தொடர்பறுந்து தொலைவதும் சுகமே...!

மேற்கு மலையினிலே
மேடையேற போகும் வழியில் ,
மிகையாய் தெரியும் வனப்புகளை ,
மிதமாய்க் கண்டுணர்தலும் பொலிவே!

குன்றுகளின் மேலேறி
குயில்களும் கும்மியடிக்க
இலக்கியங்கள் கொண்டாடும்
இனிய ஓசைகளின் எதிரொலிப்பில் ,

கண்களுக்குள்
கவிதைக்கு வித்தாகும்
காட்சிகள் பலவண்ணமாய் ,
கருத்தினோடு கைகுலுக்கும் !

அங்கே
அகவுகின்ற மயில்களின்
ஆர்ப்பரிக்கும் தோகைகளை ,
ஆரத்தழுவ தென்றல் துடித்திருக்கும் !

உயரேறத் தொடும்
உறைபனி விலக்கும் பொருட்டு ,
சிந்தனையானது நெருப்பு மூட்டிட
சிற்சில உளறல்களை சருகுகளாக்கும் !

பார்வை மங்கிய சூழல்
பாதைகளை திசை மாற்ற
பரவுகின்ற பசுமை திரவியமோ ,
பழக்கப்பட்டாற்போல் குறிப்புணர்த்தும் !

நடையடிகள்
நடன அசைவுகளாய்
சுற்றித் திரியும் வண்டுகளின்
சுருதிகள் குறையாத ரீங்காரத்தில் !

தொடத் துணிந்து
தோற்றுப்போன முகில்கள்
மேய்ந்திடும் நிகழ்வுகளுக்குள் ,
மேலோட்டமாய் நகர்கிறேன் நானும் !

உச்சியினின்றும்
உருண்டு வரும் கற்களோடு
தொடர்கின்ற ஓர் பயணத்தில் ,
தொடர்பறுந்து தொலைவதும் சுகமே !

எழுதியவர் : புலமி (8-Jan-13, 12:33 am)
பார்வை : 165

மேலே