் டவுனுக்கு வந்த செண்பகம் ஆசையாய்க் கேட்ட டிரான்சிஸ்டரை வாங்கிக் கொடுத்தார் வீராச்சாமி.
எப்படி அதைக் கையாள்வது என்றும் பல நாள் பாடமும் சொல்லிக் கொடுத்தார்!
ஒரு நாள் மாலை வானிலை செய்தி கேட்க டிரான்சிஸ்டரைத் தேடிய போது அதைத் தூக்கிக் கொண்டு செண்பகம் வெளியே போனதறிந்து தேடிக் கொண்டு வந்தார் வீராச்சாமி!
வேப்பமரத்தடியில் ஒரே கூட்டம்!
புரியவில்லை! வீராச்சாமி திகிலுடன் அருகில் போகப் போக ஏதோ பாட்டு சத்தம் கேட்டது!
கூட்டம் விலக்கிப் பார்த்தவர்க்கு, கையில் டிரான்சிஸ்டரை வைத்துக்கொண்டு செண்பகம் அந்த வேப்பமரத்தடியைச் சுற்றி சுற்றி வந்தாள்!
“நதியில் வௌயாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே…”
உரக்க பாட்டுச் சத்தம் கேட்டது!
“ஏளா… செண்பகம்… என்னச் செய்யயறவ இங்ஙென” எனக் கேட்டார் வீராச்சாமி.
“நீருதானே சொன்னியே… பாட்டுப் படிச்சா மரம் வளரும்னு… நல்ல தாலாட்டுப் பாட்டு ரேடியோ பொட்டியிலே படிச்சாக… அதேன்… இங்ஙென நம்ப வேம்புக்கு உரக்க வைச்சேன். தப்பிதமா” எனத் தயக்கத்துடன் குழந்தை கணக்கா கேட்டாள்!
இப்படியும் மரங்களின் மீது ஒரு மனுஷக் காதல் இருக்குமா? சூழ்நிலை மறந்தார் அப்படியே அவளைக்கட்டி அணைத்து, அந்த மரத்தடியில் அமர்ந்து இன்னும் உரக்க பாட்டை வைத்தார்!
ஏதோ திருவிழாவிற்கோ, கம்பங்கூத்தாடி கொட்டகை (சர்க்கஸ்) வரும் அறிவிப்போ என ஊரின் பலரும் வந்துப் பார்த்து, இவர்களைக் கண்டு பாட்டைக் கேட்டு நக்கலடிக்க…
இரவெல்லாம் எங்கெங்கு பாட்டுப் படிச்சார்களோ அங்கெல்லாம் மாற்றி மாற்றி ரேடியோவை திருப்பி வைத்துப் பாட்டுக் கேட்டு….
நள்ளிரவிலும் இவர்களைக் கண்டவர்கள் “இதென்ன கோட்டிக்காரத்தனமா இருக்கி” என்று போனார்கள்.
கண்களைத் துடைத்துக் கொண்டார் வீராச்மித் தாத்தா! காலையில் என்ன நிகழும் என்ற கவலை அவர் தொண்டையை அடைத்தது! ஏனோ தன் தாய் தந்தையர், சிங்காரம் பற்றிய நினைவுகள் தலைத்தூக்கின!
சிங்காரத்துடன் தானும், தந்தையும் சேர்ந்து ஒதியன் கிளைகளை வெட்டி வேலி நட்டது… என்று பல நினைவுகள்! அண்ணாந்து பார்த்தார் வேப்ப மரத்தை!
சங்கரன் கோயில் துரைக்கண்ணு வாத்தியார் நினைவில் வந்தார்! பளிங்குக் கணக்கா அவர் சொன்ன வார்த்தைகளும் நினைவுக்கு வந்தன!
“லே மக்கா… காடுகள் நெறைய இருந்தப்போ நல்ல மழை பெய்து பயிர் நல்லா வௌஞ்சுது. பசியும் பட்டினியும் குறைவா இருந்துச்சு. எவனும் எவன் கிட்டெயும் ‘கோப்பையாண்டியா’ கையேந்தி நிக்கல அலையலே! மரத்தை வளர்த்துப் பாதுகாத்தியேள்னா உங்க காலம் நல்லா இருக்கும்".
வாத்தியார் சொன்னதும், பிறகு தானே வெள்ளத்தின் சீற்றம் கண்டதும், மரங்களை வளர்க்கப் பாடுபட்டதும், அப்போப்பு… எவ்வளவு மரங்கள் இன்று இவ்வூரிலே…
ஆற்றங்கரையிலே ‘மெத்தைப்’ போட்டு எத்தனை மரங்கள் இன்று வளர்ந்து விட்டது! இனி வெள்ளத்தின் சீற்றம் மட்டுப் படுத்தப்பட்டு விடும் உயிர்ப்பலியும், நாசமும் குறைவாகவோ அல்லது இல்லாமலேயோ போகும்!மழையும் இருக்காது
என்ற பயமும் நீங்கி வறண்ட நிலங்களுக்கும் நீர் கிடைக்கும்! ஏரிக்கரை உடைப்பும் இருக்காது!
ஒரு செடி நட்டு இருப்பானா அந்த மூதி அனந்தராமன்! ஓரடி நெலம் கொடுத்து இருப்பானா அந்த மூதி! இன்று தனது வாழ்வாகிப் பேரன, இந்த மரத்தை வெட்டணமாம்!
ஆரம்பகாலத்லே தன்கூட சிநேகிதமா நடந்துகிட்ட பயதான் அவன்!
“பகையாளியைவிட கொடுமைக்காரன் யார் தெரியுமாலே சிநேகிதனா இருந்து பகையாளியா மாறினவன்தேன்! எப்படி இருந்தாலும் உன்ர கூட்டாளியா கொஞ்ச நாள் இருந்தவன்! ஒருமுறை அவனால நீ சிரிச்சு சந்தோஷம் பெற்று இருந்தியனா, அதற்காக அவனெய உட்டுடுலே. பஞ்சாயத்து பிரசிடெண்ட் ஆகித்தான் நீ ஊருக்குச் செய்யணம்னு இல்லே. செய்யற மனசு இருந்திட்டா பொறவு எதுக்குலே ஒரு சோலி வேறே…” சிங்காரம் அனந்தராமன் பற்றி தனக்குச் சொன்னதும் பஞ்சாயத்து தேர்தலில் கரைய இருந்த தன் பணம் இன்று இப்படி இந்த ஊர் மக்களுக்காகசெலவாகி இருப்பது மனதிற்கு சந்தோஷமாகத்தான் இருக்கு!
நீறுபூத்த நெருப்பா இந்த அனந்தராமன் தன்னுடன் பகைமை பாராட்டச் சில காரணங்கள் இருக்கத்தான் செய்தது!
செண்பகம் அவனைத் தள்ளிவிட்டுத் தன்னைக் கல்யாணம் செய்து கொண்டது,
பஞ்சாயத்து பிரசிடெண்ட் ஆன தனக்கு ஒப்புக்கு மரியாதையும், ஆனால் வீராச்சாமிக்கு உண்மையிலே ஊர் மக்கள் மரியாதையுடன் விசுவாசத்துடன் இருப்பது.
தான் சாதிவித்தியாசம் பார்க்காமல் இருப்பது இப்படி… இப்படித்தான்… காரணங்கள் தோரணங்களாயின!
இருந்தாலும் அதற்காகத் தன்னுடன் ஐக்கியமாகிப் போன இந்த வேப்ப மரத்தை வெட்டுவதா?
இனத்திற்கே உரிய கோபம் இந்த வயதிலும் தலை தூக்கியது!
தனக்கு வலிமை இல்லை என்பதால் ஒன்றும் செய்ய இயலாது என்று நினைத்தானா அந்த மூதி…?
தன் கண்முன் இந்த வேம்பு சாய்வதா… சரிவதா…
அவனெய ஒருமுறை கேட்டுப்புட்டா என்ன?
“லேய்… அனந்தராமா… என்ர உயிர் இருக்குறவரை அந்த மரத்தை வெட்டாதல… எனக்குப் பொறவு… சே இது என்ன சுயநலம்? தனக்குப் பிறகு எது வேண்டுமானாலும் நடக்கலாமா?
அதற்காக… செரி அந்தப் பயலை வகுந்து எடுத்திடுவோமா… அவரது கைவிரல்கள் தானாக மேலெழும்பி அந்த நரைச்ச மீசையை ஒருமுறை தடவிவிட்டன!
முடிவுக்கு வந்தவராய் எழுந்து கிளம்ப எத்தனிக்கையில் செண்பகம் புடவையின் நுனி இவரைத் தடுப்பது போல் தழுவியது.
புடவையைப் பார்த்தார் வீராச்சாமித் தாத்தா… தன் மீசையின் மேல் தன் விரல்களைப் போட்டவர் நினைவிற்குத் தனது திருமண நாளின் இரவு வந்தது.
காத்திருப்போம் தோழர்களே...
அன்புடன் அகன்