தோழா...வா...வேலை இருக்கு நமக்கு...-பகுதி :11 -அகன்

தோழா...வா...வேலை இருக்கு நமக்கு...-பகுதி :11 -அகன்

###########################################…

மரம் இறைவன் நமக்களித்த வரம்
உயிர்களுக்கு அதுதேன் பலம்
கரம் கொடுத்துக் காப்போம்
மரம் நடுவோம்! வளம் சேர்ப்போம்!
நலம் காணுவோம்!.
-தி.அமிர்தகணேசன்.

###########################################…
.
டுர்ர்ர்ர்… பிப்பி… பிப்பி… டுர்ர்ர்ர்… சிறிது நேரத்தில் மேலும் கீழும் இரைக்க, லட்சுமணன் வந்துசேதி சொன்னான்.

“தாத்தா… தா… த்… தா… இங்ஙென என்னமோ… அந்தக் கடுவன் பூனை… நெழலுக்கு ‘செட்’ கட்டப் போதாம்… இந்த மரத்தைக் கூட வெட்டப் போதாம்…”

அதிர்ந்து போனார் வீராச்சாமித் தாத்தா!
குசும்பு பண்ணத் தொடங்கிவிட்டானா அனந்தராமன்.

“தாத்தா… இது என்னது… அதான் நெழலுக்கு இவ்ளோ பெரிய வேம்பு இருக்குதுல்லா… பொறவு ஏன் செட் கட்டோணும்” முருகன் கேட்டான்!

“அப்படியே கட்டினாலும் மரத்தை ஏன் வெட்டோணும்” லட்சுமி கேட்டாள்!

குழம்பிப் போனார் வீராச்சாமித் தாத்தா.

குழந்தைகள் எல்லாம் செய்தி சொல்ல அவரவர் வீட்டிற்குப் போய் விட்டார்கள்.

அப்படியே கவலையோடு சாய்ந்த வீராச்சாமித் தாத்தாவோடு முருகனும், லட்சுமியும் தூங்கிப் போனார்கள்!

அந்தி சாயும் நேரம்!

பேச்சுக்குரல் கேட்டு மூவரும் விழித்துக் கொண்டனர்!

வேப்ப மரத்தைக் காட்டி அனந்தராமன் ஏதோ பேசினான்! அவனுடன் இரண்டொரு ஆட்களும் இருந்தனர்.

“நல்லா பார்த்துக்குங்கலே!” நேரா மரவாடிக்கு
எடுத்துப் போய் சைஸாக்கோணும் வாசல்கால் கதவுப் பலகை மற்ற உருப்படிகள்… எல்லாம் இதே மரத்லதேன் செய்யோணும்… எம். எல். ஏ ரொம்ப கண்டிப்பானவர்… வேலை சுத்தமா இருக்கோணும்!
நூறு வருஷத்து மரம் ஒரு பூச்சி புழு அரிக்கல… யாரையும் இதுவரை காவு வாங்காத மரம்! காலையிலே வந்து உச்சிக்குள்ளார சோலிய முடிச்சுப் போட்டுடணும்… என்ன வௌங்குதா?

வீராச்சாமித் தாத்தாவைப் பார்த்தவன் அலட்சியமா “டவுன்லே இருந்து தாக்கீது” வந்துட்டுது! நாளேயிலே இருந்து நீரு என்ன செய்வீரு? துலக்கன் (ஷாஜஹான்) தன் பொஞ்சாதிக்கு பளிங்கு மண்டபம் கட்டின கணக்கா நீரு இந்த மரத்தடியைப் பிடிச்சு வைச்சுக்கிட்டிடு ஒரு தராதராம் இல்லாமே சேரிக் குழந்தைகள், பஞ்சம் பொழைக்க வந்ததுவேன்னு கொட்டமா அடிக்கிறீரு… இனிப்பார்ப்போம்!” எகத்தாளமாய் பேசினவன் ஏதோ சாதனை செய்தது போல ஆட்கள் தொடர நடந்தான்!

“பஞ்சாயத்து கூட்டலாமா தாத்தா” லட்சுமி கேட்டாள்.

“இவன் என்னமோ டவுன்லே இருந்து தாக்கீது வந்து இருக்குன்னு சொல்லுதான், குழந்தைகளே….. எனக்கு ஒண்ணும் வௌங்கலேயே.”

“ஏ, லட்சுமி என்னது இது? அந்த எம். எல். ஏயும் இந்தக் கடுவன் பூனையும் நம்ப பள்ளி விழாவிலே உறுதி மொழி சொன்னாகளே… நாமெல்லாம் சேர்ந்து சொன்னாமே… இது என்ன இன்னைக்கு இப்படி?” முருகன் கேட்டான்.

“ஆமா முருகா… நெஞ்சுலே அப்படியே பளிங்குக் கணக்கா பதிஞ்சுப் போச்சே… என்ன விவரமா பேசினாக அன்னெக்கு…..

“மரம் இறைவன் நமக்களித்த வரம்!
உயிர்களுக்கு அதுதேன் பலம்!
கரம் கொடுத்துக் காபோம்!
மரம் நடுவோம்! வளம் சேர்ப்போம்
நலம் காணுவோம்!
தானாக மரங்கள் அழியலாமே தவிர
நாமாக அவைகளை வெட்ட வேண்டாம்!
நட்டக் கன்றுகளைப் பேணுவோம்!
இருக்கும் மரங்களைக் காப்போம்.”

“­இப்போ இதென்ன மாறிட்டாக…? எப்படி ஊர் பொது மரத்தை… நமக்கெல்லாம் நண்பனாய்… தாத்தாவுக்கு வாழ்க்கையாகிப் போன மரத்தை வெட்டுவதா? ஏ லட்சுமி… என்ர ஆத்தா சொல்லி இருக்கி… இந்த மரம் ரெண்டு தடவை பல உயிர்களைக் காப்பாத்தி இருக்காம்” முருகன் பேசினான்.

பிறகு சிறிது நேரம் சிந்தனை வசப்பட்டவராய் இருவரும் ஏதோ யோசித்து அவர்களுக்குள் பேசிக் கொண்டவர்களாய் ஒரு முடிவுக்கு வந்தார்கள்!

“தாத்தா விசனப்படாதீக… நாங்க இருக்கோம்ல… காலையிலே வாரோம்” என்று கிளம்ப எத்தனிக்கும் நேரம்.

டக் டக் ட கட ட கட …
வண்டிச் சத்தம் அருகில் கேட்டது!
வீராச்சாமித் தாத்தா “வரதராசன் தன்னோட பச்சப்புள்ளெயை அழைக்சு வாரான் போல…” நினைத்தார்!

ஆனால் வண்டியில் இருந்து அனந்தராமன் மகள் தன் கடைசிப் பையனோடு ­ தங்கராசு இறங்கி வந்தாள்.வீராச்சாமித் தாத்தாவைப் பார்த்து “தாத்தா சொகமா இருக்கியளா…” என்று கேட்டு தங்கராசு… தாத்தாவைக் கும்பிட்டுக்கலே” என்றாள்!

யாரரு …. அட அனந்தராமன் மவளா… “தாயி சொகமாயிருக்கியா… இவன் உன்ர மகனா… அட என் மக்கா… வாலே நானும் உன்ர தாத்தாதான்லே” என்ற வீராச்சாமித் தாத்தாவை அணைத்துக் கொண்ட, தங்கராசு சொன்னான்.

“தாத்தா… என்ர ஆத்தா எல்லாத்தையும் உம்மைப் பத்தி இந்த வேப்ப மரத்தைப் பத்தி சொல்லி இருக்கு. ஆமா தாத்தா என்ர ஆத்தாவை அந்த அமாவாசை சாமி எந்த கிளையிலே வச்சு இருந்தாக”
எப்படிக் கேட்டான் இந்த்ச் சிறுவன்!

அமாவாசை சாமி!

உயிரைக் காப்பாற்றுகிற யாரும் சாமிதானே?

புளங்காகித்ம் அடைந்த வீராச்சாமி தாத்தா சொன்னார், “அந்தக் கெளையில்லாம் இப்போ வளர்ந்துட்டு இல்லா… இருட்டிலே தெரியாதுலா… காலையில” பாதியிலே நிறுத்திட்டார் கவலையுடன்!

“நாளெக்கு காலையிலே இந்த மரம் இங்ஙென இருக்காது! அதென் தாத்தா விசனமா இருக்காக” லட்சுமி பொரிந்து தள்ளினாள்!

“நெசமாலுமா தாத்தா… யாரும் இதை வெட்டப்போறாகளா?” அனந்தராமன் மகள் பதற்றத்துடன் கேட்டாள்!

“ஆமாளா… அந்திக்கு சொல்லிப் போனான் உன்ர அப்பன்… எம். எல். ஏவுக்குப் புதுவீடு கட்ட இந்த மரத்தை வெட்டி உருப்படியாக்கப் போறானாம்! அது செர்ரி, இந்த இருட்டிலே ஒத்தையிலே நீ எங்ஙென வந்தவ!” என்று கேட்டார் வீராச்சாமித் தாத்தா!

அதே பரிவு!
அதே பாசம்!
அதே கனிவு!

எப்படித் தனக்கு தொல்லை கொடுப்பவனின் மகளிடம் கூட இப்படி இவரால் பேச முடிகிறது?

“நாளென்ன புது வீட்டுக்கு ‘வானம் பார்க்கப் போறோம்’ அதேன் அய்யன்கிட்டே சொல்லிப்போட வந்தேன்” என்று தான் கொண்டு வந்த தூக்குச் சட்டியில் இரூந்து கொழுக்கட்டைகளைத் தாத்தாவிற்கு ஒரு இலையில் வைத்துக் கொடுத்தாள்!

“தாத்தா இன்னெக்கு முச்சூட விரதம்! சாப்பிட மாட்டாக.”ஒரு வார்த்தை உங்க அய்யன்கிட்டச் சொல்லிப் போடுங்க இந்த மரத்தை காவல் தெய்வத்டித வெட்ட வேணாமிட்டு… நீங்க சொன்ன தட்டாம கேப்பாக இல்லே… உங்க உசிரைக் காப்பாத்தின மரமில்லா இது…” முருகன் மூச்சு விடாமல் பேசி முடித்தான்!

சொத்துத் தகராறில், தன்னுடைய ஒரே மகள் என்று கூட பார்க்காமல், அவள் புருஷனோடு சண்டையிட்டு வரத்து போக்கு அறவை ஒழித்து இருந்தான் அனந்தராமன். தங்கராசு பொறந்ததில் இருந்து இவன் மூஞ்சுக்கூட பார்க்கவில்லை. பாசம் தாங்காமல் புருஷனிடம் கஷ்டப்பட்டு அனுமதி வாங்கிக் கொண்டு ‘வானம் பார்க்கும்’ சடங்கைச் சாக்கு வைத்து இன்று வந்துள்ள இவளின் பேச்சை அனந்தராமன் எப்படி கேட்பான்?

தயக்கம் தெரிந்த அவளின் முகத்தின் குறிப்புக்களை உணர்ந்த வீராச்சாமித் தாத்தா, “போ… தாயீ, உன்ர அய்யன் ராசியாயிடுவான்! அந்த ஆக்கங்கெட்ட கூவைக்குப் பணந்தேன் பிரதானம்! நாடி ஒடுங்கி போகையிலேதேன் பந்தமும்,
சொந்தமும், பாசமும் நெனப்புக்கு வரும்!... தாயி… உடனே இருட்டிலே கௌம்பாதே… இருந்து விடியல்ல கௌம்பு…” சொல்லி முடித்தார்!

தங்கராசு அதற்குள் வேப்பமரத்தடியில் குவியலாய்க் கிடந்த பொருட்களில் இருந்த அந்த ஓலைப் பெட்டியை எடுத்துத் தன் தாய் அருகில் வந்தான்!

படையல் போட்டு இருப்பதையும், பட்டுப்புடவை சுற்றி இருப்பதையும் அப்போதுதான் நன்கு கவனித்த அனந்தராமன் மகள், “தாத்தா… இன்னெக்கு ஆத்தா வோட நெனவுநாளா… இன்னும் தெவசம் செய்தீகளா என்று கண்கள் பனிக்கக் கேட்டு, மரத்தடியில் விழுந்து வணங்கி, ஒரு நிமிடம் அப்படியே பழைய நினைவுகளில் மூழ்கி, அடிமரத்து மண் எடுத்துத் தங்கராசு நெற்றியில் பூசி, ஒரு முடிவிற்கு வந்தவளாய் கிளம்பினாள்!

ஒரு முறை ஆசை தீர அண்ணாந்து அந்தப் படர்ந்து அடர்ந்த வேப்பமரத்தைப் பார்க்கும்போது அமாவாசையுடன் தான் உட்கார்ந்த நாள் நினைவிற்கு வந்தது!

வழியில் தன் மகனிடம் நிறைய பேசிக் கொண்டும், நாளைக் காலையில் செய்ய வேண்டியதைப் பற்றியும் சொல்லிக்கொண்டே போனாள்!
வீராச்சாமி கொடுத்த கொழுக்கட்டைகளைத் தின்ன மனசில்லாம கனத்துப்போன நெஞ்சுடன், ஆனால் ஏதோ ஒரு தீர்க்கமான, முடிவோடு லட்சுமியும் முருகனும் கிளம்பிப் போனார்கள்!

காத்திருப்போம் தோழர்களே...
அன்புடன் அகன்

எழுதியவர் : அகன் (7-Jan-13, 10:36 pm)
பார்வை : 180

மேலே